விவசாயிகளின் பிரச்சனைகளை வெளிக் கொண்டுவர எழுத்தாளர் ஆன விவசாயி!
”ஏழை மக்களுக்கு உதவி நாட்டை மேம்படுத்தவேண்டும் என்பதே என் விருப்பம்,” என்கிறார் விவசாயியான பாண்டுரங் தனாஜி.
இவர் சோலாபூரின் பர்ஷி தாலுக்காவின் சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோரான சீதாபாய் மற்றும் தனாஜி கல்வியறிவில்லாதவர்கள். எனவே தங்களது மகனுக்கு முறையான கல்வி கிடைக்கவேண்டும் என விரும்பி அவரை படிக்கவைத்தனர். பாண்டுரங் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு பி.எட் படித்தார்.
துணை பேராசிரியராக சிறிது காலம் பணியாற்றிய பிறகு பாண்டுரங் நிலத்தில் பணிபுரிய தீர்மானித்தார். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயம் பாதிக்கப்படுவதால் பல விவசாயிகள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை வெளியுலகிற்கு எடுத்துரைக்கவேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தார்.
விவசாயிகள் சந்திக்கும் இன்னல்களை வெளியுளகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதத்தில் ஆங்கிலத்தில் ஒரு கதையை எழுதினார். அதிகம் பேரை சென்றடையவேண்டும் என்பதற்காகவே இதை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். குழந்தைகள் ஆரம்பப்பள்ளி முதலே ஆங்கிலம் கற்கவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார். அவரது புத்தகத்தின் பெயர் ‘Kingdom in Dream : The Prime Minister’.
”ஒரு விஷயத்தை ஒருவர் மீது திணிப்பதால் பலன் கிடைக்காது. உத்வேகம் மட்டுமே பலனளிக்கும்,” என்கிறார் பாண்டுரங்.
விவசாயியாகவே வாழ்ந்து அவர்களது துன்பங்களை நேரடியாக எதிர்கொண்ட காரணத்தால் இந்தப் பகுதியில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதையும் அதற்கு அரசியலில் ஈடுபடவேண்டும் என்பதையும் உணர்ந்தார். அப்துல் கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15ம் தேதியை வாசிப்பு தினமாக மஹாராஷ்டிரா அறிவித்த நிலையில் பாண்டுரங் தனது புத்தகத்தை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.
புத்தகத்தின் கதைச்சுருக்கம்
Patridge India வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் கதையில் ஒரு இளைஞன் தனது அப்பா, அம்மா, சகோதரி ஆகியோருடன் வசித்து வருகிறார். ஒரு வழக்கமான காலை நேரத்தில் குளித்து தயாராகி வெளியே செல்கிறார். நண்பர் கொடுக்கும் பேப்பரை வாங்கி படிக்கிறார். அதில் நதிகள் இணைப்புத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் முறைகேடு நடந்திருப்பது குறித்த செய்தியை படித்து அதிர்ந்துபோகிறார். இதுவே சமூக நலனில் பங்களிக்க அரசியலில் இறங்கவேண்டும் என்று சிந்தனையைத் தூண்டுகிறது.
ஒரு முறை அவருக்கு ஒரு கனவு தோன்றுகிறது. அதில் அவர் சமூக சீர்திருத்தவாதி ஒருவரின் மகனாக இருக்கிறார். அரசியலின் மோசமான நிலையை மாற்றி நாட்டின் பிரதமராகி சக்தி வாய்ந்த நாடாக மாற்ற விரும்புகிறார். இளம் தலைவர்களை உருவாக்க விரும்புகிறார். மிகப்பெரிய அரசியல் சக்தியை எதிர்த்து போராடி தேர்தலில் வெற்றியும் பெறுகிறார்.
பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நேரம் அவரது அம்மா அவரது தூக்கத்தைக் கலைத்து எழுப்புகிறார். அவர் கண் விழித்து பார்க்கும்போது அருகில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மக்கள் முணுமுணுக்கும் ஒலி கேட்கிறது. கனவுகள்கூட ஏழைகள் வசம் இல்லை என நினைத்தவாறே குடத்தில் தண்ணீர் எடுத்துவர தனது சைக்கிளை மிதிக்கிறார். அத்துடன் கதை முடிகிறது...
பாண்டுரங் ‘White Money’ என்கிற அவரது இரண்டாவது நாவலின் கையெழுத்துப் பிரதியை தயாராக வைத்துள்ளார். அத்துடன் இவரது சில நாடகங்களும் கவிதை ஒன்றும் வெளியாக உள்ளது.
கட்டுரை: Think Change India