Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கிரீன் தீபாவளி கொண்டாடுவது எப்படி? பட்டாசுகள் முதல் ஆர்கானிக் ரங்கோலி வரை; சூழலை பாதிக்காத சில வழிகள்!

இந்த தீபாவளியில், நீங்கள் சுற்றுசூழலுக்கு உகந்த கொண்டாட்டத்தை மேற்கொள்ள விரும்பினால், அதை நீங்கள் தொடங்குவதற்கு சில வழிகள்.

கிரீன் தீபாவளி கொண்டாடுவது எப்படி? பட்டாசுகள் முதல் ஆர்கானிக் ரங்கோலி வரை; சூழலை பாதிக்காத சில வழிகள்!

Tuesday October 29, 2024 , 3 min Read

புத்தம்புது ஆடைகள், படபட பட்டாசு, குண்டு குண்டு குலோப் ஜாமூன், என மகிழ்வை அள்ளி தரும் தீபாவளி பண்டிகைக்கான கவுன்டவுன் ஆரம்பமாகிவிட்டது.

மகிழ்ச்சி பொங்கும் நன்நாளை மக்கள் வீடுகளில் விளக்கேற்றி, பல பலகாரங்களை செய்து அக்கம்பக்கத்தோர், உற்றார் உறவினர்களுக்கு பகிர்ந்து உண்டு கொண்டாட்டமாக கழிக்கின்றனர். இருப்பினும், பண்டிகை நிறைவு பெறும்போது, சுற்றுசூழலில் ஒரு டன் கழிவுகளை விட்டு செல்கின்றது.

இந்த தீபாவளியில், நீங்கள் சுற்றுசூழலுக்கு உகந்த கொண்டாட்டத்தை மேற்கொள்ள விரும்பினால், அதை நீங்கள் தொடங்குவதற்கு சிலவழிகள் இங்கே...

diwali

ஈகோ-ப்ரெண்ட்லி விளக்குகள்...

தீப ஒளி திருநாள் என்பது விளக்குகளின் திருவிழா. அன்று ஊரெங்கும் உள்ள வீடுகளில் ஒளி விளக்குகள் மிளிரும். இந்த ஆண்டு, சந்தையில் ஏராளமாக கிடைக்கும் மக்கும் தன்மையற்ற செயற்கையான விளக்குகளை பயன்படுத்துவதை ஏன் கைவிடக்கூடாது?

எண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தும் மண் விளக்குகள் நிலையானவை மட்டுமல்ல, அவை கைவினை கலைஞர்களால் வடிவமைக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் இந்த விளக்குகளை வாங்கி பயன்படுத்துவதால், ​​உள்ளூர் கைவினை கலைஞர்களையும் அவர்களின் கலைகளையும் ஆதரிப்பீர்கள்.

விளக்குகள் தவிர, தூய சோயா மற்றும் தேன் மெழுகு போன்ற இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட பாரஃபின் இல்லாத நச்சுத் தன்மையற்ற மெழுகுவர்த்திகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம். அவை சிறந்த வாசனையுடன் இருப்பது மட்டுமின்றி, நீண்ட காலம் நீடிக்கும்.

diyas

ஆரோக்கியமான பரிசளியுங்கள்...

பண்டிகை காலம் என்பது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பரிசுகளை பரிமாறிக்கொள்ளும் நேரம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவை உங்கள் அன்பின் அடையாளங்கள் என்பதால், இயற்கை மற்றும் கரிமப் பொருட்களால் ஆன ஒன்றை பரிசளிப்பதை யோசித்து பாருங்கள்?

காமெடோஜெனிக் அல்லாத சோப்புகள் மற்றும் கிரீம்கள், அழகான நோட்புக்குகள், கைவினைத் தேநீர், மசாலா பெட்டிகள் மற்றும் கைவினைப்பொருட்களை பரிசளிப்பது, அவர்கள் மீதான உங்களது அக்கறையின் வெளிபாடாக அமையும்.

பரிசுப்பொருட்களை கொடுக்கும்போது, ​​பரிசுகளை மடிக்க வண்ணமயமான பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய கவர்கள், துணி பைகள் அல்லது வண்ணமயமான துணி ஸ்கிராப்பைத் தேர்வு செய்யவும்.

தீபாவளி விருந்துக்கு மட்கும் தட்டுகள்...

பண்டிகை என்றாலே உணவுகளுக்கு பிரதான இடமுண்டு. சொந்தங்கள் ஒன்றுக்கூடி கலகல பேச்சுகளுடன் உண்ணும்போது விருந்தின் சுவைக்கூடும். ஆனால், விருந்தினர்களின் பட்டியல் நீளும் போது உணவினைப் பரிமாற, ​​பாத்திரங்கள் மற்றும் கட்லரிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன.

நேரத்தை மிச்சப்படுத்த, பலர் ஒருமுறை பயன்படுத்தப்படும் மண்ணுக்கு தீங்குவிளைவிக்கும் மக்காத தட்டுகள் மற்றும் ஸ்பூன்களை மாற்றுத்தீர்வாக தேர்ந்தெடுக்கிறார்கள். நாளின் முடிவில் பாத்திரங்களை குவிவதை தவிர்க்க எண்ணுபவர்கள், மக்கும் தட்டுகள் அல்லது வாழை இலைகளுக்கு மாறலாம்.

பிளாஸ்டிக் வகைகளுக்குப் பதிலாக மூங்கில் அல்லது களிமண்ணால் தயாரிக்கப்பட்ட தட்டுகள் மற்றும் குவளைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். உள்ளூர் விற்பனையாளர்களை ஆதரிக்க, உங்கள் வீட்டின் அருகிலுள்ள சந்தையிலே அவற்றை வாங்கலாம்.

bamboo plates

கவரும் ரங்கோலியிலும் கவனமாக இருங்கள்...

வீட்டு வாசலில் வண்ணமயமான ஒரு ரங்கோலி இல்லாமல் தீபாவளி எப்படி முடியும்? இருப்பினும், நீங்கள் பயன்படுத்தும் வண்ணங்களில் கவனம் செலுத்துங்கள். சந்தையில் பல ரங்கோலிப் பொடிகள் செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.

நச்சுத்தன்மையற்ற மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத கரிம வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவும். வண்ணமயமான வாசனைமிகு பூக்கள் எந்த இடத்தையும் உடனடியாக பிரகாசமாக்கும். ரோஜா மற்றும் சாமந்திப்பூவின் மயக்கும் வாசனை காற்றில் பரவி, உங்கள் உணர்வுகளை அமைதிப்படுத்தும் பூக்களை கொண்டு ரங்கோலி கோலம் போட்டு பாருங்கள்!

ரங்கோலியில் வண்ணங்களை சேர்க்க, குங்குமம், மஞ்சள் மற்றும் காபித்தூள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தனித்துவமான ரங்கோலியை உருவாக்கவும். இவை வீட்டில் வெறும் பசுமையுணர்வை மட்டும் பரப்புவதில்லை. கொண்டாட்டங்களுக்கு பின்னர் அவற்றை உரமாக்குவதன் மூலம் அவற்றை எளிதாக அகற்றலாம்.

அதே போல், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தோரணங்களுக்குப் பதிலாக துணி அலங்காரங்கள் மற்றும் வண்ணமயமான புடவைகள் மற்றும் துப்பட்டாக்களை பயன்படுத்தலாம்.

கிரீன் பட்டாசுகள்

தீபாவளியின் முடிவில் சுற்றுசூழலை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்குவது பட்டாசுகள் தான். படபடவென வெடிக்கும் பட்டாசுகள் எந்தளவிற்கு ஆனந்தத்தை அள்ளித் தருகிறதோ அந்த அளவிற்கு காற்றை மாசுப்படுத்தி விடுகின்றன. பண்டிகையின் போது எதிர்பார்க்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் மாசுப்பாட்டைக் குறைக்க குறிப்பிட்ட மணிநேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு வலியுறுத்துகிறது.

அரசு அறிவித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, பசுமையான மாற்றுகளைத் தேர்வு செய்யவும். கிரீன் பட்டாசுகளில் பேரியம் உப்புகள், ஆன்டிமனி, லித்தியம், பாதரசம், ஆர்சனிக், ஈயம் மற்றும் ஸ்ட்ரோண்டியம் குரோமேட் ஆகியவற்றின் கலவைகள் இல்லை. அவை பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் அலுமினியத்தால் தயாரிக்கப்படுகின்றன, அவை சீனபட்டாசு வகைகளை விட குறைவான மாசுபாட்டை ஏற்டுத்தும் என்று கூறப்படுகிறது.

என்னதான், கிரீன் பட்டாசுகளை பயன்படுத்தினாலும், அவையும் காற்றில் மாசுவை ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்தில்லை. முடிந்தளவிற்கு பட்டாசுகளை குறைவாக வெடித்து மகிழ்வதை பழக்கமாக்கி கொள்ளலாம்.

இவற்றில் இந்த தீபாவளிக்கு நீங்கள் எவற்றையெல்லாம் முயற்சி செய்ய போகிறீர்கள்? நாங்கள் பட்டியலிட்டதைத் தவிர வேறு ஏதேனும் யோசனை இருந்தால், அவற்றையும் பிறருக்கு பகிர்ந்து சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள். அனைவருக்கும் தீபதிருநாள் நல்வாழ்த்துகள்!