தோனி முதலீடு செய்துள்ள ரூ.4500 கோடி மதிப்புடைய ‘KhataBook' 6% ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஏன்?

ரூ4500 கோடி மதிப்புள்ள 'கட்டாபுத்தகம்' எனும் ஃபின்டெக் நிறுவனம் அதன் 6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 2020ம் ஆண்டில் எம்.எஸ்.தோனி இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி முதலீடு செய்துள்ள ரூ.4500 கோடி மதிப்புடைய ‘KhataBook' 6% ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஏன்?

Friday September 08, 2023,

2 min Read

உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களும் கடந்த சில மாதங்களாக பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதில், அமேசான் நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்பு உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரூ.4500 கோடி மதிப்புள்ள 'கட்டாபுக்' KhataBook எனும் ஃபின்டெக் நிறுவனம் அதன் 6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 2020ம் ஆண்டில் எம்.எஸ்.தோனி இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhoni invest in startup

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ’கட்டாபுக்’ நிறுவனம், சிறு மற்றும் குறு வணிகர்கள் தங்கள் வணிகப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாக கண்கானிக்க உதவுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் SaaS (ஒரு சேவையாக மென்பொருள்) நிறுவனங்களில் இது ஒன்றாகும்.

தற்போது, 12 இந்திய மொழிகளில் பயன்பாட்டிற்கு கிடைக்கும் இச்செயலியினை 50 மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீஷ் நரேஷின் கருத்துப்படி, 150 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது இந்நிறுவனம்.

அதாவது, இந்தியாவின் மொத்த மாவட்டங்களில் உள்ள 95 சதவீத வணிகர்களால் இந்த செயலி பயன்படுத்தப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் 'இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா'-வின் 'சிறந்த புதுமையான மொபைல் ஆப்' விருதையும் வென்றுள்ளது.

2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனம் அதன் தொடர் சி சுற்றின்படி, 600 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது. Tribe Capital, Moore Strategic Ventures (MSV), Alkeon Capital, Sequoia Capital, Tencent, RTP Ventures, Unilever Ventures, Better Capital போன்ற முதலீட்டாளர்களிடமிருந்து 100 மில்லியன் டாலர் நிதியினைத் திரட்டியது. இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

கட்டாபுக் நிறுவனம் 42 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது அதன் மொத்த பணியாளர்களில் 6 சதவீதமாகும். பணிநீக்கத்திற்கு முன், நிறுவனத்தின் பலம் 700 ஆக இருந்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு 3 மாத ஊதியம், ESOP-கள், உடல்நலக் காப்பீடு நீட்டிப்பு மற்றும் பிற வேலை தொடர்பான ஆதரவு கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Ravish Naresh, Khatabook

கட்டாபுக்கின் தயாரிப்பு, பொறியியல் மற்றும் சந்தைப்படுத்தல் குழுக்கள் பணிநீக்கங்களின் சுமையை எதிர்கொண்டுள்ளன. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத ஊழியர்கள் இரு தரப்பினரும் நிறுவனத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்

"எங்கள் லாப இலக்குகளுக்கு ஏற்ப, வணிகத்தின் சில பகுதிகளை மறுசீரமைக்கிறோம். இந்த மறுசீரமைப்பினால், எங்களது 700 ஊழியர்களில் 6 சதவீதத்தினரை பாதித்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் 3 மாத சம்பளம் உட்பட சில சலுகைகளை அடங்கிய இழப்பீடை வழங்கியுள்ளோம்," என்று பிசினஸ் டுடேவிற்கு அளித்த பேட்டியில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் செலவினங்களில் ஊழியர்களின் பலனே மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் செலவினம் ஆண்டுக்கு 173 சதவீதம் அதிகரித்து ரூ.101.1 கோடியாக உள்ளது. அதற்கு அடுத்ததாக தகவல் தொடர்பு செலவுகள் 200 சதவீதம் அதிகரித்து ரூ 24 கோடியாக உள்ளது.

தகவல் உதவி : டிஎன்ஏ மற்றும் பிசினஸ் டுடே