மகனுக்காக புத்தகம் எழுதத் தொடங்கி, அதையே தொழிலாக்கி தனித்துவ படைப்புகளில் சிறக்கும் தந்தை!
தன்னுடைய மகனுக்காக செயல்பாடு மற்றும் கதை புத்தகம் உருவாக்கிய சிவகாசியைச் சேர்ந்த வினோத்குமார், அது பிரபலமடைந்ததை அடுத்து தனித்துவமான விதத்தில் சிறார் புத்தகங்களை வேக் அப் புக்ஸ் எனும் பப்ளிகேஷன் மூலம் வெளியிட்டு வெற்றிகரமான தொழிலாக நடத்தி வருகிறார்.
21ம் நூற்றாண்டின் பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு உணவு, ஆரோக்கியம், விளையாட்டுப் பொருட்கள், கல்வி என்று அனைத்துமே சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.
வளரும் தலைமுறை படைப்பாற்றல் திறன் மிகுந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோரில் வினோத்குமாரும் விதிவிலக்கல்ல. சந்தையில் கிடைக்கும் புத்தகங்களில் நிறைவு இல்லை என்பதால் மகனுக்காக தானே புத்தகத்தை உருவாக்கத் தொடங்கி அதையே தொழில்முனைவாக எப்படி மாற்றினார் என்பதை ’WakeUp Books' 'வேக் அப் புக்ஸ்' பப்ளிகேஷன் நிறுவனர் வினோத் குமார் யுவர் ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
என்னுடைய சொந்த ஊர் சிவகாசி. ஆனால், அப்பா ராணுவத்தில் கேப்டனாக இருந்ததால் பெரும்பாலும் வளர்ந்தது எல்லாமே வடஇந்தியாவில் தான். எம்எஸ்சி Bio informatics முடித்துவிட்டு சென்னையில் நிறுவனம் ஒன்றில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றினேன்.
"நடுத்தர வர்க்க குடும்ப மனநிலையோடே படிப்பு, படித்து முடித்தவுடன் வேலை என்றே என்னை வளர்த்தனர். எனினும் சுயமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. கோவிட் பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் சிவகாசியிலேயே வசிக்க நேர்ந்த போது, என்னுடைய ஆசையை பூர்த்தி செய்ய ஏதேனும் செய்யலாம் என்ற விருப்பம் மேலோங்கியது.
புத்தகம் வாசித்தல் என்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். காலங்கள் கடந்து வரலாற்றில் நம்முடைய பெயர் எப்போதுமே புத்தகங்களாக நிலைத்து இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.
என்னுடைய ஒரு வயது மகனுக்கு பயனுள்ள விஷயங்களை கற்றுத்தர விரும்பி அவனுக்கு ஏற்ற புத்தகங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். குழந்தைகளின் கேள்வி கேட்கும் சிந்தனையை முடக்கக் கூடாது என்பது என்னுடைய எண்ணம். அதே சமயம், நற்பண்புகளையும் வளர்க்க வேண்டும் என்கிற பொருளடக்கத்தில் நான் எழுதிய முதல் புத்தகத்திற்கு உறவினர்கள், நண்பர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது.
எனது சொந்த பயன்பாட்டிற்காக உருவாக்கிய புத்தகத்தை மற்றவர்கள் விற்பனைக்கு கேட்டனர். சிறிது காலம் கழித்து என்னுடைய மகனுக்காக செயல்பாடு புத்தகத்தை எழுதினேன். பார்க்கும் புத்தகங்கள் அனைத்தையுமே அவன் என்னுடைய புத்தகம் என்று சொல்லுவான் அதனால், இரண்டாவது புத்தகத்தை 'This is my book' என்று வெளியிட்டேன்.
"இந்த புத்தகத்திற்கும் எனக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து அதிக வரவேற்பு கிடைத்தது. இப்படியாக என்னுடைய இரண்டு புத்தகங்களும் விற்பனையாவதை பார்த்து நல்ல புத்தகத்திற்கு மார்க்கெட் இருக்கிறது, என்பதை புரிந்து கொண்டு இது தான் எனக்கான தொழில்முனைவு என்று ஒயிட் காலர் வேலையை விட்டு விட்டு புத்தகம் எழுதுவதில் முழுமனதோடு செயல்படத் தொடங்கினேன்,” என்கிறார் வினோத்.
அடுத்ததாக என்ன புத்தகம் வெளியிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது குழந்தைகளுக்கு என்னென்ன வகைகளிலான புத்தகங்கள் இருக்கிறது என்று பெற்றோர் என்னிடம் கேட்கத் தொடங்கினர். கலரிங் புத்தகம், கதை புத்தகம் என்று அவர்களின் தேவைப் பட்டியல் அதிகரித்ததால், ஒவ்வொரு தலைப்பிலும் ஆராய்ச்சி செய்து, தரவுகளைப் பெற்று, தகவல்களைத் திரட்டி புத்தகங்களை உருவாக்கலாம் என்று முடிவு செய்தேன்.
ஒவ்வொரு புத்தகத்தையும் ஒரு குழந்தை போல பார்த்து பார்த்து எழுதினேன், கலரிங் புத்தகத்தையும் கூட தனித்துவமானதாக உருவாக்க வேண்டும் என்று புதிய திட்டத்தில் உருவாக்கினேன். தமிழ்நாட்டின் சிறப்புகளைப் பற்றி குழந்தைகளிடம் கேட்ட போது அதிகபட்சம் 10க்கு மேல் அவர்களால் சொல்ல முடியவில்லை. அதனால்,
"அதனை நன்கு மனதில் பதிய வைக்கும் விதத்தில் 24 பக்கத்தில் தமிழகத்தின் சிறப்புகளை வண்ணம் தீட்டி மகிழும் வடிவத்தில் வழங்கினேன். அதன் சிறப்புகளும் அதே பக்கத்தில் கொடுத்திருந்தேன். 2000 பிரதிகளும் 2 மாதத்திலேயே விற்றுத் தீர்ந்தது எனக்கு மேலும் ஊக்கத்தைத் தந்தது என்று வேக் அப் புக்ஸ் வேகமெடுத்து வளரத் தொடங்கியதை," விவரிக்கிறார்.
புத்தகங்கள் விற்கிறது என்பதற்காக ஏனோ தானோவென்று பதிப்பித்து வெளியிட எனக்கு விருப்பமில்லை, அதன் உள்ளடக்கம் தனித்துவமானதாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் நான் உறுதியாக இருந்தேன். நான் எழுதிய புத்தகங்கள் அனைத்திற்குமான தகவல்களை குறைந்தபட்சம் 6 மாதங்களாவது செலவிட்டு ஆராய்ந்து நல்ல கருத்துகளை மட்டுமே தேர்ந்தெடுத்து புத்தக வடிவில் கொண்டு வந்தேன்.
கதை புத்தகம், அறிவியல் சார்ந்து ஒரு புத்தகம் என்று அடுத்தடுத்து புத்தகங்களை எழுதி வெளியிட்டேன். புத்தகத்திற்கான கருத்து இருக்கிறது, எப்படி வெளியிடுவது என்ற திட்டம் இருக்கிறது, ஆனால் அதற்கான முதலீடு இல்லை. குழந்தைகளுக்கான புத்தகத்தை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து அச்சிட்டு பதிப்பிற்கு கொண்டு வருவதற்கு ரூ.50,000 முதல் ரூ. 60,000 வரை செலவு செய்ய வேண்டி இருந்தது.
இதனிடையே, கொரோனா காலத்தில் வெளிநாட்டு புத்தகங்கள் இந்தியாவில் குறைவான விலையில் வாங்குவது என்பது அதிக அளவில் இருந்தது. இந்த வகை புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கி பயன்படுத்தும் பெற்றோர், உள்ளூரில் கிடைக்கும் புத்தகங்களும் அதே தரத்தில் தனித்துவமான கருத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
பள்ளியில் கற்கும் விஷயங்களைத் தாண்டி கூடுதலாக குழந்தைகள் அறிந்து கொள்வதற்காக வாங்கும் புத்தகங்கள் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். எனவே, அந்தத் தேவையை பூர்த்தி செய்தால் மட்டும் தான் நான் உருவாக்கும் புத்தகத்திற்கான விற்பனை அதிகம் இருக்கும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
”அதனால், ஒரே சமயத்தில் பல புத்தகங்களை வெளியிட முடியாத நிலையில் ஒவ்வொரு புத்தகத்தையும் வெளியிட்டு அதன் விற்பனையில் கிடைக்கும் வருமானத்தை வைத்து அடுத்த புத்தகம் பதிப்பிற்கான பணிகளைச் செய்வது என்று செயல்படத் தொடங்கினேன்,” என்று கூறுகிறார் வினோத்.
எந்த புத்தகம் உருவாக்கினாலும் அதன் கருத்தாக்கம் குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கிறதா, அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனரா என்பதை உறுதி படுத்திக் கொண்டேன்.
ஒவ்வொரு புத்தகம் உருவாக்குவதற்கும் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடங்கி 1 வருடம் ஆகி விடும். புத்தகத்திற்கான உள்ளடக்கம் உருவான உடனேயே அதற்கு ஏற்ப ஒரு ஓவியரை அணுகி சுவாரஸ்யமான விதத்தில் கதைக்கு ஏற்ப ஓவியம் வரைய ஒப்பந்தம் செய்துவிடுவேன். இப்படியாக, 2 ஆண்டுகளில் Numbers, science fiction, GK உள்பட 12 genreகளில் சுமார் 50 தலைப்புகளில் புத்தகங்களை உருவாக்கி இருக்கிறேன்.
Flash cards-இல் தொடங்கி 1 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கான புத்தகங்கள் என படிக்க படிக்க ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருக்கும். ஓராண்டின் உழைப்பில் உருவாக்கப்பட்ட ராமாயணம் புத்தகத்தை கடந்த அக்டோபரில் வெளியிட்ட போது சுமார் 1500 பிரதிகளும் உடனடியாக விற்றுத் தீர்ந்தது.
பெரும்பாலான புத்தகங்கள் ஆங்கில மொழியிலேயே இருந்தது பல பெற்றோர் தமிழில் புத்தகங்கள் வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். இத்தனை பதிப்பகங்கள் இருந்தும் குழந்தைகளுக்கு படைப்பாற்றல் மிக்க தமிழ் புத்தகங்கள் இல்லையா என்பது ஆச்சரியமாக இருந்தது. இதனையடுத்து,
“உயிர் எழுத்துகளை மையப்படுத்தி ’அ முதல் ஃ’ வரை ஒவ்வொரு எழுத்திற்கும் 5 வார்த்தைகள் வீதம் “உயிரும் தமிழும்” என்ற புத்தகத்தை வெளியிட்டோம். அதையும் board book வடிவத்தில் குழந்தைகள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் தரத்தில் கொண்டு வந்தோம்.”
குழந்தைகளுக்கு கட்டுப்பாடில்லா அறிவாற்றல் பெற வேண்டும் சிறு வயதில் அவர்கள் படிக்கும் விஷயம் பசுமரத்தாணி போல காலங்கள் கடந்தும் பதிந்திருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. உயிர் எழுத்துகளைத் தொடர்ந்து மெய் எழுத்துக்கள், ஆத்திச்சூடிக்கு உயிர் வரிசை மற்றும் தமிழ்க் கடவுள் முருகன் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்களை ஒன்று திரட்டி அவருக்கு வேல் எப்படி வந்தது, மயில் ஏன் அவருடைய வாகனமானது என்ற விவரங்களை 24 பக்க விவரங்களை 24 பக்க போர்டு புத்தகமாக வெளிக் கொண்டு வந்திருக்கிறேன்.
சுமார் 3ஆயிரம் பேர் இந்தத் தமிழ் புத்தகங்களை வாங்கிப் பயன்படுத்தி இருக்கின்றனர். ஒருவர் கூட என்னை பாராட்டாமல் இல்லை என்று தன்னுடைய உழைப்பிற்கான அங்கீகாரத்தை விவரிக்கிறார், வினோத்.
விளம்பரமில்லாமல் உருவான வாடிக்கையாளர்கள்
இதில் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் இதுவரையில் நான் என்னுடைய புத்தகங்களுக்கு எந்த ஒரு விளம்பரமும் செய்ததில்லை. இப்போதைக்கு product development மட்டுமே நோக்கமாக வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சுமார் 25 தலைப்புகளில் புத்தகங்களை உருவாக்கக்குவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 2 மாதங்களில் முழுவதுமாக மார்க்கெட்டிங் பணிகளில் ஈடுபட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்.
”ஒரு லட்சம் பெற்றோரை சந்தித்தால் அவர்களில் 80 சதவிகிதம் பேரை என்னுடைய புத்தகங்களை வாங்க வைத்து விட முடியும் என்று உறுதியாகக் கூறுகிறார் இவர். ரூ.60ல் தொடங்கி ரூ. 500 வரையிலான விலையடக்கத்தில் புத்தகங்கள் என்னிடம் உள்ளது.”
என்னைத் தொடர்ந்து பின்பற்றுபவர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ஒரு புத்தகத்தின் Cover போட்ட உடனேயே சுமார் 1500 புத்தகங்கள் முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. அந்தக் கட்டணத்தை வைத்து புத்தக பதிப்பிற்கான வேலையைத் தொடங்கி விடுவேன்.
இவை தவிர வாட்ஸ் அப்’பில் தொடர்பு கொண்டும் எங்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கிக் கொள்கின்றனர். கருத்து திருட்டு என்பது புத்தக பதிப்புத் துறையில் அதிகம் நடப்பதால் நானும் என்னுடைய மனைவி மற்றும் இணை நிறுவனர் சுந்தர மகாலட்சுமி சேர்ந்து புத்தகங்களின் உள்ளடக்கத்தை உருவாக்கி வருகின்றோம். அந்தக் கருத்தை professional content writerகள் மற்றும் ஓவியர்களிடம் கொடுத்து புத்தகத்தை பதிப்பிக்கிறோம். இது தவிர சிறு எழுத்தாளர்களுக்கு self publish செய்து கொடுக்கும் வேலைகளையும் செய்து வருகிறோம். இதனால் எங்களுக்கு இந்தத் துறையின் மீதான புரிதல் மற்றும் அனுபவமும் அதிகரித்து இதில் நிச்சயமாக ஜெயிக்கலாம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.
விளம்பரம் செய்யாமல், வாடிக்கையாளரை நேரடியாக சென்று அணுகாமலே பெற்றோர் நேரடியாக என்னைத் தொடர்பு கொண்டு புத்தகங்களை வாங்கியதில் இரண்டு ஆண்டுகளில் ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டி இருக்கிறோம்.
எதிர்காலத்தில் யாரும் அணுகாத தலைப்புகளில் creative புத்தகங்களை உருவாக்க வேண்டும், புத்தகம் பதிப்பது தொடர்பான அனுபவம் இல்லாத கதாசிரியர்களுக்கு குறைந்த விலையில் அவர்களின் கதைகளை புத்தகங்களாக அச்சடித்துத் தருவதையும் பெரிய அளவில் செய்து கொடுக்க திட்டமிட்டிருக்கிறோம்.
படிப்பு எனக்கு பிடித்த விஷயம் அந்தத் துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவை நிறைவேற்ற பெற்றோர் தயங்கிய போதும் மனைவியின் ஒத்துழைப்பால் அது சாத்தியமாகி இருக்கிறது. வரலாறு எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட், நான் மறைந்த பிறகும் என்னுடைய புத்தகம் நான் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றாக இருக்கும் அந்த திருப்திக்காகவே நான் இந்தத் துறையில் தடம் பதித்தேன்.
“ஒரு புத்தகத்தை படிப்பது உணர்வுப் பூர்வமாகவும் உறவு ரீதியாகவும் குடும்பத்தினருடன் இணைப்பை ஏற்படுத்துகிறது என்பது என்னுடைய நம்பிக்கை. என்னுடைய புத்தககங்களை பிள்ளைகள் படிக்கிறார்கள் என்பதே எனக்கு ஆத்ம திருப்தியை கொடுக்கிறது,” என்று நெகிழ்கிறார் வினோத்குமார்.