சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அதிகம் போற்றப்படாத நாயகர்கள்
அதிகம் அறியப்படாத இந்த சுதந்திரப் போராட்ட வீரர்களே காலனியாதிக்கத்தை வீழ்த்த உதவினர்...
இந்தியாவின் 70-ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடுவது என்பது சுதந்திரத்துக்காக போராடி தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களை நினைவுகூறும் தருணமாகும். பிரம்மாண்டமான பிரபலங்களான காந்தி, நேரு, போஸ் போன்ற தியாகிகளுக்கு மத்தியில் இவர்களது பெயர்களும் கதைகளும் அதிக வெளிச்சம் பாய்ச்சப்படாமல் தொலைந்துவிட்டது. ஆனால் அதிகம் அறியப்படாத இந்த சுதந்திரப் போராட்ட வீரர்களே காலனியாதிக்கத்தை வீழ்த்த உதவினர்.
தங்களது சுதந்திர வேட்கையின் காரணமாக வரலாற்றில் தங்களது பெயரைப் பொறித்துள்ள துணிச்சலான நபர்கள் சிலரை இன்று நினைவுகூர்வோம்.
அல்லுரி சீதாராம ராஜு
இந்தியப் புரட்சியாளரான இவர் மத்திய இந்தியாவின் ஆதிவாசி மக்களால் ’காட்டின் நாயகர்’ என்றே அழைக்கப்பட்டார். முறையான கல்வி தேவையற்றது என நிறுத்திவிட்டு இளம் வயதான 15 வயதிலேயே அரசியலில் தீவிரமாக செயல்படத் துவங்கினார். 1857-ம் ஆண்டில் கோந்த பழங்குடியினர் பலர், முதல் உலகப்போரின் போது உயிரிழந்தனர். அந்தப் பழங்குடியினரைப் பார்ப்பதற்காக அல்லுரி சீதாராம ராஜு அடர்ந்த காடுகளுக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஆதிவாசிகளின் அவல நிலையைக் கண்டு 1922 முதல் 1924 வரை ராம்பா கலகத்தை வழிநடத்தினார். இதன் மூலம் பிரிட்டிஷ்ஷையும் காடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரிவதை தடுக்கும் அவர்களது சட்டத்தையும் ஆதிவாசிகள் எதிர்த்துப் போராட உந்துதலளித்தார். காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் அரசை ஆட்டிப் படைத்தார். இறுதியில் பிடிபட்டு 1924-ம் ஆண்டு கொல்லப்பட்டார்.
லட்சுமி சேகல்
கேப்டன் லட்சுமி என்று அழைக்கப்படும் லட்சுமி சேகல் ஒரு மருத்துவர். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர்கள் ஆக்கிரமித்த சிங்கப்பூரிலிருந்த வறுமை நிலையிலிருந்தவர்கள் மற்றும் காயமேற்பட்ட இந்திய இராணுவ வீரர்களை பராமரித்தார். இங்கு சுபாஷ் சந்திர போஸை சந்தித்தார். இந்திய தேசிய ராணுவத்துடன் நெருக்கமானார். இதன் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைப்பிரிவில் செயல்பட்டார். இதன் மூலம் பல இளம் பெண்கள் தன்னார்வலராக இணைந்து சுதந்திரத்திற்காக போராட உந்துதலளித்தார். சுதந்திரத்திற்குப் பிறகும் நாட்டிற்கான தனது சேவையைத் தொடர்ந்தார். போபால் விஷவாயு கசிவு அவலத்தைத் தொடர்ந்து மருத்துவக் குழுவுடன் சென்று உதவினார். 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை எதிர்த்தும் போராடினார். 92 வயதிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
உதம் சிங்
உதம் சிங் ஒரு புரட்சியாளர். பகத் சிங்கை பின்பற்றிய அவரது தோழர். 1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையின்போது பஞ்சாப் லெப்டினண்ட் கவர்னராக இருந்த சர் மைக்கேல் டயர் படுகொலைக்கு பிரபலமானவர். சிங்கும் அரசியல் ஈடுபாடுள்ள 20 வயது மதிக்கத்தக்க அவரது நண்பர்களும் துப்பாக்கிச்சூடு நடந்த சமயத்தில் அங்கிருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு முன்பு நிராயுதபாணியாக இருந்த போராளிகளுக்கு தண்ணீர் வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தனது மக்களை கொன்றவரை பழிவாங்கவேண்டும் என்கிற தீராத வேட்கை கொண்டார். 1924-ல் வெளிநாடுகளிலுள்ள இந்தியர்களின் ஆதரவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட கத்தார் கட்சியில் இணைந்தார். 1940-ல் மைக்கேல் டயரை படுகொலை செய்தார். தப்பியோட எந்தவித முயற்சியையும் அவர் எடுக்கவில்லை. உடனடியாக அவர் தூக்கிலிடப்பட்டார். இருந்தும் கடைசி மூச்சு வரை போராடினார்.
டிராட் சிங்
’யூ டிராட் சிங்’ என்றழைக்கப்படும் டிராட் சிங் வடகிழக்குப் பகுதியின் காசி ஹில்ஸ் பகுதியின் Syiemlieh வம்சாவளியின் தலைவர். 1826-ம் ஆண்டு பிரிட்டிஷ் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கை கட்டுக்குள் கொண்டு வந்த பின்பு காசி ஹில்ஸ் பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்தபோது அதை எதிர்த்துப் போராடினார். காசி ஹில்ஸ் வழியாக சாலையமைக்கும் பணியை நிறுத்த உத்தரவிட்டார் டிராட் சிங். இருப்பினும் அவரது உத்தரவை மீறி பிரிட்டிஷ் காவற்படை கட்டுமானப் பணியை மேற்கொண்டதால் ஆங்கிலோ-காசி போர் மூண்டது. டிராட் சிங் அவரது பழங்குடி மக்களுடன் இணைந்து தங்களது ஆயுதங்களைக் கொண்டு சண்டையிட்டனர். 1833-ம் ஆண்டு ஜனவரி மாதம் டிராட் சிங்கை பிரிட்டிஷ் சிறைப்பிடித்தது. அவர் தாகாவிற்கு நாடு கடத்தப்பட்டார். 1835-ம் ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்தார்.
பெனாய், பாதல், தினேஷ்
1930-ம் ஆண்டு பெங்கால் ப்ரெசிடென்ஸியின் புரட்சி இயக்கத்தை தலைமை தாங்கி பெனாய், பாதல் மற்றும் தினேஷ் மூவரும் பலருக்கு உந்துதலளித்தனர். சிறையிலிருந்த கைதிகளை கொடூரமான முறையில் அடக்குமுறைக்கு உட்படுத்திய கர்னல் என் எஸ் சிம்சனின் செயலுக்கு பழிவாங்கும் விதத்தில் செயலக கட்டிடத்திற்கு குண்டு வைத்து சிம்சனை படுகொலை செய்தனர். 1930-ம் ஆண்டு இவர்கள் மூவரும் பிரிட்டிஷ் காவலாளி போல் வேடமிட்டு கட்டிடத்திற்குள் நுழைந்து அவரை சுட்டனர். ஆனால் போலீஸாரிடம் பிடிபட்டனர். பிரிட்டிஷிடம் சரணடைய விரும்பாததால் பாதல் பொட்டாஷியம் சயனைடை உட்கொண்டார். பெனாய் மற்றும் தினேஷ் தங்களது துப்பாக்கியாலேயே சுட்டுக்கொண்டனர். பாதல் உடனே உயிரிழந்தார். பெனாய் மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்டு அதே வருடம் உயிரிழந்தார். தினேஷ் 1931-ம் ஆண்டு தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர்களது தியாகம் பல தேசபக்தர்களுக்கு உந்துதலளித்தது.
அபாதி பானு பேகம்
பீ அம்மா என்றழைக்கப்படும் இவர் உணர்ச்சிமிக்க தேசியவாதி. இவரது குடும்பம் 1857 கிளர்ச்சியினால் அதிக பாதிப்புக்கு ஆளானது. இவர் பர்தா அணிந்தவாறே சுதந்திரத்திற்காக போராடவேண்டும் என்று கூட்டத்தில் கூடியிருந்த மக்களிடம் உத்வேகத்துடன் பேசியுள்ளார். வரலாற்றில் இவ்வாறு பேசிய முதல் பெண்மணி இவர். அபாதி பானு பேகம் சௌகத் அலி மற்றும் முகமது அலி ஆகியோரின் தாயாவார். இந்த சகோதரர்கள் கிலாபாத் இயக்கத்திற்கும் ஒத்துழையாமை இயக்கத்திற்கும் தலைமை தாங்கினர். அவரது மகன்கள் கைது செய்யப்பட்ட பிறகு தனது பர்தாவை விலக்கிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய வங்கு வகித்தார். வெளிநாட்டுப் பொருட்களைத் தவிர்த்து இந்தியப் பெண்கள் காதி பயன்படுத்துவதை ஊக்குவித்தார். ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு பெரும் பங்கு வகித்தார். பெண்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க உந்துதலளித்தார். 1924-ம் ஆண்டு காலமானார்.
மேடம் பிகாஜி காமா
1861-ம் ஆண்டு மும்பையில் பணக்கார பார்சி குடும்பத்தில் பிறந்தார். ருஸ்தம் காமா என்கிற வழக்கறிஞரை 1885-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பல்வேறு தொண்டுப் பணிகளில் ஈடுபட்டார். 1896-ம் ஆண்டு பம்பாய் ப்ரெசிடென்சியில் புபனிக் ப்ளேக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்வந்து உதவினார். இறுதியில் அவரை இந்நோய் தாக்கியது. மருத்துவ பராமரிப்பிற்காக பிரிட்டன் அனுப்பப்பட்டார். லண்டனில் தாதாபாய் நௌரோஜி போன்ற தேசியவாதிகளைச் சந்தித்தார். 1905-ம் ஆண்டு பாரிஸ் இந்திய சமூகத்தை அமைத்தவர்களில் இவரும் ஒருவர். Bande Mataram மற்றும் Madan’s Talwar உள்ளிட்ட புரட்சிகரமான இலக்கியப் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடந்த சர்வதேச சோசலிஸ்ட் காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை முதலில் அந்திய நாட்டில் பறக்கவிட்டார். பெண்ணியம் மற்றும் பாலின சமத்துவத்திற்காக போராடினார்.
சூர்யா சென்
மேற்கு வங்காளத்தின் சிட்டகாங் பகுதியில் இருந்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்தார் சூர்யா சென். மிகவும் அமைதியானவராகவும் பயந்த சுபாவமுள்ளவராகவும் மேடைப்பேச்சிகளில் ஆர்வமின்றியும் இருந்தார். சுதந்திரப் போராட்ட வீரருக்கான குணாதிசயங்களுக்கு அவரது சுபாவம் பொருத்தமற்றே இருந்தது. இருப்பினும் மனதளவில் ஒரு புரட்சியாளராகவே இருந்தார். 1930-ல் இளம் மாணவர்கள் அடங்கிய குழுவிற்கு தலைமை வகித்த சூர்யா சென் சிட்டகாங் ஆயுதங் கிடங்கை சூறையாடி பிரிட்டிஷ்ஷின் செய்தித் தொடர்பை செயலிழக்கச் செய்ய திட்டமிட்டார். இந்தக் கலகத்தில் பலர் உயிரிழந்தனர். சென் மற்றும் சிலர் அங்கிருந்து தப்பியோடினர். இறுதியாக அவர் பிடிபட்டார். அவரை துன்புறுத்தி தூக்கிலிட்டனர். பல துணிச்சலான வீரர்களை உருவாக்கிய மாநிலத்தில் அவரது பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இந்த ஆண் மற்றும் பெண் வீரர்களின் எண்ணம் மற்றும் செயல் ஒரு முக்கிய படிப்பினையை வழங்குகிறது. அவர்கள் தங்களது சௌகரியங்களைத் துறந்து ஒரு மிகப்பெரிய காரணத்திற்காக போராடியுள்ளனர். இவற்றை சுதந்திர இந்தியாவின் தற்போதைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்தவேண்டுமல்லவா?
ஆங்கில கட்டுரையாளர் : ஸ்நேஹ் சிங், வர்ஷா ராய்சம்