யூனிவெர்சல் சார்ஜருக்கு ஏற்ற எச்வி நுட்பத்துடன் கூடிய முதல் எலெக்ட்ரிக் பைக் - சென்னை நிறுவனம் Raptee அறிமுகம்!
சென்னையை தலைமையகமாக கொண்ட மின்வாகன ஸ்டார்ட் அப்'பான Raptee.HV, இந்தியாவின் முதல் அதிக வோல்டேஜ் மின்சார மோட்டார் சைக்கிள், டி30-யை அறிமுகம் செய்துள்ளது.
சென்னையை தலைமையகமாகக் கொண்ட மின்வாகன ஸ்டார்ட் அப் ஆன Raptee.HV இந்தியாவின் முதல் அதிக வோல்டேஜ் மின்சார மோட்டார் சைக்கிள், டி30, அறிமுகம் செய்துள்ளது.
மின் கார்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் கொண்ட இந்த பைக், 250-300CC ICE வாகனங்களுக்கு சவால் விடக்கூடிய செயல்திறனை குறைந்த வெப்ப வெளிப்பாட்டுடன் அளிக்கிறது.
இந்த எச்வி தொழில்நுட்பத்துடன், மின்சார கார்களில் பயன்படுத்தப்படும் யூனிவர்சல் சார்ஜருக்கு ஏற்ற மின் பைக்கை 'ரேப்டீ' இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்கிறது. இதில் உள்ள சார்ஜர், இந்தியா முழுவதும் உள்ள 13,500 சிசி2 கார் சார்ஜிங் மையங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.
250-300CC ICE வாகனங்களுக்கு நிகராக ரூ.2.39 லட்சத்தில் இந்த பைக் அறிமுகமாகிறது. சுற்றுச்சூழல் நட்பான தன்மையோடு முதல் நாளில் இருந்தே பராமரிப்பு செலவு சேமிப்பை அளிக்கிறது.
Raptee வாகன சிறப்பம்சங்கள்
- ரேப்டீ மோட்டார் சைக்கிள் ஒரே சார்ஜிங்கில், 200 கிமீ ஐசிஇ ரேஞ்ச் மற்றும் 150 கிமீ நிஜவாழ்க்கை ரேஞ்சை அளிக்கிறது. 3.5 நொடிகளில் 0 முதல் 60 கிமீ வேகம் அளிக்கிறது. ஐபி67 தரம் வாய்ந்த பேட்டரி மூலம் அதிக தரம் மற்றும் பாதுகாப்பு அளிக்கிறது. இதற்கு 8 ஆண்டு அல்லது 80,000 கிமீ வாரண்ட் அளிக்கப்படுகிறது. மின் கார்களுக்கு நிகரானது இது.
- இந்த வாகனங்கள் மேம்பட்ட அனுபவத்திற்கான மென்பொருள் அம்சங்களைக் கொண்டுள்ளன. நிறுவனத்தால் சொந்தமாக உருவாக்கப்பட்டுள்ள மின்னணு நுட்பம், பிரத்யேகமான ஆப்பரேட்டிங் சிஸ்டம், சிறந்த பயனர் அனுபவத்தை அளிக்கின்றன.
- ரேப்டீ எச்வி பைக்குகள், 4 வண்ணங்களில், ஹாரிசைன் ரெட் (Horizon Red), ஆர்க்டிக் ஒயிட் (Arctic white), மெர்குரி கிரே (Mercury Grey) மற்றும் எக்லிப்ஸ் பிளாக் (Eclipse Black) வருகின்றன.
சென்னை மற்றும் பெங்களூருவில் ஜனவரி மாதம் முதல் விற்பனையை துவங்கும் இந்நிறுவனம், பிரிமியம் பைக் மற்றும் மின்வாகன ஏற்பு கொண்ட முக்கிய நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும், தலைமை அலுவலகத்தில் தொழிற்சாலையுடன் ஒருங்கிணைந்த அனுபவ மையமான டெக் ஸ்டோரை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாகனம் தயாரிக்கப்படும் செயல்முறையை பார்க்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவம் வழங்க, வழக்கமான விற்பனை முறை தவிர, நேரடி சேவைகளையும் அளிக்க உள்ளது.
”எங்கள் நோக்கம் ஐசிஇ மோட்டார் சைக்கிளின் மின் வாகன வடிவை உருவாக்குவது அல்ல, மாறாக, தொழில்நுட்பத்தின் மூலம் இருசக்கர வாகன அனுபவத்தை மேம்படுத்துவதாகும். மின்சார கார்களின் அடிப்படை நுட்பங்களை எடுத்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளோம்,” என இணை நிறுவனர் மற்றும் தலமை செயல் அதிகாரி தினேஷ் அர்ஜுன் கூறினார்.
இந்தியாவின் முதல் அதிக வோல்டேஜ் பைக்கை உருவாக்கி அறிமுகம் செய்வது துவக்க முதல் தொழில்நுட்ப சவாலாக இருந்தது, என்றும் கூறியுள்ளார்.
’மின் இருசக்கர வாகன உலகில் புதிய தர நிர்ணயத்தை உருவாக்கும் வகையில் எங்கள் முதல் வாகனத்தை அறிமுகம் செய்யும் போது ஒன்றிணைந்த ஈடுபாடு மற்றும் புதுமையாக்கத்தை காண்பது உற்சாகம் அளிக்கிறது. இந்திய மோட்டார் சைக்கிள் சந்தை ஸ்கூட்டர் சந்தையைவிட இரு மடங்கு கொண்டது என்றாலும், இந்த பிரிவில் மின்வாகன குறைவாக இருப்பது எங்கள் டி30 பைக்கிற்கு பெரிய வாய்ப்பாக அமைகிறது, என்று நிறுவன சி.பி.ஓ. ஜெயபிரதீப் வாசுதேவன் கூறியுள்ளார்.
”இன்றைய சூழலில், ஆட்டோமொபைல்கள், குறிப்பாக மின் வாகனங்கள் மின்னணு மற்றும் மென்பொருள் சார்ந்து அமைந்துள்ளன. இதை மனதில் கொண்டு எங்களுடைய வாடிக்கையாளர் சேவை உத்திகள் அமைந்துள்ளன. டிஜிட்டல் மற்றும் நேரடி சேவை மூலம் சிறந்த அனுபவத்தை வழங்க உள்ளோம்,” என்றும் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மின் வாகன பரப்பில் முக்கிய நிறுவனமாக உருவாக தேவையான உத்திகளை வகுத்துள்ளோம், என்றும் தெரிவித்தார்.
Bluehill Capital மற்றும் Artha99 Ventures தலைமை வகித்த ஏ சுற்றுக்கு முந்தைய சுற்று நிதி திரட்டியுள்ளது Raptee. புதிய மற்றும் பழைய முதலீட்டாளர்களிடம் இருந்து ஏ சுற்று நிதி திரட்டுவதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது. டீலர்ஷிப் விரிவாக்கம் மற்றும் மற்ற மாநிலங்களில் பைக் அறிமுகத்திற்கு இந்த நிதி பயன்படுத்திக்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளது.
ரேப்டீ எச்வி நிறுவனம், டெஸ்லாவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. தினேஷ் அர்ஜுன் மற்றும் மூன்று இணை நிறுவனர்களால் 2019ல் துவக்கப்பட்டது. மின் வாகனத்திற்கான மாற்றத்தை வேகமாக்கும் நோக்கத்துடன் நிறுவனம் துவக்கப்பட்டது.
Edited by Induja Raghunathan