10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 95% பெற்ற தமிழக பழங்குடியின மாணவி!
கேரள மாநிலப் பள்ளியில் தங்கிப் படிக்கும் ஸ்ரீதேவி, 150 கிமி பயணித்து பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
மார்ச் மாதம் பள்ளிக்கூடங்களில் தேர்வுகள் நடந்து கொண்டிருந்த வேளையில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள் பாதியிலேயே மூடப்பட்டன. இதனால் பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது பொது தேர்வுகளும் நின்று போனது. இது மாணவர்களிடையே குழப்பத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது.
பொதுத் தேர்வுக்கு தீவிரமாக தயாராகிக் கொண்டிருந்த மாணவர்கள் பலருக்கு தேர்வு இல்லாதது ஏமாற்றத்தை தந்தது. இதில் ஸ்ரீதேவி என்ற மாணவியின் கடும் உழைப்பும், விடாமுயற்சியும் வீணாகாமல் அதற்கு இன்று அவருக்கு நல்ல முடிவு கிடைத்துள்ளது/
திருப்பூர் மாவட்டம் ஆனமலை புலிகள் பாதுகாப்புப் பகுதி அருகில் உள்ள உடுமலைப்பெட்டில் உள்ள பூச்சுக்கோட்டம்பாரை என்ற பழங்குடி இனமக்கள் வாழும் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, கேரள மாநிலம் சாலக்குடியில் ஒரு பள்ளியில் படித்து வந்தார்.
“ஒன்றாம் வகுப்பு முதல் நான் கேரளாவில் போர்டிங் பள்ளியில் தங்கிப் படிக்கிறேன். அங்கு என் ஆசிரியர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். அதனால் என்னால் 10ம் வகுப்பில் ஏ ப்ளஸ் அதாவது 95 சதவீதம் பெறமுடிந்தது,” என்கிறார் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவியின் வீடு அமைந்துள்ள பழங்குடியினப் பகுதி மிகவும் பின் தங்கிய நிலையில், சாலைவசதியின்றி, மின்சாரமின்றி இருக்கிறது. அந்த பகுதியில் இருந்து பள்ளிக்குச் சென்ற ஒருசில மாணவர்களில் ஸ்ரீதேவியும் ஒருவர்.
தேர்வுகள் ரத்தானதால், அண்மையில் கேரள அரசு, 10ம் தேர்வை நடத்த முடிவெடுத்து அறிவித்தது. ஸ்ரீதேவியின் அப்பா செல்லமுத்து, தன் மகளை தனது இருசக்கர வண்டியில் 80 கிமி தூரம் பயணித்து தமிழக-கேரள எல்லையில் இறக்கிவிட்டார். அங்கிருந்து கேரள அரசு ஏற்பாடு செய்து கொடுத்த சிறப்பு பஸ் மூலம் பயணித்து 10ம் வகுப்பு தேர்வு எழுத தேர்வு மையத்துக்குச் சென்றார் ஸ்ரீதேவி.
செல்லமுத்துவின் மூத்த மகளின் கல்வி ஆறாம் வகுப்போடு நின்று போனது. இதே நிலை ஸ்ரீதேவிக்கு வரக்கூடாது என தன்னால் முடிந்த முயற்சியை எடுத்துள்ளார். ஸ்ரீதேவியின் இந்த மதிப்பெண்களைப் பாராட்டிய வனத்துறை துணை கள இயக்குனர் ஆரோக்கிய ஜேவியர்,
“ஸ்ரீதேவி லேப்டாப் வேண்டுமென கேட்டிருந்தார். அவருக்கு விரைவில் லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்குவேன். வனத்துறை ஸ்ரீதேவியின் உயர் கல்விக்குத் தேவையான அனைத்து உதவியை செய்யும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
11ம் வகுப்பை தொடர்ந்து படிக்க விரும்பும் ஸ்ரீதேவி, வருங்காலத்தில் டாக்டராக வேண்டும் என விருப்பப்படுகிறார்.
கட்டுரை: Think Change India