முதலீடு ரூ.10,000; மாத வருவாய் ரூ.80,000 - மைக்ரோகிரீன் சாகுபடியில் சாதிக்கும் சென்னைவாசி!

சென்னையைச் சேர்ந்த வித்யாதரன் மைக்ரோகிரீன் சாகுபடியில் வெறும் ரூ.10,000 முதலீடு செய்து, மாதம் ரூ.80,000 வரை வருமானம் ஈட்டுகிறார்.

முதலீடு ரூ.10,000; மாத வருவாய் ரூ.80,000 - மைக்ரோகிரீன் சாகுபடியில் சாதிக்கும் சென்னைவாசி!

Tuesday March 07, 2023,

3 min Read

ஏக்கர் கணக்கில் விவசாய நிலம் இருந்தால் மட்டுமே நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்று நினைப்பது தவறு என்று நிரூபித்திருக்கிறார் சென்னையில் வசிக்கும் வித்யாதரன் நாராயணன். வெறும் 200 சதுர அடி நிலத்தில் மைக்ரோகிரீன் விவசாயம் செய்து மாதம் ரூ.80,000 சம்பாதிக்கிறார்.

மைக்ரோகிரீன் வணிகம்

ஒரு செடியில் முதலில் முளைக்கும் ஒன்றிரெண்டு இலைகள் மைக்ரோகிரீன் எனப்படுகின்றன. எல்லா செடிகளுக்கும் இது பொருந்தாது. உதாரணத்திற்கு முள்ளங்கி, கடுகு, கீரை, லெட்யூஸ், வெந்தயம், புரொக்கோலி, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி போன்றவற்றை மைக்ரோகிரீன் என குறிப்பிடலாம். இந்த மைக்ரோகிரீன் விவசாயத்தில் ஈடுபட்ட பிறகு வித்யாதரனின் வருமானம் அதிகரித்திருக்கிறது.

வித்யாதரன் மைக்ரோகிரீன் சாகுபடியில் ஈடுபடுவதற்கு முன்பு பல இடங்களில் வேலை செய்திருக்கிறார். பல தொழில்களையும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், இவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைக்கவில்லை. சமூகப் பணிகளிலும் இவர் ஈடுபட்டு வந்திருக்கிறார். எத்தனை முயற்சி செய்தபோதும் 25-30 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்ட முடியாமல் தவித்தார்.

ஆரம்பத்தில் விவசாயப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி சந்தையில் விற்பனை செய்தார். இதில் லாபம் கிடைக்கவில்லை. கார்களை வாங்கி வெளியூர் செல்பவர்களுக்கு வாடகைக்கு விடும் தொழில் தொடங்கியிருக்கிறார். இதுவும் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. மாறாக, செலவு மட்டுமே அதிகமாக இருந்தது. அடுத்ததாக கட்டிட வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து முயற்சி செய்து வந்தார். அதுவும் தோல்வியில் முடிந்தது. இறுதியாக, இணையம் வழியாக மைக்ரோகிரீன் பற்றி தெரிந்துகொண்டார். இந்த முறை அதிர்ஷ்ட தேவதை அவரைக் கைவிடவில்லை.

லாபகரமான முயற்சி

வித்யாதரனுக்கு சொந்தமாக ஒரு சிறிய நிலம் இருக்கிறது. ஆனால், அது அவரது வீட்டிலிருந்து 80 கி.மீட்டர் தொலைவில் இருப்பதால் வீட்டிலிருந்து சென்று வருவது சிரமமாக இருந்தது.

இணையத்தில் மைக்ரோகிரீன் வணிகம் பற்றி ஆராய்ந்த வித்யாதரன் இந்த முயற்சியில் களமிறங்கினார்.

microgreen shed

2013-ம் ஆண்டு மைக்ரோகிரீன் சாகுபடி செய்யத் தொடங்கிய இவர் 2014-ம் ஆண்டில் ஹோட்டல், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு மும்முரமாக விற்பனை செய்யத் தொடங்கினார். தற்போது இவரது மனைவி ஜெயராணி இவருக்கு உதவி வருகிறார். மேலும், ஓர் உதவியாளரை நியமித்து வணிகத்தை நடத்தி வருகிறார்.

சுவாரஸ்யமான சம்பவம்

மைக்ரோகிரீன் முயற்சியை வணிகமாக்க வித்யாதரன் முடிவு செய்ததும், இது பற்றிய ஒரு துண்டு பிரசுரம் பிரின்ட் செய்ய நினைத்தார். இதற்காக பிரின்டிங் கடைக்கு சென்றிருந்தபோது ஒரு நபரை சந்தித்திருக்கிறார். அவருடன் மைக்ரோகிரீன் பற்றி பேசியிருக்கிறார். வெளிநாடுகளில் மைக்ரோகிரீன் மிகவும் பிரபலமாக இருப்பதை இந்த உரையாடல் மூலம் வித்யாதரன் தெரிந்துகொண்டார். அதுமட்டுமல்ல ஹோட்டல் செஃப் ஒருவரையும் அந்த நபர் வித்யாதரனுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

செஃப் மற்றும் அவரது நண்பர்கள் உதவியுடன் சென்னையில் நடைபெற்ற ஒரு சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வித்யாதரனுக்குக் கிடைத்துள்ளது. அங்கு மைக்ரோகிரீன் பற்றியும் இதை வணிக ரீதியாக கொண்டு செல்லும் திட்டம் பற்றியும் மற்றவர்களிடம் பேசியிருக்கிறார். மெல்ல இவரது முயற்சி அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துள்ளது. வணிகம் தொடங்குவது பற்றி நிபுணர்களின் வழிகாட்டல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த வணிகத்தைத் தொடங்கியிருக்கிறார்.

வெறும் 10,000 ரூபாய் முதலீட்டுடன் மைக்ரோகிரீன் வணிகத்தைத் தொடங்கினார். இன்று இதன் மதிப்பு சுமார் 2 லட்ச ரூபாய். வணிகத்தை மேலும் விரிவுபடுத்த வித்யாதரன் திட்டமிட்டிருக்கிறார்.

வணிக மாதிரி

மைக்ரோகிரீன் வகையைப் பொறுத்து 100 கிராம் மைக்ரோகிரீன் 200-400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 10-30 சதவீத தள்ளுபடி விலையில் ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு வித்யாதரன் விநியோகம் செய்து வருகிறார்.

மொத்த விற்பனையில் 40 சதவீதம் ஹோட்டல்களும், 40 சதவீதம் சூப்பர் மார்க்கெட்களும், 20 சதவீதம் தனிநபர்களும் பங்களிப்பதாக வித்யாதரன் தெரிவிக்கிறார். சராசரியாக தினமும் 3 கிலோ வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கும் வித்யாதரன் டன்சோ போன்ற தளங்கள் மூலமாகவும் விநியோகம் செய்கிறார்.

சவால்கள்

சந்தை தேவையை அடிப்படையாகக் கொண்டே இந்த வணிகம் நடைபெறுகிறது. மைக்ரோகிரீன் வளர்ப்பு எளிது என்றாலும், வாடிக்கையாளர்களைக் கண்டறிவது கடினமாக இருப்பதாக வித்யாதரன் சுட்டிக்காட்டுகிறார். அதேபோல் சில செஃப் உடனடியாக டெலிவரி செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் என்றும், இப்படிப்பட்ட சூழலை சமாளிப்பது கடினமாக இருக்கும் என்றும் அவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

வரும் நாட்களில் ஆப் ஒன்றை வடிவமைக்க வித்யாதரன் திட்டமிட்டிருக்கிறார். சந்தா அடிப்படையில் செயல்படுவதே அவரது திட்டம். சாலட் வணிகத்தில் ஈடுபடவும் திட்டமிட்டிருக்கிறார். விரைவில் தனது மகள் சகியை வணிகத்தில் இணைத்துக்கொண்டு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.