‘23 வயதில் உரிமையியல் நீதிபதி ஆகும் முதல் பழங்குடியின பெண்’ - தடைகளை தகர்த்த ஸ்ரீபதி!
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஸ்ரீபதி, முதல் முறையாக நீதிபதி ஆகும் பழங்குடியின பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஸ்ரீபதி, முதல் முறையாக நீதிபதியான பழங்குடியின பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத மலை கிராமத்தில் இருந்து படித்து, சாதனை படைத்துள்ள ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஸ்ரீபதி?
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடுத்துள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. இவரை படிக்க வைக்க சொந்த தந்தையே தடையாக இருந்ததால், இவரது தாயார் பள்ளி பருவத்திலேயே ஸ்ரீபதியை தனது சொந்த ஊரான புலியூருக்கு அழைத்து வந்துள்ளார். அங்குள்ள பள்ளியில் சேர்த்து மகளை படிக்க வைத்துள்ளார்.
ஏலகிரி மலையில் பள்ளிப்படிப்பை முடித்த ஸ்ரீபதி, B.A.,B.L., சட்டப்படிப்பை முடித்துள்ளார்.
தற்போது ஸ்ரீபதிக்கு 23 வயதாகிறது, தாயின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து முயன்று வந்த ஸ்ரீபதி, இன்று ’பழங்குடி இனத்தின் முதல் பெண் நீதிபதி’ என்ற பெருமை பெற்றுள்ளார்.
ஆம், கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் பங்கேற்றுள்ளார். அதில் வெற்றி பெற்ற ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
தோள் கொடுத்த கணவர்:
வழக்கமாக பெண்கள் திருமணத்திற்கு பிறகு படிக்கவே நிறைய போராட வேண்டியிருக்கும். ஆனால். ஸ்ரீபதிக்கு திருமணத்திற்கு பிறகு தான் இரட்டை ஊக்குவிப்பு கிடைத்துள்ளது. தாய்க்கு பிறகு ஸ்ரீபதியின் கணவரான வெங்கட்ராமனும் அவரது நீதிபதி கனவிற்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் அளித்துள்ளார்.
இதில் மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தேர்வுக்கு தயாராகி வந்த காலக்கட்டத்திலே ஸ்ரீபதி கர்ப்பம் தரித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவரது பிரசவ தேதியும், நீதிபதி தேர்வுக்கான தேதியும் ஒரே நாளில் அமைந்துள்ளது.
இதுபோன்ற தருணங்களில் குடும்பத்தினர் தாய் மற்றும் சேயின் நலனைக் கருத்தில் கொண்டு படிப்பை பாதியில் கைவிடவோ அல்லது பின்னர் தொடரவோ வலியுறுத்துவது உண்டு. ஆனால், கணவர் மற்றும் தாயார் கொடுத்த உற்சாகத்தால் தேர்வை எழுத ஸ்ரீபதி முடிவெடுத்தார்.
அதன்படி, குழந்தை பிறந்து 2 நாட்களிலேயே தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் பங்கேற்றார். மனைவியை எப்படியாவது தேர்வெழுத வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த வெங்கட்ராமன், ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து கார் ஒன்றை பாதுகாப்பு முறையில் சொகுசு காராக மாற்றி சென்னைக்கு அழைத்து சென்று தேர்வு எழுத வைத்துள்ளார்.
மேள, தாளத்துடன் வரவேற்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலமாக, அடுத்த 6 மாதங்களுக்கு பயிற்சிக்குச் செல்ல உள்ளார். அதற்கு முன்னதாக சொந்த ஊருக்கு வந்த ஸ்ரீபதிக்கு மலைகிராம மக்கள் தடபுடலான வரவேற்பு கொடுத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
மாலை அணிவித்து, மேள தாளம் முழுங்க ஊர்வலமாக அழைத்து வந்து ஸ்ரீபதிக்கு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத மலை கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், தனது விடாமுயற்சி மற்றும் கல்வியால் தனிப்பெரும் சாதனை படைத்துள்ள ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
”பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பதிவிட்டுள்ள ஸ்ரீபதியின் இந்த வெற்றி தமிழ்நாட்டின் சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
“சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!. “நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும் பெண்களைக் கற்கவைப் பீரே!, இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன்னேற வேண்டும் வைய மேலே!” என பதிவிட்டுள்ளார்.
சாலை வசதி கூட இல்லாத மலைகிராமத்தில் படித்து, நீதிபதியாக அமர்ந்துள்ள ஸ்ரீபதிக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கிரிக்கெட் ஸ்டார் ஆக மின்னும் கேரளப் பழங்குடியினப் பெண் - யார் இந்த மின்னு மணி?