பால்காரர் மகள் டூ நீதிபதி: தடைகளை வென்றெடுத்த இளம் பெண்!
பால்காரரின் மகளான சோனல் நீதிபதியாகியிருக்கிறார்!
தன்னுடைய நிலை இப்படியாகிவிட்டதே என்று நினைத்து வருந்தாமல், அதனை மாற்ற நினைப்பவர்களே வெற்றியாளர்களாகச் சாதனை படைக்கின்றனர். உதராணமாக வறுமையான குடும்பத்தில் பிறந்துவிட்டோம் என்று எண்ணி கவலைப்படாமல், வறுமை வென்றெடுக்கும் முயற்சியிலும், தனது லட்சியக் கனவுகளை நோக்கி பயணப்படுபவர்களுக்கு காலம் உரிய அங்கீகாரத்தை தரும். அப்படித்தான் சோனல் சர்மாவுக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்தது.
பால்காரரின் மகளான அவர் இன்று நீதிபதி ஆகியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரைச் சேர்ந்தவர் சோனல் சர்மா. இவரது தந்தை மாடுகளிலிருந்து பாலை கறந்து விற்று அதில் வரும் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறார். 26 வயதான சோனல், தன் வாழ்நாள் முழுவதும் பசுமாடுகளுடனே படித்து வந்தார்.
வேலை செய்வது, படிப்பது என்பதே அவரின் அன்றாடக் கடமையாக இருந்தது. இந்த கடுமையான நிலையிலும், அவர் பி.ஏ, எல்.எல்.பி மற்றும் எல்.எல்.எம் பட்டப்படிப்புகளில் முதலிடம் பிடித்தார்.
பின்னர் 2018ல் ராஜஸ்தான் நீதித்துறை சேவை (ஆர்.ஜே.எஸ்) தேர்வில் தேர்ச்சி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன, ஆனால் சோனல் காத்திருப்பு பட்டியலில் இருந்தார், ஏனெனில் அவர் பொது கட் ஆப் பட்டியலில் ஒரு மதிப்பெண்ணைக் குறைவாக இருந்தத்தால், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.
பின்னர், காலம் அவருக்கான வழியை திறந்துவிட்டது. ஆம்! தேர்வு செய்யபட்ட சிலர் வராத காரணத்தால், காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் சிலரை வைத்து இடங்களை நிரம்புமாறு அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டது. ராஜஸ்தானில் உள்ள ஒரு அமர்வு நீதிமன்றத்தில் அவர் முதல் தர மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்படுவார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழ்மையான பின்னணியைக்கொண்டிருந்த சோனலால் தனது படிப்பிற்கு தேவையானவற்றை வாங்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். தனது கல்லூரி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக அவர் நூலகத்திற்கு சைக்கிளில் சென்று, அங்கேயே நீண்ட நேரம் படித்துக்கொண்டிருப்பார்.
மாடுகளை கவனித்துக்கொண்டே, காலி கேன்களில் மீது புத்தகங்களை வைத்துக்கொண்டு அவர் படித்துக்கொண்டிருப்பார். எப்படியோ அவரது பெற்றோர் லோன் வாங்கி அவரது கல்விச்செலவை சரிசெய்தனர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு சோனல் அளித்த பேட்டியில்,
”பெரும்பாலான நேரங்களில், என் செருப்பு மாட்டு சாணம் ஒட்டி காணப்படும். நான் பள்ளியில் படிக்கும் போது, நான் ஒரு பால்காரர் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று என் வகுப்பு தோழர்களிடம் சொல்ல வெட்கப்பட்டேன். ஆனால் இப்போது, என் பெற்றோரை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி - indiatimes | தொகுப்பு: மலையரசு