அன்று விவசாயி மகன்... இன்று சிவில் நீதிபதி; 23 வயதிலேயே சாதனை படைத்த பாலமுருகன்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் பலரும் குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கடந்தும் கல்வியிலும், அரசுத் தேர்வுகளிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் பலரும் குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கடந்தும் கல்வியிலும், அரசு தேர்வுகளிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர்.
சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணான ஸ்ரீபதி, பிரசவித்த மறுநாளே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதி பதவிக்கு தேர்வாகி அசத்தியிருந்தார்.
பல்வேறு தடைகளை கடந்து 23 வயதிலேயே சாதனைப் படைத்த ஸ்ரீபதியைப் போலவே, 23 வயதான பாலமுருகனும் தற்போது சிவில் நீதிபதியாக தேர்வாகி பலரது கவனத்தையும் பெற்றுள்ளார்.
யார் இந்த பாலமுருகன்?
திருச்சி மாவட்டம் குண்டூர் பஞ்சாயத்திற்குட்பட்ட அயன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாமுண்டி - விஜயா தம்பதிக்கு பிரதீப், பாலமுருகன், பிரியங்கா என 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.விவசாய கூலித்தொழிலாளர்களான தாய், தந்தைக்கு இரண்டாவது மகனாக பிறந்த பாலமுருகன், செம்பட்டு ஆபட் மார்சல் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தார்.
திருச்சி ஜங்ஷன் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர், 2017ம் ஆண்டு காஜாமலையில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். 2020ம் ஆண்டு சட்டப்படிப்பில் பட்டம்பெற்ற பாலமுருகன், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, சுமார் 6 மாதங்களுக்கு ஜூனியர் வழக்கறிஞரக பயிற்சி செய்துள்ளார்.
வழக்கறிஞராக பயிற்சி செய்து வந்தாலும் பாலமுருகனுக்கு நீதிபதியாக வேண்டும் என்ற கனவு இருந்து வந்துள்ளது. எனவே, ஜூனியராக பயிற்சி செய்து கொண்டே, 2023ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சிவில் நீதிபதி தேர்வை எழுதினார்.
இளம் வயது சிவில் நீதிபதி:
தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு தேர்வினை அண்மையில் நடத்தியது. இதில், 6031 ஆண்களும், 6005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான முதல் நிலை தேர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி சென்னை, மதுரை , திருச்சி உள்ளிட்ட 9 இடங்களில் தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு கடந்த நவம்பரில் நடைபெற்றது.
இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று, மாநில அளவில் 33வது இடத்தை பிடித்த பாலமுருகன் தற்போது சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். திருச்சி மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண்ணுடன் இவர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்து வெற்றி பெற்றது குறித்து பாலமுருகன் கூறுகையில்,
“6ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எனக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் அந்த கனவை நிறைவேற்றியதும், நீதிபதி ஆக வேண்டும் என முயற்சித்தேன். இப்போது எனது கனவு நனவாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிபதியாக ஏழை, பணக்காரர் என பாரபட்சம் இல்லாமல் சம நீதியை வழங்க வேண்டும் என்பதே எனது லட்சியம்,” எனத் தெரிவித்துள்ளார்.
அசுரன் படத்தில் சொல்லப்படுவது போல் கல்வியை மட்டும் யாராலும் பறிக்க முடியாது. அது எப்போதுமே தனி மரியாதையைப் பெற்றுக்கொடுக்கும் என நிரூபித்துள்ள பாலமுருகனுக்கு சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
‘23 வயதில் உரிமையியல் நீதிபதி ஆகும் முதல் பழங்குடியின பெண்’ - தடைகளை தகர்த்த ஸ்ரீபதி!