மகன் தேர்வு எழுத 105 கி.மீ தூரம் சைக்கிளில் ஓட்டிச் சென்ற அப்பா!
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷோப்ராம் தனது மகன் பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதவேண்டும் என்பதற்காக 105 கி.மீட்டர் சைக்கிளில் கூட்டிச் சென்றுள்ளார்.
கொரோனா வைரஸுடன் சேர்ந்து உலகம் முழுவதும் பல உந்துலளிக்கும் சம்பவங்களும் நெகிழ்ச்சியடையச் செய்யும் சம்பவங்களும் பரவி வருகின்றன. உலக மக்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் இந்த இக்கட்டான சூழலை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
அத்தியாசியப் பொருட்கள் இன்றி சிலர் தவிக்கும் நிலையில் சிலர் குழந்தைகளின் படிப்பு தடைபடாமல் இருக்க பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் மத்தியப்பிரதேசத்தில் மாணவர் ஒருவர் தேர்வெழுத அவரது அப்பா 105 கி.மீட்டர் சைக்கிளில் கூட்டிச் சென்றுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷோப்ராம் படிக்காதவர். தனது மகனை நன்கு படிக்கவைக்க விரும்பினார். இவரது மகன் பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதவிருந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி முற்றிலும் முடங்கியுள்ளதால் தனது மகனை சைக்கிளில் உட்கார வைத்து 105 கி.மீட்டர் ஓட்டிச் சென்றுள்ளார். ஷோப்ராம் பிடிஐ-இடம் கூறும்போது,
“கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை நான் தவறவிட்டிருந்தால் என் மகனின் படிப்பு ஓராண்டு வீணாகியிருக்கும். எனவே சைக்கிளில் தேர்வெழுத கூட்டிச் செல்லத் தீர்மானித்தேன்,” என்றார்.
அவர் மேலும் கூறும்போது,
“எங்களிடம் பணம் இல்லை. மோட்டார் சைக்கிளும் இல்லை. உதவிக்கு யாரும் இல்லை. ஆனால் என் மகனின் நலனுக்காக சைக்கிளில் தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷோப்ராமின் மகன் தர் பகுதியில் தேர்வெழுதவேண்டியிருந்தது. இதற்காக இரண்டு, மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டப் பொருட்களை எடுத்துக்கொண்டு இருவரும் சைக்கிளில் கிளம்பியுள்ளனர்.
“நாங்கள் திங்கட்கிழமை கிளம்பினோம். இரவில் மானவர் நகரில் சில மணி நேரம் செலவிட்டு செவ்வாய்கிழமை காலை தேர்வு தொடங்குவதற்கு முன்பு தர் பகுதியை அடைந்தோம்,” என்றார் ஷோப்ராம்.
ஷோப்ராமின் மகன் ஆஷிஷ் கூறும்போது,
“நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். தேர்வு எழுதுவதற்காக என் அப்பாவுடன் சைக்கிளில் இங்கு வந்தேன்,” என்றார்.
தகவல் மற்றும் பட உதவி: இந்தியா டைம்ஸ்