ஒரே குடும்பத்தில் 5 சகோதரிகள் சாதனை: அரசுப் பணியில் இணைந்த ராஜஸ்தான் குடும்பம்!
விவசாயி தந்தையை பெருமைப்படுத்திய ஐந்து மகள்கள்!
ராஜஸ்தான் மாநில விவசாயி ஒருவரின் மூன்று மகள்கள் அம்மாநில அரசுப்பணியில் ஒரே நேரத்தில் தேர்வாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கர் பகுதியில் இந்த சாதனை நிகழ்வு நடந்திருக்கிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி சாதேவ் சஹாரன் 3 மகள்கள் தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு ராஜஸ்தான் மாநில அரசுப் பணி தேர்வாணைய தேர்வுகளில் கலந்துகொண்ட நிலையில் அந்த தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இந்த தேர்வில் கலந்துகொண்ட சாதேவ் சஹாரனின் மகள்கள் அன்ஷு, ரீது, சுமனா ஆகிய மூன்றும் வெற்றிபெற்றுள்ளனர். இந்த மூன்று பேரும் அரசுப்பணிக்கு தேர்வாகி இருப்பதன் மூலம் விவசாயி சாதேவ் சஹாரன் குடும்பத்தில் தற்போது ஐந்து பேர் அரசு அதிகாரிகளாக உள்ளனர். எப்படி என்கிறீர்களா?
சஹாரனுக்கு மொத்தம் ஐந்து மகள்கள். அதில், மூத்த மக்கள் ரோமா, 2010ம் ஆண்டு மாநில அரசுப்பணி தேர்வுகளில் வெற்றிபெற்று தற்போது, ஜுன்ஜுனு மாவட்டத்தில் சுஜன்கரில் தொகுதி மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
அந்த குடும்பத்தில் முதல்முறையாக அரசுப்பணிக்கு சென்றவர் இவர்தான். இவரை பின்பற்றி அடுத்து 2வது மகளான மஞ்சு என்பவரும் 2017ம் ஆண்டு அம்மாநில அரசுப் பணிக்கான தேர்வில் வெற்றிபெற்று தற்போது ஹனுமன்கரின் நோஹரில் உள்ள கூட்டுறவுத் துறையில் பணியாற்றி வருகிறார். இப்படி, விவசாயி சாதேவ் சஹாரனின் ஐந்து மகள்களும் தற்போது, ராஜஸ்தான் நிர்வாக சேவை (ஆர்ஏஎஸ்) அதிகாரிகளாக மாறியிருக்கின்றனர். இந்தத் தகவல் அப்பகுதியில் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது.
கொண்டாட காரணம், விவசாயி சாதேவ் சஹாரன் வீட்டின் நிலை தான். விவசாயி சஹாரன் 8ம் வகுப்பு தாண்டாதவர். இதேபோல் அவரின் மனைவி பள்ளிக்கூடம் சென்றதில்லை. அப்படி இருக்கையில் விவசாய பணிகளை மேற்கொண்டு தனது ஐந்து மகள்களையும் அரசுப்பணிக்கு செல்ல சஹாரன் ஊக்கமாக இருந்துள்ளார். இதனையடுத்து தான் அந்தக் குடும்பத்துக்கு தற்போது வாழ்த்து மழை குவிந்து வருகிறது. ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் உட்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இந்தக் குடும்பம் பற்றிய தகவலை இந்திய வன சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரி பர்வீன் கஸ்வான் முதன்முதலில் தனது டுவிட் மூலம் வெளிப்படுத்தினார். அவர் தனது பதிவில்,
“ஒரு நல்ல செய்தி. ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த அன்ஷு, ரீது, சுமன் ஆகிய மூன்று சகோதரிகள் ராஜஸ்தான் அரசுப்பணி தேர்வில் வென்றுள்ளனர். இந்த மூன்று பேரின் மூத்த சகோதரிகள் ரோமா, மஞ்சி ஏற்கெனவே மாநில அரசுப் பணியில் உள்ள நிலையில் தற்போது இந்த மூவரும் தங்களின் பெற்றோர்களை பெருமைப்பட வைத்துள்ளனர்," என்று பாராட்டி இருந்தார்.
தகவல் உதவி: ஹிந்துஸ்தால் டைம்ஸ் | தம்ழில்: மலையரசு