நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்கிராப் டீலரின் மகன்!
ஸ்கிராப் டீலரான பிகாரியின் மகன் அர்விந்த் தனது அப்பாவை கௌரவப்படுத்தவேண்டும் என்கிற கனவுடன் அவரது விருப்பத்திற்கேற்ப மருத்துவர் ஆக தீர்மானித்து தொடர்ந்து ஒன்பது முறை முயன்று நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மருத்துவர் ஆகவேண்டும் என்கிற கனவு பல மாணவர்களுக்கு உண்டு. அதற்கான முதல் படி நுழைவுத்தேர்வு. மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சிபெற பல மாணவர்கள் போட்டி போட்டு கடுமையாக உழைக்கின்றனர்.
உத்திரப்பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது அர்விந்த் குமார் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார். இது இவரது ஒன்பதாவது முயற்சி. இந்த முறை அகில இந்திய அளவில் 11603-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். ஓபிசி பிரிவில் 4,392-வது ரேங்க் எடுத்துள்ளார்.
அர்விந்தின் அப்பா ஒரு ஸ்கிராப் டீலர். அவர் பெயர் பிகாரி. இந்தி மொழியில் பிகாரி என்றால் பிச்சைக்காரன் என்று அர்த்தம். இதனால் கிராம மக்கள் இவரது பெயரையும் தொழிலையும் கேலி செய்யும் வகையில் பிகாரியைத் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தார்கள். இதனால் தன் அப்பாவின் அவமானத்தைக் களைய மருத்துவர் ஆகவேண்டும் என்று தீர்மானித்தார் அர்விந்த்.
பிகாரி ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அர்விந்தின் அம்மா லலிதா தேவி பள்ளிக்குச் சென்றதில்லை. பிகாரிக்கு மூன்று குழந்தைகள். குழந்தைகளின் படிப்பிற்காக பிகாரி தனது கிராமத்திலிருந்து குஷிநகர் பகுதிக்கு மாற்றலானார்.
அர்விந்த் பத்தாம் வகுப்பில் 48.6 சதவீத மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தார். பன்னிரண்டாம் வகுப்பில் படிப்பில் சற்றே முன்னேற்றம் தென்பட்டது. 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். அந்த சமயத்தில்தான் அப்பாவின் கனவை நனவாக்கும் வகையில் மருத்துவர் ஆகவேண்டும் என்று தீர்மானித்தார்.
ஒன்பதாண்டு காலம் தொடர் முயற்சியிலும் தோல்வியிலும் கழிந்துள்ளது.
“ஒவ்வொரு முறையும் மதிப்பெண்ணில் முன்னேற்றம் இருந்தது. இதுவே என் இலக்கை எட்ட எனக்கு நம்பிக்கையளித்தது,” என்றார்.
மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறை மாறி நீட் தேர்வுக்கு ஆயத்தமாவதில் சிரமத்தை சந்தித்ததாக அர்விந்த் தெரிவிக்கிறார்.
வயது வரம்பு கடந்துவிடும் என்கிற பயத்தில் 2018ம் ஆண்டு கோட்டா பகுதியில் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இதற்கான செலவுகளை சமாளிக்க அர்விந்தின் அப்பா தினமும் 12 முதல் 15 மணி நேரம் வரை வேலை செய்துள்ளார்.
“என் மகன் அவரது இலக்கில் உறுதியாக இருந்தார். எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது,” என்று தன் மகனை நினைத்து பூரிக்கிறார் பிகாரி.
கோரக்பூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகவேண்டும் என்பதே அர்விந்தின் விருப்பமாக உள்ளது.
“எலும்பில் ஏற்படும் சிறு காயம்கூட அதிக வலியை உண்டாக்கும். சாலை விபத்துகள் அதிகரித்து வருவதால் மக்களுக்கு எலும்பு அறுவை சிகிச்சை நிபுணராக சேவையளிக்க விரும்புகிறேன்,” என்கிறார் அர்விந்த்.
தகவல் உதவி: என்டிடிவி | கட்டுரை: Think Change India