5 வயதில் பறிபோன பார்வை; ‘கல்வி' ஒளியால் யூபிஎஸ்சி வென்ற பூர்ண சுந்தரி!
மும்முறை தொடர் தோல்விக்கு பின் சிவில்சர்வீஸ் தேர்வில் வென்று காட்டியுள்ளார் பார்வையற்ற பெண்ணான பூர்ணசுந்தரி.
‘முயன்றால் முடியாதது என்று எதுவுமல்ல' என்பதற்கு எடுத்துக்காட்டாய் பலர் திகழ்ந்து, அவர்களது வாழ்வு பலருக்கும் ஊக்கம் அளிக்கும் மருந்தாய் இருந்துள்ளது. அப்படியானவர்களுள் ஒருவராக நேற்றிலிருந்து நாடறியப்பட்டார் பூர்ணசுந்தரி. ஏனெனில், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக நேற்று அறிவிக்கப்பட்ட 829 பேரில் ஒருவரான பூர்ணசுந்தரி, பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண்!
நாட்டின் உயரிய பணியாக கருதப்படும் மத்திய அரசுத் துறைகளில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். , ஐ.எப்.எஸ், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கான தேர்வுகளை யூபிஎஸ்சி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூன்
மாதம் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு, அதாவது பிரிலிமினரி தேர்வு நடத்தப்பட்டது.
முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்காணல் ஆகிய 3 கட்டங்களைக் கொண்டது இந்த தேர்வு. பிரிலிமினரி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிரதான தேர்வை எழுதினர். மூன்றாம் கட்டத்தேர்வான நேர்காணல் தேர்விற்கு தேர்ச்சி பெற்றோரை அழைப்பதற்கு முன்னதாகவே கொரோனா பரவியதில், அப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், நேர்முகத் தேர்வுகள் கடந்த வாரம் நடத்தி முடிக்கப்பட்டு அதன் முடிவுகள் நேற்று(4.08.2020) வெளியாகியது. இறுதித்தேர்வில் 180 பேர் ஐஏஎஸ் பணியிடங்களுக்கும், 150 பேர் வெளியுறவுத் துறை பணியிடங்களுக்கும் 24 பேர் ஐபிஎஸ் பணியிடங்களுக்கும் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
தமிழகத்தில் இருந்து 44க்கும் மேற்பட்டோர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், தேசிய அளவில் 286வது இடத்தைபிடித்து தேர்வில் வெற்றி கண்டுள்ளார் பார்வையற்ற பூர்ணசுந்தரி.
மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் ஆவுடைதேவி தம்பதியினரின் மகள் பூர்ணசுந்தரி. 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை இழந்த அவர், தன்னம்பிக்கையை இழக்கவில்லை. தனது இருள் சூழ்ந்த வாழ்வை கல்வி எனும் ஒளியால் மிளிரச் செய்துள்ளார்.
அ, ஆ, இ... பயிலத் துவங்கிய பருவத்திலிருந்தே படிப்பில் கெட்டிக்காரி. 10ம்
வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்ணும், 12ம் வகுப்பில் 1092 மதிப்பெண்ணும் பெற்று, ஒவ்வொரு முறையும் தன்னை நிரூபித்துக் கொண்டே இருந்த பூர்ணசுந்தரியின் இலக்காகியது சிவில் சர்வீஸ் தேர்வு.
கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்ற பூர்ணசுந்தரி, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென முடிவெடுத்து போட்டித் தேர்வுகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
2016-ம் ஆண்டு முதல் டி.என்.பி.எஸ்.சி தேர்வு, வங்கித் தேர்வு, சிவில் சர்வீஸ் தேர்வு என 20க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். தோல்விகள் துரத்தினாலும் அஞ்சி ஓடாமல் தன்னம்பிக்கையுடன், போட்டித் தேர்வுகளை தொடர்ந்து எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு வங்கித் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் பணியில் சேர்ந்தார். வங்கியில் பணியாற்றினாலும் சிவில் சர்வீஸ் கனவவை விடவில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தொடர்ந்து படித்து வந்தார்.
ஏற்கனவே 3 முறை சிவில் சர்வீஸ் தேர்வில் தோல்வி அடைந்தநிலையில், 4வது முறையாக 2019-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். அதிகப்பட்ச நம்பிக்கையுடன் தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த பூர்ணசுந்தரிக்கு அவரது கனவு
நிறைவேறும் நாளாகியது நேற்று.
ஆம், தேசிய அளவில் 286வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்ற பூர்ணசுந்தரி பாராட்டுகளால் ஆனந்தத்தில் திளைத்துள்ளார்.
பார்வை மாற்றுத்திறனாளியாக இருந்துகொண்டு இந்த வெற்றியை அடைய பல சவால்களை சந்தித்தாக கூறும் பூர்ணசுந்தரி அவர்களது பெற்றோர்கள் அளித்த நம்பிக்கையாலும், தானும் கஷ்டப்பட்டதாலும் இந்த நிலையை அடைய முடிந்தது என்றுள்ளார்.
‘‘போட்டித் தேர்வுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பயின்றபோது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகமும் ஆதரவும் சிலர் செய்த உதவியும் என்னை வெற்றி பெற வைத்துள்ளது. சிறு வயதிலிருந்தே அம்மா வாசிக்க வாசிக்க அதை கேட்டு மனனம் செய்து கொள்வேன். அந்தவகையில், என் அம்மா என்னுடைய ஆசிரியர். குடியுரிமை ஆட்சிப் பணியில் அரசின் நலத்திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்குக் கொண்டு செல்லும் பாலமாக செயல்படுவேன். என்னைப் போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெறலாம்,'' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் பூர்ணசுந்தரி.
தனது பெற்றோர்கள் தன்னை ஒரு குறைபாடுள்ளவராக நினைத்து வளர்க்காததால், தனக்கும் அது எந்த வகையிலும் தான் ஒரு மாற்றுத்திறனாளி என்ற எண்ணமே வந்ததில்லை என்கிறார்.
குடியுருமை ஆட்சிப்பணியில் இணையவுள்ள பூர்ணசுந்தரி, அரசின் திட்டங்களை ஏழை மக்களுக்கு கொண்டு செல்ல தான் ஒரு பாலமாக இருக்கப்போவதாகவும் தெரிவிக்கிறார். அதே போல் மாற்றுட்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் நிர்வாக ரீதியாக பல முடிவுகளை எடுக்கவும் திட்டம் வைத்திருப்பதாக பூர்ணசுந்தரி கூறுகிறார்.
வாழ்த்துகளோடு பேரன்புகள் பூர்ணசுந்தரி...
கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ