தேனியில் இருந்து ஒரு ஃபேஷன் டிசைனர்: சாதிக்கும் வேட்கையில் திரையுலகம் வரை பிரபலமான சுரேகா!
தேனி கம்பம் பகுதியைச் சேர்ந்த சுரேகா, சிறிய ஊரிலிருந்து சினிமாத் துறை வரை டிசைனரான வளர்ச்சியடைந்துள்ளார் சுரேகா சக்தி.
சாதிக்கவேண்டும் என்கிற ஆர்வம் இருப்பவர்களுக்கு வயது, படிப்பு, நிதி நிலை, வசிக்கும் இடம் போன்ற எதுவுமே தடையாக இருப்பதில்லை. எந்தவிதச் சூழலையும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை அவர்களுக்குள் இருக்கும் ஆர்வம் கண்டறிந்துவிடும்.
டிசைனிங் பிரிவில் ஆர்வம் கொண்ட சுரேகாவும் அப்படித்தான். நகர்புறத்திற்குக் குடிபெயர்ந்து டிசைனிங் வேலையில் ஈடுபட விரும்பினாலும் குடும்பச் சூழல் காரணமாக கம்பம் பகுதியிலேயே வசிக்கவேண்டியிருந்தது. இதற்காக தன்னுடைய ஆர்வத்தை சமரசம் செய்துகொள்ளாமல் விடாமுயற்சியால் வெற்றிப் படிகளில் ஏறிக்கொண்டே இருக்கிறார் சுரேகா.
தேனி கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேகா, விவேகானந்தா கல்லூரியில் டெக்ஸ்டைல் டிசைனிங் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்கிறார். சென்னை Pearl Academy கல்வி நிறுவனத்தில் முதுகலைப் படிப்பை முடித்திருக்கிறார். டிசைனிங் மீது இவருக்கு அளவு கடந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்.
“எனக்கு டான்ஸ் ஆடறது, அழகா டிரஸ் பண்ணிக்கறது இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். எனக்கு டார்க் ஸ்கின் டோன். ஸ்கூல்ல புரோக்ராம் நடக்கும்போதெல்லாம் என்னை முன்வரிசையில் நிக்கவிடமாட்டாங்க. நிகழ்ச்சி மேடைகள்ல மட்டுமில்லை, வாழ்க்கையிலயும் முன்னுக்கு வந்து ஏதாவது பெரிசா சாதிக்கணும் அப்படிங்கற வெறி அப்பவே எனக்கு வந்துது,” என்கிறார் சுரேகா.
கலர், டிராயிங் போன்றவற்றில் அதிக ஆர்வமுள்ள சுரேகா சிறு வயதிலேயே துணியைக் கையாளத் தொடங்கிவிட்டார். பொம்மைகளுக்கு அழகழகாக டிரஸ் தயாரித்துப் போட்டு அழகு பார்ப்பார்.
வெறும் துணி அழகான ஆடையாக வடிவம் பெறுவது போன்றே ஏதாவது ஒரு துறையில் சாதிக்கவேண்டும் என்று இவருக்குள் இருந்த ஆர்வம் ஒரு கட்டத்தில் டிசைனிங் துறையில் சாதிக்கவேண்டும் என்று வடிவம் பெற்றுள்ளது.
ஆரம்பக்கட்டம்
சுரேகா, பட்டப்படிப்பை முடித்ததும் முதலில் ஒரு நிறுவனத்தில் டிசைனராக சேர்ந்தார். ஓராண்டு வரை வேலை பார்த்தார். அந்த சமயத்தில் அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
“என் கணவரும் கம்பத்தை சேர்ந்தவருதான். விவசாயக் குடும்பம். படிச்சுட்டு வேலை பார்த்துட்டிருந்தாரு. அவரோட அப்பா இறந்ததுக்கப்புறம் நிலத்தை கவனிச்சுக்க வேண்டிய பொறுப்பு வந்துது. அவருக்கும் விவசாயத்துல ஆர்வம் இருந்ததால கம்பம் வந்து செட்டில் ஆயிட்டாரு,” என்றார் சுரேகா.
டிசைனிங் படித்துவிட்டு பெரிதாக சாதனை படைக்கவேண்டும் என்று நினைத்தவருக்கு இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நகர்புறத்தில் குடியேறினால் வேலை செய்யலாம் அல்லது தொழில் தொடங்கலாம். கிராமத்திலேயே இருந்துவிட்டால் கேரியர் பாழாகிவிடும் என்கிற பயம் ஏற்பட்டது.
குடும்பச் சூழல் காரணமாக பயத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். திருமணம் முடிந்தது. சுரேகா கருவுற்றார். பெரிதாக சாதிக்கவேண்டும் என்கிற வேட்கை கொண்டவருக்கு அடுத்து என்ன என்கிற தெளிவு கிடைக்காதது கவலையளித்துள்ளது.
பெண் குழந்தை பிறந்தால் விதவிதமாக ஆடை டிசைன் செய்து அழகு பார்க்கலாம் என யோசித்தார். ஏதாவது செய்யவேண்டும் என்று எப்போதும் கணவரிடம் புலம்பியிருக்கிறார். சுரேகாவிற்கு டிசைனிங் மீதிருக்கும் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவரது கணவர், வீட்டிலிருந்தே செயல்பட ஊக்குவித்துள்ளார். ஆனால், வீட்டிலிருந்து எப்படி தொழில் செய்யலாம் என்கிற தெளிவு பிறக்கவில்லை.
தொழில் தொடங்கிய தருணம்
இறக்குமதி செய்யப்பட்ட துணிகளை ரீசெல்லிங் செய்யலாம் என யோசித்துள்ளார். ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய யோசனை இது. அந்த சமயத்தில் சீன ஆடை வகைகள் பிரபலமாக ஆரம்பித்திருந்தன.
“என்கூட டிசைனிங் படிச்சவங்ககிட்ட இதைப்பத்தி பேசினேன். இறக்குமதி செய்யப்பட்ட துணி எங்க கிடைக்கும்னு விசாரிச்சேன். பொழுதுபோக்கா இப்படித்தான் இந்த வேலையை ஆரம்பிச்சேன். நாமளே டிசைனிங் முடிச்சிருக்கறப்ப, வேற ஒருத்தர் டிசைன் பண்ணி தைச்சு வெச்ச துணியை விக்கறதுல என்ன இருக்கு? இதுல நம்ம திறமையை வெளிப்படுத்தற மாதிரி என்ன இருக்கு? ஒருகட்டத்துல இந்த மாதிரி கேள்விகள் எனக்குள்ள எழுந்துது,” என்கிறார்.
அந்த சமயத்தில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையைத் தொட்டிலில் போடும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு நடந்தது.
“நானும் குழந்தையும் ஒரே கலர்ல, ஒரே மாதிரி டிரஸ் போட்டா நல்லாயிருக்கும்னு யோசிச்சேன்.”
Mom & Me என்கிற காம்போ அதிகம் டிரெண்ட் ஆகாத காலகட்டம் அது. ஃப்ரெஷ்ஷான ஐடியவாக அவருக்குத் தோன்றியது. சுரேகா மஞ்சள் நிறத்தில் டிரஸ் போட முடிவு செய்திருந்ததால் குழந்தைக்கும் மஞ்சள் நிறத்தில் டிரஸ் தயாரித்தார். சுரேகாவும் அவரது குழந்தையும் அடுத்து இன்னொரு காம்போ செட் டிரஸ் போட்டார்கள். இது பலரையும் கவர்ந்துள்ளது.
முதலில் உள்ளூரிலேயே துணி வாங்கி வந்து மாம்&மீ காம்போ ஆடைகளை டிசைன் செய்து 4-5 பேருக்கு விற்பனை செய்து பார்க்க எண்ணினார். துணி வாங்கி உறவினர் ஒருவரிடமே கொடுத்துத் தைத்துள்ளார்.
ஆன்லைனில் ‘Ping Pong' ’பிங் பாங்’ என்கிற பெயருடன் சிறியளவில் தொடங்கியுள்ளார். 4-5 செட் ஆடைகளை மட்டும் பதிவிட்டுள்ளார். நண்பர்களுக்குப் பகிர்ந்துள்ளார்.
“உடனே எல்லாமே சேல் ஆகிடுச்சு. அதுமட்டுமில்லை, ஒரே வாரத்தில் 20-25 செட் டிரஸ்ஸுக்கு ஆர்டரும் கிடைச்சுது. அதுக்கடுத்த வாரம் 15 செட் மொத்த ஆர்டர் கிடைச்சுது. சைஸ் கொடுத்துட்டாங்க. அதை ரெடி பண்ணி கொடுத்தேன். முதல் தடவையா 5,000 ரூபாய் என் கையில லாபமா கிடைச்சுது. அதை வெச்சு காட்டன் துணி திரும்பவும் வாங்கினேன். எங்க வீட்டுக்கு கீழயே ஒரு சின்ன ஸ்டோர் ரூம் மாதிரி இருந்துது. அதுல வெச்சுதான் முதல்ல ஆரம்பிச்சேன்,” என்று தொழிலின் தொடக்கப்புள்ளியை விவரித்தார்.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்
வீட்டின் கீழே உள்ள சிறிய இடத்திலிருந்து தொடங்கியவர் ஒருகட்டத்தில் அந்த இடம் முழுவதையும் கடையாக மாற்றியுள்ளார். அருகிலிருப்பவர்கள் இங்கு வந்து நேரடியாக வாங்கிச் செல்கின்றனர். 'தியா'ஸ் பிங் பாங்’ Diya’s Ping Pong என்கிற பெயருடன் ஆன்லைனிலும் விற்பனை நடந்து வருகிறது.
கம்பம் பகுதியிலிருந்து 5 கி.மீட்டர் தொலைவில் இருந்தபோதும் நேரடியாக வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் செல்கின்றனர். இப்படிப்பட்ட கிராமத்தில் டிசைனர் ஆடைகளுக்கான தேவை இருக்குமா என்கிற கேள்வியை அடியோடு தூக்கியெறிந்துவிடும் அளவிற்கு விற்பனை இருந்து வருகிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை தையல் வேலைகள் அவுட்சோர்ஸ் செய்தவர் இன்று மாற்றுத்திறனாளிப் பெண்கள், தனியாக குழந்தைகளை வளர்த்து வரும் தாய்மார்கள் போன்றோருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளார். துணி மீட்டர் 30 ரூபாய் என்கிற விலையில் தொடங்கி 1,500 ரூபாய் வரை உள்ள துணி வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
ஆடை தயாரிப்பிற்கான துணி வகைகளை சூரத், ஹைதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து வாங்குகிறார்.
மாம்&மீ காம்போ ஆடை வகைகள் பிரபலமானதைத் தொடர்ந்து ஃபேமிலி காம்போ அறிமுகப்படுத்தினார். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமான ஆடை வகைகளை வழங்கி வருகிறார்.
பிரைடல் ஆர்டர்கள் அதிகம் வருகிறது என்கிறார் சுரேகா. மேக் ஓவர் சேவையையும் வழங்கி வருகிறார். மணமகளுக்குத் தேவையான முழுமையான சேவை வழங்கப்படுகிறது. துணியைக் காட்டிலும் ஆடை வகைகளே அதிகம் விற்பனை செய்யப்படுவதாக சுரேகா தெரிவிக்கிறார். வெளிநாடுகளுக்கு அதிகம் அனுப்பி வைக்கிறார்.
“சிக்கல் இல்லாம தொழில் செய்ய முடியறதுக்கு ஒரே காரணம் என் ஹஸ்பண்டோட சப்போர்ட்தான். ஷிப்மெண்ட், கூரியர், ஆர்டர் அனுப்பறது இப்படி எல்லா வேலையிலயும் எனக்கு உதவி செய்வாரு. எந்த ஒரு சின்னப் பிரச்சனையும் வந்துடக்கூடாதுன்னு எல்லாத்தையும் பார்த்து கவனமா ஹேண்டில் பண்ணுவாரு. என்னோட பில்லர் அவர்தான். என் பொண்ணு தியாவுக்கு ஏழு வயசாகப் போகுது. பண்டிகை நேரத்துல நான் பிசியா இருக்கறப்ப என்னை எதிர்பார்த்து அடம் பிடிக்கமாட்டா. என்னோட ஹஸ்பண்ட், குழந்தை ரெண்டு பேரும்தான் என்னோட வளர்ச்சிக்குக் காரணம்,” என்று பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார் சுரேகா.
சவால்கள்
கிராமத்தில் இருந்துகொண்டு சாதிக்க முடியுமா? என்கிற கேள்வியை எதிர்கொள்வதே மிகப்பெரிய சவாலாக இருந்தது.
குடும்பத்தினரால் பண உதவி செய்யமுடியாத சூழலில் ஆரம்பத்தில் தன் கையில் கிடைத்த 5 ஆயிரம் ரூபாயைக் கொண்டே படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளார். தொழிலின் ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு சவால்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
முதலீடு மற்றும் வருவாய்
வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ப டிசைன் செய்து கொடுப்பதுடன் மொத்த விற்பனையும் செய்து வரும் சுரேகா, ஜிஎஸ்டி பதிவு செய்து முறையாக வணிகம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கிறார்.
இந்த வணிகத்திற்காக 15 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். மாத வருவாய் 1.5 லட்ச ரூபாய் ஈட்டப்படுகிறது என்கிறார்.
'தியாஸ் பிங் பாங்’ என்கிற பெயரை அடையாளமாகக் கொண்டு மக்களை சென்றடைந்துள்ள சுரேகா வரும் நாட்களில் 'தியாஸ்’ என்கிற பிராண்டாக செயல்படத் திட்டமிட்டுள்ளார். அதற்காக பணிகள் நடந்து வருவதாகக் குறிப்பிடுகிறார்.
ஆன்லைனில் டிசைனிங்கை பிரபலப்படுத்தியதன் மூலம் 4-5 திரைப்படங்களுக்கு ட்ரெஸ் டிசைனிங் வாய்ப்பு கிடைத்துள்ளது.
“ஒரு படம் ரிலீஸ் ஆகிடுச்சு. ரெண்டு படங்களோட பிராசஸ் நடந்துகிட்டிருக்கு. இன்னும் ரெண்டு படம் சைன் பண்ணியிருக்கேன்,” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் சுரேகா.