தடுப்பூசி தொடர்பான பயம்: ஆற்றில் குதித்து தெறித்து ஓடிய கிராம மக்கள்!
உத்தரபிரதேச சம்பவம்!
தற்போது நிலவி வரும் கடுமையான கொரோனா நோயை வீழ்த்த ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என உலக நாடுகள் ஒருமித்த குரலில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அதற்கேற்ப தங்கள் நாடுகளில் நாட்டு மக்களைக் காக்கும் வண்ணம் தடுப்பூசி இயக்கங்களை நடத்தி வருகின்றன.
தடுப்பூசி மூலம் தற்போது இங்கிலாந்து கொரோனா உயிரிழப்பு இல்லாத நாடாக மாறியிருக்கிறது. இதேபோல், இஸ்ரேல் தடுப்பூசி இயக்கங்கள் மூலம் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதால் தற்போது தனது நாட்டு மக்களை முகக்கவசங்களில் இருந்து விடுதலை அளித்துள்ளது.
இந்தநிலையில், இந்தியாவில் தடுப்பூசி என்பது அச்சத்திற்குரிய ஒன்றாகவே பார்க்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசிகளை மக்களிடம் கொண்டுசேர்க்க முயற்சித்து வந்தாலும் சிலர் தேவையில்லாத பயத்தின் காரணமாக அதனை தவிர்த்து வருகின்றனர்.
அப்படி ஒரு சம்பவத்தை தான் நாம், இப்போது பார்க்கப் போகிறோம். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பராபங்கி என்ற கிராமத்துக்கு சமீபத்தில் அதிகாரிகள் தடுப்பூசி போட சென்றுள்ளனர். ஆனால் கிராம மக்கள் பலரும் அச்சம் காரணமாக தடுப்பூசி போட விருப்பம் தெரிவிக்கவில்லை.
இதன்பின்னர் மாவட்ட துணை கலெக்டர் ராஜீவ் குமார் சுக்லா என்பவர் கிராம மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் நன்மைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்லியுள்ளார். ஆனாலும் மக்கள் தடுப்பூசி போட ஒப்புக் கொள்ளவில்லை.
அதிகாரிகள் கட்டாயப்படுத்திய போது கிராம மக்கள் சிலர் தங்கள் கிராமத்தில் ஓடும் ஆற்றில் குதித்து தப்பித்து ஓடியுள்ளனர்.
“இது தடுப்பூசி அல்ல, விஷ ஊசி... என்று கிராம மக்களில் சிலர் கூறி ஆற்றில் குதித்ததாக,” அம்மாநில உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
துணை கலெக்டர் தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் நன்மைகளையும் விளக்கி, கட்டுக்கதைகளை அகற்ற முயற்சித்த பிறகும், கிராமத்தில் ஒட்டுமொத்தமாக 14 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
தற்போதுள்ள சூழலில் கொரோனா பரவல் இப்போது கிராமப்புறங்களிலும் அதிகமாக பரவி இந்தியாவையும் கவலை கொள்ள வைத்துள்ளது. குறிப்பாக 11-44 வயதிற்குட்பட்டவர்களுக்கு கடுமையான தடுப்பூசி பற்றாக்குறையை நாடு கண்டுகொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் முகம் சுளிக்கும் வகையில் அமைகிறது.
கோவிட் பரவலைக் குறைக்க தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இப்படியான நேரத்தில் தடுப்பூசி தொடர்பாக தேவையில்லாத அச்சம் காரணமாக கிராம மக்கள் ஆற்றில் குதித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
தகவல் மற்றும் படங்கள் உதவி-indiatoday | தமிழில்: மலையரசு