Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'பிளாக்செயின்' என்றால் என்ன? இதோ ஒரு எளிமையான விளக்கம்!

பிளாக் செயின் நுட்பத்தின் ஆரம்ப கால பயன்பாடுகளில் ஒன்றாக 2009ல் பிட்காயின் அறிமுகமான பிறகு பல்வேறு பயன்பாடுகளுக்காக பிளாக்செயின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையாப்ன அம்சங்களை புரிந்து கொள்வோம் வாருங்கள்.

'பிளாக்செயின்' என்றால் என்ன? இதோ ஒரு எளிமையான விளக்கம்!

Monday September 06, 2021 , 3 min Read

அரசு மற்றும் தனியார் துறை செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பமாக 'பிளாக்செயின்' உருவாகியிருக்கும் நிலையில் இந்த நுட்பம் குறித்த ஆர்வமும் இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது.


கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனைகளுக்கு உதவுவதோடு, பிளாக்செயின் உலகலாவிய பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் சொத்து நிர்வாகம் உள்ளிட்டவற்றுக்காக பயன்படுத்தப்படுகிறது.


கிராண்ட் வியூ ஆய்வின் படி, உலகலாவிய Blockchain தொழில்நுட்பச் சந்தை, 2020ல் 3.67 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டிருந்தது. 2028ல் இது 82.4 சதவீத வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்காயின்

உங்களுக்கு பிளாக்செயின் நுட்பத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தால் அதன் அடிப்படை அம்சங்கள் இதோ:

பிளாக் செயின் அடிப்படை

பிளாக்செயின் அடிப்படையில், சங்கிலித்தொடரான கட்டங்களாகும். கட்டங்களில் தரவுகள் சேர்க்கப்படும் போது, ஏற்கனவே உள்ள கட்டங்களின் மீது புதியவை உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு கட்டமும், கிரிப்டோ முறையிலான ஹாஷ் (புதிய கட்டத்தை பழைய கட்டத்துடன் இணைக்கும் தகவல் துண்டு), கால சின்னம் மற்றும் பரிவர்த்தனை விவரத்தை கொண்டிருக்கும்.


ஹாஷ்கள், சங்கிலிகளை பிணைத்திருப்பதால், சங்கிலித்தொடரான கட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.


பரிவர்த்தனைகள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கம்ப்யூட்டர்கள் மற்றும் சாதனங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இவை ’முனை’ (nodes) என்றும் அழைக்கப்படுகிறது.


பிளாக்செயினின் மற்றொரு அம்சம், அவை 'பியர் 2 பியர்' (peer-to-peer (P2P)) வலைப்பின்னல் பயனாளிகளால் நிர்வகிக்கப்படுகிறது.


இந்தப் பயனாளிகள் வலைப்பின்னலில் மைய சர்வர் அல்லது நிர்வாகி கிடையாது. பயனாளிகள் மற்றொருவருக்கு தகவல் பரிமாற விரும்பினால் நேரடியாக அனுப்பலாம்.

மையமில்லா தன்மை

பரிவர்த்தனை தரவுகள் கொண்ட பொது பதிவேட்டின் (public ledger) நகலை பலர் வைத்திருப்பதால் பிளாக்செயின் பங்கீடு தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. எனினும் இது எல்லா நேரங்களிலும் மையமைல்லா தன்மை கொண்டதாகக் கருதப்படுவதில்லை.

மையமில்லா வலைப்பின்னலில், எந்த ஒரு பயனாளியும் பரிவர்த்தனையில் பங்கேற்கலாம். மேலும், பரிவர்த்தனையின் துல்லியம், மற்றும் பிரச்சனைகளை சரி செய்யும் அம்சம் இருக்க வேண்டும்.

பிளாக்செயின் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் கிரிப்டோ நாணயமான பிட்காயினை பொருத்தவரை அகழ்வு – மைனிங் (கணிணி புதிரை விடுவித்து புதிய நாணயங்களை உருவாக்குவது), பணி நிருபணம் (குறிப்பிட்ட கணிணி செயலாக்கம் நிகழ்ந்துள்ளது என்பதற்கான நிரூபணம்) ஆகியவை பதிவேட்டின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய மற்றும் அமைப்பின் பாதிப்பை தடுப்பதற்காக உள்ளன.

இந்த காரணத்தினால் தான், பிளாக்செயின் உருவாக்கத்தில் பிட்காயின் புரட்சிகரமானதாக கருதப்படுகிறது.

பிட்காயின்

பிட்காயின் முக்கியத்துவம்

2018ல் வெளியிடப்பட்ட பிட்காயின் வெள்ளை அறிக்கையில், இதன் அனாமதேய நிறுவனர் சடோஷி நகமோட்டோ, நிதி அமைப்பின் வாயிலாகச் செல்லாமல், ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு ஆன்லைன் பணத்தை நேரடியாக அனுப்ப வழி செய்யும் முற்றிலும் பயனாளிகள் இடையிலான ’மின்னணு ரொக்கம்’ என பிட்காயினை குறிப்பிட்டிருந்தார்.

முதல் பிளாக்செயின் பற்றி அவர் இப்படி குறிப்பிட்டிருந்தார்:

“ஹாஷ் அடிப்படையிலான பணி நிரூபணம் சார்ந்த தொடர் சங்கிலியிலான கால சின்னம் கொண்டவையாக பரிவர்த்தனைகளை இந்த வலைப்பின்னல் அமைத்து, பணி நிருபணத்தை மாற்றி அமைத்தால் மட்டுமே பதிவுகளை மாற்றலாம் எனும் நிலையை உண்டாக்குகிறது. நீண்ட சங்கிலி, பரிவர்த்தனை சங்கிலியின் அடையாளமாக மட்டும் அல்லாமல், இவை பல்வேறு கம்ப்யூட்டர் ஆற்றலில் இருந்து வந்ததையும் நிரூபிக்கிறது”.

கம்ப்யூட்டர் முனைகள் வலைப்பின்னலில் இருந்து வெளியேறி பின்னர் இணையலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


பிளாக்செயின் பரிவர்த்தனை

பிளாக்செயின் செயல்பாட்டை புரிந்து கொள்ள பிட்காயின் பிளாக் செயின் செயல்படும் உதாரணத்தை பார்க்கலாம்:


வழக்கமாக ஒருவர் இன்னொருவருக்கு ரூ.1,000 அனுப்பி வைக்க வேண்டும் எனில், அவர் வங்கிக்கு தெரிவித்து இந்த பரிவர்த்தனையை துவக்கி வைப்பார். இதற்கான தொகை இருப்பதை உறுதி செய்து கொண்ட பின் வங்கி அந்த தொகையை பரிவர்த்தனை செய்யும்.

இதனையடுத்து, அனுப்பியவர் வங்கிக் கணக்கில் 1,000 குறைந்து பெறுபவர் கணக்கில் 1,000 அதிகமாகும்.


இதற்குப் பதிலாக பிட்காயின் வடிவில் பணம் அனுப்ப விரும்பினால், இதற்கான செயல்முறை வேறுபட்டது. இதில் வங்கி போன்ற மைய அமைப்பு பரிவர்த்தனைகளை உறுதி செய்வதில்லை. இதற்கான ஒற்றை அமைப்பும் இல்லாத நிலையில், அனைத்து கம்ப்யூட்டர் முனைகளும் பரிவர்த்தனையை உறுதி செய்வதில் ஈடுபடுகின்றன. விநியோகிக்கப்பட்ட அமைப்பே இதற்கு காரணம்.

Bitcoin

பிட்காயினை அனுப்பி வைக்க, பெறுபவரின் பொது சாவியை அறிந்திருக்க வேண்டும். அதன் பிறகு மற்ற கம்ப்யூட்டர்கள் பார்வையிடம் வகையில் செய்தியை அனுப்ப வேண்டும். இதன் பிறகு கம்ப்யூட்டர் முனைகள் அதாவது பயனாளிகள், அமைப்பில் உருவாகும் புதிரை விடுவிக்க முயல்கின்றனர். இதற்காக அவர்கள் தகவல்களை ஹாஷ் செய்ய வேண்டும்.

இந்த செயல்முறையே மைனிங் என்று சொல்லப்படுகிறது. இதைச் செய்பவர்கள், புதிருக்கான விடை கிடைக்கும் வரை தகவலை தொடர்ந்து ஹாஷ் செய்ய வேண்டும். இதன் மூலம் பிட்காயின் அனுப்பி வைக்கப்படும்.

பிட்காயின் பரிவர்த்தனைக்கான விடையை கண்டறிவதன் மூலம் புதிய கட்டம் உருவாக்கப்பட்டு, மைனர்களுக்கான பரிசும் உருவாக்கப்படுகிறது.


பிட்காயின் வலைப்பின்னலில் பரிவர்த்தனை சேர்க்கப்பட்டது, மற்ற பயனாளிகள் அதை உறுதி செய்து பதிவேட்டில் இடம்பெற வைக்க முடியும்.


அதே நேரத்தில், அனுப்பியவர் பிட்காயின் வாலெட்டில் அதன் விவரம் சேர்க்கப்பட்டு, பெறுபவர் பிட்காயின் வேலட்டிலும் அதே போல விவரம் புதுப்பிக்கப்படும். வலைப்பின்னலில் இந்த பரிவர்த்தனை பதிவானதால், இதே பிட்காயினை இன்னொருவருக்கு அனுப்ப முடியாது.

பொது சாவிகள்

பிட்காயின் பெற அல்லது கிரிப்டோ நாணயங்களை பெற ஒருவருக்கு பொது சாவி மற்றும் தனி சாவி வேண்டும். கிரிப்டோ முறையிலான பொது சாவி, பணத்தின் உரிமையை உணர்த்துகிறது. பிட்காயினை அனுப்ப இந்த பொது சாவி முகவரி தெரிய வேண்டும்.


எனினும், இதை பெறுவதற்கான தனிச்சாவி ரகசியமானது. இது பாஸ்வேர்டு போன்றது.

தனிச்சாவியில் இருந்து பொது சாவி உருவாக்கப்படுகிறது. இதை யாராலும் மாற்றி அமைக்க முடியாது.

மற்ற பிளாக் செயின்கள்

2009ல் பிட்காயின் வெற்றிகரமாக அமலுக்கு வந்த பிறகு, வேறு வகை பிளாக்செயின்கள் உருவாக்கப்பட்டன. எத்திரியம் (Ethereum) மற்றும் ரிப்பில் (Ripple) போன்ற பிளாக் செயின்கள் உருவாக்கப்பட்டன.


ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்