’நான் முஸ்லீம்; என் மனைவி இந்து; என் பிள்ளைகள் இந்தியர்கள்...!
குடியரசுத் தினத்தன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக் பேசிய வீடியோ வைரலாகும் அளவிற்கு அவர் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா?
நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 1950 ஜனவரி 26ஆம் தேதி, குடியரசுத் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தியாவின் 71வது குடியரசு தின விழா நேற்று முன்தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தலைமை விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், ராஜபாதை முதல் செங்கோட்டை வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதில், நமது நாட்டின் வலிமையை பறைசாற்றும் விதமாக முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பும் பார்ப்பவர்களை அசர செய்தது.
இது ஒருபுறம் இருக்க, தொலைக்காட்சிகளிலும் குடியரசுத் தின சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதில் ஒன்றாக பிரபல சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் டான்ஸ் பிளஸ் 5 என்ற நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
போட்டியாளர்களுடன் சேர்ந்து நடனமாடிய அவர், தனது குடும்ப மற்றும் தொழில் பற்றிய பல விஷயங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது மதம் பற்றி அவர் பேசிய ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் அவர்,
“நான் முஸ்லிம், என் மனைவி இந்து. ஆனால் எங்களுக்கு இடையில் இந்து- முஸ்லிம் என்று எவ்வித பேதமும் இல்லை. எங்கள் குழந்தைகள் இந்தியர்களாகவே வளர்கிறார்கள். எங்கள் வீட்டில் மதம் பற்றி யாரும் பேசுவதில்லை.
எனது மகளை பள்ளியில் சேர்க்கும்போது, விண்ணப்பப் படிவத்தில் மதம் எனும் கேள்வி இருந்தது. அப்போது, எனது மகள் 'அப்பா, நமது மதம் என்ன?' என்று கேட்டாள். நான் அதில் இந்தியர் என்று எழுதிவிட்டு, நமக்கு மதம் என்று ஒன்று இல்லவே இல்லை; அப்படி ஒன்று நமக்கு தேவையும் இல்லை என்று கூறினேன்," எனப் பேசியிருக்கிறார்.
மேலும்,
"5 முறை தொழுகை செய்யாவிட்டாலும், நான் ஒரு இஸ்லாமியன் தான். நான் இஸ்லாமத்தின் கொள்கைகளை நம்புகிறேன். என் மதத்தின் மீது பற்றுக்கொண்டவன் நான். அது ஒரு நல்ல மதம். அதில் நல்ல ஒழுக்கம் உள்ளது என நான் நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார் ஷாருக்.
இந்த வீடியோவை ஷாருக் ரசிகர்கள் மட்டுமின்றி, நெட்டிசன்கள் பலரும் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். மதம் பற்றிய ஷாருக்கின் இந்தப் பேச்சிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இணையத்தில் பேசு பொருளாகவும் இது மாறியுள்ளது.
பாலிவுட் பாட்ஷாவாகக் கொண்டாடப்படும் ஷாருக், 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். தற்போது 55 வயதாகும் அவருக்கு இந்தி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகராக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்கி வருகிறார் ஷாருக். அவரது மனைவி பெயர் கௌரி கான். இந்தத் தம்பதிக்கு சுஹானா, ஆர்யன் மற்றும் ஆப்ராம் என மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடந்துவரும் வேளையில், பாலிவுட் முக்கியப் பிரபலங்களான ஆமீர் கான், ஷாருக் கான் உள்ளிட்டோர் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.
படப்பிடிப்புக்காக தமிழகம் வந்திருந்த ஆமீர் கானிடம் கூட இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் சென்று விட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷாருக், மதம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.