கணக்குப் பாடத்தை கண்டு அலறிய மகளுக்காக கணித ஆப் உருவாக்கிய தாய்!
கணிதப் பாடம் என்றாலே அறண்டு போகும் மகளுக்கு எளிய முறையில் கணிதத்தை புரிய வைக்க தனி செயலியை உருவாக்கியுள்ளார். இதில் அப்படி என்ன புதுசு?
"கணிதம் என்றாலே என்னுடைய மகளுக்கு பாகற்காயாக கசக்கும். அவளுக்கு கணிதத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அவளுக்காக புதுப்புது கற்றல் பொருட்களை தேடிப்பிடித்து வாங்கினேன். அப்போது தான் ஒரு விஷயம் புரிந்தது கற்பதில் பெரும்பாலானவை நான் பள்ளியில் படித்த போது இருந்ததைப் போலவே இப்போதும் இருக்கிறது," என்கிறார் அவ்னீத் மக்கர்.
பெங்களூரைச் சேர்ந்த அவ்னீத் மக்கர், தன்னுடைய மகளுக்கு கணிதப் பாடம் கடினமாக இருப்பதை பார்த்து ஒரு திட்டத்தை செயல்படுத்த நினைத்தார். குழந்தைகள் வேடிக்கையாகவும் எளிய முறையிலும் கணிதத்தை கற்றுக் கொள்ள ஒரு செயலியை உருவாக்க முடிவு செய்துள்ளார்.
பெரும்பாலான குழந்தைகள் கணித சூத்திரங்கள், சின்னங்கள் மற்றும் சிக்கல்களைப் பார்த்து அச்சப்படுகின்றனர். அன்றாட வாழ்க்கையுடன் இவை இணைந்து போகாமல் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்ப வல்லுநரான அவ்னீத்தின் செயலி கற்றலில் குழந்தைகளை கைதூக்கி விடுகிறது. இதனால் குழந்தைகள் பள்ளியில் நன்றாகப் படிக்காவிட்டாலும் செயல்பாட்டில் உள்ள விஷயத்தைப் புரிந்துகொள்கிறார்கள்.
குழந்தைகளுக்கு கற்பிப்பதில் உள்ள சவால்கள் மற்றும் அவற்றின் தீர்வுகள் பற்றி அவ்னீத் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
உங்களுக்கு செயலி உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது?
ஒரு தாயாகவும், கணிதத்தை விரும்பும் ஒருவராகவும் இருப்பதால், என் மகளுக்கு கணிதத்தில் ஆர்வத்தை கொண்டு வருவதில் பல சவால்களை எதிர்கொண்டேன். நான் அவளுக்கு கற்பிக்கும் பொருள்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, அங்குள்ள பெரும்பாலான விஷயங்கள் நான் பள்ளியில் படித்ததைப் போலவே இருக்கின்றன என்பதை உணர்ந்தேன். பின்னர், எனது சில நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் பேசினேன், அவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது இதே பிரச்சினையை எதிர்கொண்டதாகக் கூறினர். எனவே,
கருத்தியல் புரிதல், பயன்பாடு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, சிந்தனை, பகுத்தறிவு மற்றும் கேள்விக்குரிய திறன்களை உருவாக்குவதன் மூலம் கணிதத்தை மையமாகக் கொண்ட ஒரு செயலியைத் தொடங்கலாம் என்று நான் நினைத்தேன்.
ஒரு தாயாக உங்கள் மகளுக்கு கணிதம் கற்றுத் தரும் போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
நான் புரிந்து கொண்டவரை மாணவர்கள் கணிதத்தை ஏன் கடினமானதாக கருதுகிறார்கள் என்றால் அந்தப் பாடம் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதே காரணம். பெரியவர்களான நாமும் குழந்தைகளின் அளவிற்கு கீழ் இறங்கிச் சென்று அவர்களுக்கு புரிய வைப்பதில்லை. என் மகளுக்கு நான் சொல்லித் தரும் போது நான் கண்டுபிடித்த விஷயம் சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான புத்தகங்கள் நடைமுறை விதிகளை மட்டுமே சொல்கிறது அது 'ஏன்' பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கவில்லை. கணிதம் கற்பதற்கான அடிப்படைகளிலேயே சில முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படாமல் இருக்கிறது உதாரணத்திற்கு place value.
இப்படித்தான் கற்பிக்க வேண்டும் என்று எந்த ஒரு அணுகுமுறையும் இல்லாததால் வார்த்தைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் கணித கணக்குகளை புரிய வைப்பதிலும் சிரமம் இருந்தது. இதைவிட மிகப்பெரிய சவால் என்னவென்றால், நமது கணித பாடத்திட்டம் தர்க்கரீதியான சிந்தனை மற்றும் பகுத்தறிவு திறன்களில் கவனம் செலுத்துவதில்லை, அவை வாழ்க்கைத் திறன்கள் மற்றும் இந்த விஷயத்தில் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதில் மிகவும் அவசியமானவை.
உங்களது செயலியைப் பற்றி சொல்லுங்கள்?
'beGalileo' 'பீகலிலியோ' என்ற செயலி மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட கணித கற்றல் திட்டமாகும். ஒரு குழந்தை ஒரு கலிலியோ திட்டத்தில் சேர்ந்தவுடன், அவர்களுக்கு முதலில் (MIDAS) மிடாஸ் எனப்படும் AI- அடிப்படையிலான மதிப்பீட்டு சோதனை செய்யப்படும். கணினியின் உள்ளடிக்கிய நுண்ணறிவு ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட கற்றல் திறனைக் கண்டறியும். இறுதியில் மிடாஸின் முடிவுகள் பெற்றோருக்கு அனுப்பப்படுகின்றன.
Ai- அடிப்படையிலான அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கு அடிப்படை கருத்துகள் தெளிவாகத் தெரிகிறதா என்பதை கண்காணிக்க முடியும், மேலும் அவர்களின் அறிவுத் திறனிற்கு ஏற்ப கேள்விகள் கேட்கப்படும். குழந்தை ஒரு குறிப்பிட்ட கருத்தில் நல்ல தெளிவு பெற்ற பிறகே, உயர் வரிசைக்கான சவாலை அந்தக் குழந்தை எதிர்கொள்ளும் விதமான கேள்விகள் கேட்கப்படும் விதமாக திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், குழந்தையின் விருப்பமான கற்றல் முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒரு குழந்தை காட்சிகளை விரும்புபவராக இருந்தால், வீடியோக்கள் காண்பிக்கப்படும்;
குழந்தை விளையாட்டுகளை விரும்பினால், கணித அடிப்படையிலான விளையாட்டுகள் வழங்கப்படுகின்றன. வீடியோக்கள், விளையாட்டுகள் முதல் புத்தகங்கள் வரை, குழந்தைக்கு கணிதத்தை வேடிக்கையாக கற்றுக் கொள்ளும் அம்சங்கள் இதில் இருக்கிறது. அருகிலுள்ள beGalileo மையத்தைக் கண்டுபிடிப்பதன் மூலம் பெற்றோர் குழந்தையை இந்தத் திட்டத்தில் சேர்க்கலாம். பயிற்சி மையத்தில் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் beGalileo செயலியை பயன்படுத்தலாம். மேலும் குழந்தையின் முன்னேற்றத்தை பெற்றோர் இந்தச் செயலி மூலம் கண்காணிக்க முடியும். விண்டோஸ் ஆப்ஸ்-மைக்ரோசாஃப்ட் ஸ்டோரிலும் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும்.
குழந்தைகளின் இன்றைய கால கல்வி முறைக்கு Ai எப்படி உதவுகிறது?
ஆசிரியர்கள் மாணவர்களை சிறந்த முறையில் புரிந்துகொள்ளக்கூடிய சிறந்த சூழலை உருவாக்க AI உதவும். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள், மேலும் கற்றலுக்கான தனித்துவமான திறமையும் அவர்களுக்குள் இருக்கிறது. சில மாணவர்கள் ’இடது பக்க மூளை’யை அதிகம் செயல்படுத்துகின்றனர். இவர்கள் பகுப்பாய்வு சிந்தனைத் திறன் பெற்றவர்கள், சிந்திப்பதில் சிறந்தவர்கள். மற்றவர்கள் ’வலது பக்க மூளை’யை பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
இவர்கள் படைப்பு, இலக்கிய மற்றும் தகவல் தொடர்பு திறன் பெற்றவர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு மாணவரின் கற்றல் திட்டத்தையும் அவரின் கற்றல் திறன் மற்றும் ஆர்வங்களின் அடிப்படையில் பட்டியலிட ஆசிரியர்களுக்கு AI- அடிப்படையிலான அமைப்பு உதவும். எல்லா மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்ற அடிப்படை கோட்பாட்டிலேயே மாறுபட வேண்டும்.
ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை உருவாக்குகிறார்கள். Ai அடிப்படையிலான கருவிகளின் சந்தை இப்போது பிரபலமாகி வருகிறது, மேலும் 2024 ஆம் ஆண்டில் இவற்றின் சந்தை அளவு ஆறு பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு கணிதத்தில் ஆர்வம் ஏற்பட நீங்கள் சில ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ள முடியுமா?
குழந்தைகளுக்கு கணிதம் கற்றுத் தரும் போது முக்கியமாகக் கற்பிக்க வேண்டியது அவர்களைச் சுற்றி இருக்கும் எண்களை முதலில் பார்க்கச் சொல்லுங்கள். இப்படி சந்தோஷமாக கற்றுத் தரத் தொடங்கினாலே பெற்றோர் குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும், அன்போடும், தனிக்கவனத்தோடும் கணிதத்தை கற்றுத் தர பெற்றோரால் முடியும்.
இதை மட்டும் செய்து பாருங்க அப்புறம் உங்க குழந்தை கணிதத்தை பார்த்து பயப்படாமல் அந்த வருடம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் பாடத்தை படிக்கும். குழந்தைகளுக்கு கணிதத்தில் ஆர்வத்தை கொண்டு வர கீழே இருக்கும் 3 டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
1. நிஜ வாழ்க்கைக் கணிதத்தை கற்றுக்கொடுங்கள்
நிஜ வாழ்க்கை சிக்கல்களை சரிசெய்ய அன்றாட சூழ்நிலைகளில் கணிதத்தை செயல்படுத்துவதை பழக்கப்படுத்துங்கள். உதாரணத்திற்கு வீட்டில் இருக்கும் டேபிள் ஸ்பூன்களை வைத்தே கணிதம் கற்பிக்கலாம். எத்தனை தேக்கரண்டிகளை சேர்த்தால் கால் பாகம் வெண்ணெய் கோப்பை உருவாக்குகிறது போன்ற கேள்விகளைக் கேளுங்கள்? அவர்களின் பொம்மைகளை வண்ணத்தால் வரிசைப்படுத்த முடியுமா? எனக் கேளுங்கள். குழந்தைக்கும் அவர்களுடைய உடன்பிறப்புக்கும் இடையில் எட்டு சாக்லேட்டுகளை வைத்து இதனை சரிசமமாக பிரிக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.
2. கணித விளையாட்டுகளை ஊக்குவிக்கவும்
விளையாட்டுகளை விளையாடுவது கணித திறன்களை வளர்ப்பதற்கும் நிஜ வாழ்க்கையில் இணைப்புகளை உருவாக்குவதற்கும் ஒரு வேடிக்கையான வழியாகும். கணிதத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் சில விளையாட்டுகளை சிறு வயதிலேயே குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம், பரமபதம், செஸ், ரூபிக் க்யூப்ஸ் போன்றவற்றை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்.
3. இணைந்து உருவாக்குங்கள்
அளவீடுகளான எண்ணுதல், கூட்டல் மற்றும் பெருக்கல் தொடர்பான செயல்களை செய்யுங்கள். தீப்பெட்டிகள், ஷூ பெட்டிகள் அல்லது ஒரு மர வீடு என ஏதோ ஒன்றை வைத்து ஒரு வீட்டை உருவாக்குகிறீர்கள். இந்த விளையாட்டின் போது அவர்களுக்கு படிவங்கள், லெகோஸ் உள்ளிட்டவற்றை கற்றுத் தர முடியும். கட்டுமானம் சார்ந்த பொம்மைகளை விட எண்கள் பற்றி எளிதில் புரிய வைக்க ஒரு விளையாட்டுக் பொருள் இல்லை. இது விளையாட்டு நேரத்தில் அவர்களின் சிந்தனைத் திறனை தூண்டி விடவும் உதவும்.
தகவல் உதவி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் | கட்டுரையாளர் : கஜலெட்சுமி