‘என் தந்தை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்’- சிவில் சர்வீஸ்-ல் முதலிடம் பெற்ற விவசாயி மகன்!
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 29 வயதான பிரதீப் சிங், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் 4வது முறையாக முயற்சித்து, முதலிடம் பெற்று இந்திய வருவாய் துறைக்காக தேர்வாகி இருக்கிறார்.
வேலை பார்த்துக் கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், தனது கவனம் சிதறிய போதெல்லாம் விவசாயியான தந்தை தன்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தியதாக, இந்த தேர்வில் முதலிடம் பெற்றுள்ள ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் சிங் உற்சாகமாக கூறியுள்ளார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு பணிகளுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வில், 2019ம் ஆண்டு தேர்வில், ஹரியானாவின் சோனாபேட் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதான பிரதீப் சிங், இந்திய வருவாய் துறைக்காக தேர்வாகியுள்ளார்.

பிரதீப் சிங் தன் குடும்பத்தினருடன். பட உதவி: The New Indian Express
பாரிதாபாத்தில் உள்ள சுங்க இலாக்கா, மறைமுக வரிகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு தேசிய அகாடமியில் பயிற்சி பெற்று வந்த பிரதீப் சிங், 829 தேர்வாளர்களில் முதலிடம் பெற்றுள்ளார்.
நான்காவது முறையாக தேர்வெழுதி வெற்று பெற்றுள்ளவர், தனது கனவு நினைவாகியுள்ளது என்று உற்சாகமாகக் கூறுகிறார். ஏழை மக்களுக்கு சேவை ஆற்ற விரும்புவதால், இந்திய நிர்வாக சேவைகளில் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற கவனமும், கடின உழைப்பும் அவசியம் என்று கூறியவர்,
“கனவு நினைவானது போல இருக்கிறது. இது இனிமையான ஆச்சர்யம். நான் எப்போதுமே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விரும்பினேன். சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்,” என்றும் தெரிவித்தார்.
அவரது தந்தை சுக்பீர் சிங் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகள் நலனுக்கு பாடுபடுவது தன் மனதுக்கு நெருக்கமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
"யூ.பி.எஸ்.சி தேர்வில் இடைவிடா முயற்சியும், கவனமும் முக்கியம். வேலை பார்த்துக்கொண்டே தேர்வுக்கு தயாரானதால், ஒரு கட்டத்தில் என்னால் தேர்வுக்கு படிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை. என் தந்தை தான் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்” என்றும் பிரதீப் சிங் உற்சாகமாக கூறுகிறார்.
“இன்று என் தந்தை மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். என் மொத்த குடும்பமும் மகிழ்கிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
சிங்கின் தாய் இல்லத்தலைவியாக இருக்கிறார். அவரது சகோதரர், காப்பீடு துறையில் பணியாற்றுகிறார். சகோதரி கணிதத்தில் முதுகலை பட்டம் படிக்கிறார்.

படம்; ஏ.என்.ஐ
“எந்த நெருக்கடியும் இல்லாமல், கனவை அடைய முயற்சிக்குமாறு சகோதரியை ஊக்குவிப்பதாகவும் அவர் கூறுகிறார். தனக்கு எப்போதுமே குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவு இருந்ததாகவும் கூறுகிறார்.
வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் போது, சவால்கள் அதிகமாகலாம் என கூறும் பிரதீப் சிங், இலக்கை அடையும் உறுதி தேவை என்கிறார்.
“எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் சோர்வடையலாம் என்றாலும் அப்போது தான் உறுதி தேவை என்று ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகும் விருப்பம் கொண்டவர்களுக்கு தனது ஆலோசனையாக கூறுகிறார்.
பிரதீப் சிங்கிற்கு, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செய்தி: பிடிஐ