அரசியல், சமூகப் பிரச்னைகளை நையாண்டித்தனத்தோடு இணையத்தில் கலாய்க்கும் ‘ஸ்மைல் சேட்டை’ குழு
தேர்தல் சமயத்தில் ஊடகங்களைப் பார்த்து அரசியல்வாதிகள் பயந்தகாலம் மலையேறி, தற்போது சமூக வலைதளங்கள் அந்த இடத்தை பிடித்துள்ளன என்று கருதத்தோன்றுகிறது. சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளின் ஒவ்வொரு அங்குல நகர்வும் அந்த அளவிற்கு விமர்சிக்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பேச்சைமட்டும் செய்திகளாக்கி வந்த ஊடகங்கள் தற்போது சமூக வலைதளங்களின் அழுத்தத்தால் கட்சியினர் செய்யும் காமெடிகள், கோபப்படும் தருணம் இப்படி அனைத்தையும் காட்டவேண்டிய நிலையை அவை உருவாக்கியுள்ளன. குறிப்பாக தலைவர்கள் பிரச்சாரத்தின் போது செய்யும் சேட்டைகள், மேடைப்பேச்சுக்கு இடையில் செய்யும் பாவனைகள் அடுத்த நிமிடமே வைரலாகிவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம் காமெடி நெடிகொண்ட சிறியவகை வீடியோக்களை தயாரித்து வைரலாக்கிவரும் குழுக்கள்தான்.
தேர்தல் களத்தில் செய்தி ஊடகத்தின் ரசனையை மாற்றி அனைவரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ள ‘ஸ்மைல் சேட்டை’ குழுவினரை பேட்டி கண்டது தமிழ் யுவர்ஸ்டோரி. அந்த கலக்கலான பேட்டியின் சாரம்சம்:
'ஸ்மைல் சேட்டை' தொடக்கம்
எந்த ஒரு விஷயத்தையுமே நகைச்சுவையோடு அணுகும்போது அது பலரை விரைவில் சென்றடையும் என்பது மனித உளவியல் ஆய்வு முடிவு. அந்த அளவிற்கு நகைச்சுவை மனிதனை ஆட்கொண்டு இயக்குகிறது என்பதன் பரிணாம வளர்ச்சியே உண்மை சம்பவங்களை சற்று காமெடி கலந்து இணையத்தில் உலவவிடுவதன் நோக்கம் என்று ஸ்மைல் சேட்டையின் தொடக்கம் பற்றி கூறுகிறார் இந்தக் குழுவில் ஆரம்பம் முதலே இணைந்து செயல்பட்டு வரும் வர்ணணையாளர் விஜே விக்னேஷ்.
“ஸ்மைல் சேட்டை முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு யூடியூப் சேனல். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து செயல்பட்டு வரும் இந்த யூடியூப் சேனலுக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உள்ளனர். தற்காலிகமாக சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு வாடகை கட்டிடத்தில் இருந்து இந்த சேனல் செயல்படுகிறது. நக்கல், நையாண்டி என்று கேலி கிண்டலுடன் நல்ல கருத்துகளை ரகளையோடு எடுத்துச் சொல்வதில் எங்கள் குழு வெற்றி கண்டுள்ளது.
வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்ல ஸ்மைல் சேட்டை குழுவின் செயல்பாடுகள் அர்த்தமுள்ளவை என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே தேர்தலில் வாக்களிப்பதை மையப்படுத்தி ‘வை ராஜா மை’ என்ற தொடர் டாக் மராத்தானை நாங்கள் நடத்தி வருகிறோம்,"
என்று தற்போது இணையத்தில் பரபரப்பாக பலரால் பேசப்பட்டு வரும் தங்களின் புதிய முயற்சி பற்றிச் சொல்கிறார் விக்னேஷ்.
'வை ராஜா மை' பிரச்சாரத்தின் முக்கியத்துவம்
தமிழகத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பலவகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது, அவர்களுக்கு எங்களின் பங்களிப்பை உணர்த்துவதே இந்த ‘வை ராஜா மை’ தொடர் பேச்சு விரதத்தின் சிறப்பு என்று கூறுகிறார் வர்ணனையாளர் விக்னேஷ்.
“மே 2ம் தேதி காலை 10 மணி முதல் ஸ்மைல் சேட்டை சேனலில் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பிரச்சாரம் யூடிப்பில் தொடர் நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சினிமா, தொலைக்காட்சி மற்றும் வானொலி பிரபலங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அரங்கிற்கு வந்து வாக்களிப்பதன் அவசியத்தை வர்ணனையாளர்களோடு இணைந்து நேயர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதோடு நின்று விடாமல் வாக்களிக்க விரும்பும் நேயர்கள் மிஸ்டு கால் கொடுப்பதற்காக பிரத்யேக எண்ணையும் எங்கள் திரையில் பளிச்சிடச் செய்கிறோம் என்று கூறுகிறார் விக்னேஷ். மிஸ்டு கால் கொடுக்கவேண்டிய எண்: 7878745566. வாட்சப் எண்: 9566252324
2016ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விவரப்படி புதிதாக 1 கோடி வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் அவர்களில் 5 லட்சம் பேரையாவது வாக்களிக்க வலியுறுத்துவதே இந்த வை ராஜா மை தொடர் டாக் மராத்தானின் நோக்கம் என்று கூறும் அவர், இது வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மிஸ்டு கால்களை பெற்றுள்ளதாக மகிழ்ச்சியோடு கூறுகிறார். மே 8ம் தேதிக்குள் 5லட்சம் மிஸ்டு கால்களை எட்டிவிடுவது என்ற இலக்கோடு 25 பேரை உள்ளடக்கிய எங்கள் குழு சோர்வில்லாமல் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார். அதே போன்று ஒரே எண்ணில் இருந்து ஒரு முறை மட்டுமே மிஸ்டு கால் கொடுக்கும் வகையில் சிறப்பான தொழில்நுட்பத்தையும் தங்கள் குழு கையாண்டு வருவதாக பெருமைப்படுகிறார் விக்னேஷ்.
தொடர் நேரலையில் வாக்காளர்களுக்கு பயனுள்ள தகவல்களையும் வழங்கி வருகிறது எங்கள் குழு. தமிழக அரசியல் வரலாறு, சுவாரஸ்யமான தருணங்கள், தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள், வேட்பாளர்களின் விவரங்கள், அவர்களின் சாதனைகள், குற்றப்பின்னணி என பல பயனுள்ள தகவல்களை எந்த கட்சி சார்பும் இன்றி நடுநிலையோடு மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற முனைப்புடன் எங்கள் குழு கவனத்தோடு செயல்பட்டு வருகிறது என்கிறார் அவர்.
தொடர் நேரலையில் விக்னேஷ் வர்ணனை செய்யும் நேரம் வந்துவிட்டதால் அவர் விடைபெற்றுக் கொள்ள, அடுத்ததாக இந்த யூடியூப் சேனலின் பங்குதாரர் மற்றும் நிறுவன உரிமை பெற்றுள்ள ட்ரெண்ட் லௌட் (Trend loud) நிறுவனத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியத்திடம் பேசினோம். வாக்களிப்பதை மையப்படுத்தி ஸ்மைல் சேட்டைக் குழு செய்து வரும் தொடர் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையர் ராஜேஷ் லகானி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்திருந்த தகவலுடன் நம்முடன் உற்சாகமாகக் உரையாடினார் அவர்.
ஸ்மைல் சேட்டை யூடியூப் சேனலுக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது, ஏறத்தாழ 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சேனலை கண்டு மகிழ்கின்றனர். டாக் மராத்தானுக்கு முன்பு இந்தக் குழு இணையத்தில் அறிமுகம் செய்த பீப் ஷோ என்ற புதிய கருத்தாக்கம் வைரல் வீடியோக்களாகின என்று சொல்கிறார் அவர்.
"அரசியல் நிலவரங்களையும் அண்மைத் தகவல்களையும் நையாண்டித் தனத்தோடு பாடல் வீடியோக்கள், பட்டிமன்றம் போன்ற பல்வேறு பரிமாணங்களில் வழங்குவதே இந்த நிகழ்ச்சி. அண்மையில் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் நேர்காணலை எவ்வாறு நடத்துகின்றன என்று எங்கள் குழு உருவாக்கிய நையாண்டி வீடியோ பலரையும் ஈர்த்தது” என்று பெருமைப்படுகிறார்.
மேலும் ஸ்மைல் சேட்டையின் மற்றொரு பிரத்யேக நிகழ்ச்சி Dumpest Review. இது வரை ஒரு திரைப்படத்தை பற்றி எழுத்து மற்றும் சொல் வடிவில் விமர்சனம் செய்தே பார்த்திருக்கிறோம், ஆனால் வார்த்தை ஜாலங்களின்றி செயல்களால் மட்டுமே ஒரு திரைப்படத்தை விமர்சிக்கும் புதிய genre வகையை எங்கள் குழு உருவாக்கியுள்ளது என்று சொல்கிறார் பாலசுப்ரமணியன்.
ஸ்மைல் சேட்டை சேனலில் புதிய சிந்தனைகளுடன் மீடியாவில் புது ரத்தம் பாய்ச்சும் 25 பேர் குழுவாக செயல்படுகின்றனர். இதில் முக்கியமாக செயல்படுபவர்கள் வானொலி வர்ணணையாளர் விக்னேஷ், கார்த்திக், ராம், அரவிந்த். இவர்களோடு சேர்ந்து ஸ்மைல் சேட்டை குழு அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை வாரத்திற்கு 2 வீடியோக்களாக உருவாக்குகின்றன என்கிறார் அவர். தொழில்நுட்பப் பயன்பாட்டில் எதிர்காலத்தில் செல்போன் முக்கிய இடத்தை பெறும் என்பதால் பல கோடி செலவு செய்து தொலைகாட்சி தொடங்குவதை விட நல்ல கருத்தோடு யூடியூபில் தொடங்கப்படும் இதுமாதிரியான சேனல்களுக்கு நல்ல வாய்ப்பும் வரவேற்பும் உள்ளதாகக் கூறுகிறார் ஸ்மைல் சேட்டை சேனலின் பங்குதார நிறுவனமான ட்ரெண்ட் லௌட்டின் பாலசுப்ரமணியன்.
சிறந்த எண்ணம் இருந்தால் அவற்றை எளிதில் யூடியூப் சேனலாக மாற்ற முடியும் என்று கூறும் அவர் தொடக்கத்தில் இது போன்ற சேனல்களுக்கு பார்வையாளர்களைப் பொருத்து சேனல் நடத்தும் நிறுவனமும்-யூடியூப்பும் வருமானத்தை குறிப்பிட்ட சதவிகிதத்தில் பிரித்துக் கொள்ளும், அதே சமயம் உங்களது யூடியூப் சேனல் பிரபலமடைந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டிருந்தால் சேனல் நடத்துபவருக்கான பங்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார், 24 ஆண்டுகளாக டிஜிட்டல் தளத்தில் இயங்கி வரும் ட்ரெண்ட் லௌட் நிறுவனத்தின் பாலசுப்ரமணியன்.
அவருடனான சுவாரஸ்ய கலந்துரையாடல் சீரியஸ் கட்டத்தைத் தாண்டி ஸ்மைல் சேட்டை குழுவின் வை ராஜா மை பிரச்சார க்ளைமாக்சில் முடிந்தது. இந்தத் தொடர் பேச்சு விரதத்திற்கு அரசியல் கட்சிகள் பல ஆதரவளிக்க முன் வந்தாலும் எந்த கட்சி சார்பு நிலையையும் எட்டிவிடக் கூடாது என்ற அக்கறையோடு சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மட்டுமே செயல்பட்டு வருகிறோம் என்கிறார் அவர். சில விளம்பரதாரர்களுடைய உதவியுடன் இந்த நிகழ்ச்சி நிச்சயம் வெற்றி இலக்கான 5 லட்சம் மிஸ்டு காலை எட்டும் என்று நம்பிக்கையோடு கூறும் அவர் மிஸ்டு கால் கொடுக்கும் அனைவரும் வாக்களிப்பார்கள் என்பதும் நம்பிக்கையே என்று கூறுகிறார்.
ஸ்மைல் சேட்டை யூடியூப் சேனலின் தோடர் நேரலையை இங்கே பார்க்கவும்:
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
இணைய பிரச்சாரத்தில் கட்சிகளை விஞ்சும் தேர்தல் ஆணையம்!
நெட்டிசன்களை வசப்படுத்தும் முனைப்பில் தமிழக கட்சிகளும் தலைவர்களும்!
கோபி ஷங்கர்: மதுரை வடக்கு தேர்தல் களத்தில் இடையலிங்க இளைஞர்!