ஒரே மாதத்தில் 4 உயர சிகரங்களில் ஏறி சாதனை படைத்த 'முதல் இந்திய பெண்' - யார் இந்த பல்ஜீத் கவுர்!
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்ஜீத் கவுர் மலையேற்றத்தில் புதிய சாதனை படைத்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். உலகின் நான்காவது உயரமான மலையான லோட்சே மலையை வெற்றிகரமாக ஏறி, ஒரு மாதத்திற்குள் 8,000 மீட்டர் உயரமுள்ள நான்கு சிகரங்களை ஏறிய முதல் இந்திய மலையேறுபவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்ஜீத் கவுர் மலையேற்றத்தில் புதிய சாதனை படைத்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். உலகின் நான்காவது உயரமான மலையான லோட்சே மலையை வெற்றிகரமாக ஏறி, ஒரு மாதத்திற்குள் 8,000 மீட்டர் உயரமுள்ள நான்கு சிகரங்களை ஏறிய முதல் இந்திய மலையேறுபவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
யார் இந்த பல்ஜீத் கவுர்?
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலன் மாவட்டத்தில் உள்ள பஞ்ரோல் கிராமத்தைச் சேர்ந்தவர் பல்ஜீத் கவுர், 27 வயதான அவர் மலையேற்றத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அவரது தந்தை அம்ரிக் சிங் ஹிமாச்சல் சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது ஒட்டுமொத்த குடும்பம் தாய் சாந்தி தேவியுடன் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலைகள் சூழ்ந்த பகுதியில் பிறந்து வளர்ந்ததால் பல்ஜீத்திற்கு சின்ன வயதில் இருந்தே மலையேற்றத்தில் அதிக ஆர்வம் உண்டு. பெற்றோர் இருவரும் மகளின் ஆர்வத்திற்கு தடை போடாமல், நன்றாக ஊக்கப்படுத்தினர். அதன் விளைவாகவே இன்று ஒரே மாதத்திற்குள் 8,000 மீட்டர் உயரமுள்ள நான்கு சிகரங்களை ஏறிய முதல் இந்திய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சின்ன குழந்தையாக இருந்தபோது, பல்ஜீத் தனது மூன்று உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து, விவசாய வேலைகளை நிர்வகிப்பதில் தாய் சாந்தி தேவிக்கு உதவி வந்துள்ளார். பக்கத்து கிராமமான மம்லிக்கில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த பல்ஜீத், பள்ளிக்குச் செல்வதை தவிர மீதமுள்ள நேரங்களை தாய்க்கு உதவுவதில் செலவிட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து அவருடைய அம்மா சாந்தி தேவி காந்தகாட் தெஹ்சில் தனது கிராமமான பஞ்ச்ரோலில் இருந்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,
"எங்கள் மகளின் சாதனை எங்களுக்கு மிக உயர்ந்த மரியாதையை கொடுத்துள்ளது,” என உணர்ச்சி பெருக்குடன் வெளிப்படுத்தியுள்ளார்.
பள்ளியில் பல்ஜீத் கவுர் தேசிய மாணவர் படையில் (NCC) தன்னைச் இணைத்துக் கொண்டார். ஒருமுறை NCC முகாமின் போது, பல்ஜீத் தனது முதல் முயற்சியை மலையேற்றத்தில் மேற்கொண்டார்.
20 வயதில், அவர் மவுண்ட் டியோ திப்பாவிற்கு தேசிய மாணவர் படை சார்பில் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவுடன் இணைந்து, 7,120மீட்டர் உயரமுள்ள மலைக்கு பயணம் செய்தார். ஆனால், 2015ம் ஆண்டு மோசமான வானிலை காரணமாக அந்த மலையேற்றம் பாதியிலேயே கைவிடப்பட்டது, இருப்பினும் அதற்கு முன்னதாக மலையேற்ற குழுவினர் 6,350 மீட்டர் உயரத்தை எட்டியிருந்தனர்.
அதன் பின்னர், ஓராண்டு கழித்து, 2016ல் பல்ஜீத் மீண்டும் எவரெஸ்ட் சிகரத்திற்கான தேசிய மாணவp படைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஒரு வருடமாக நேபாள்-திபெத் எல்லைக்கு அருகில் உள்ள 7,161 மீட்டர் உயரமுள்ள புமோரி மலையை பல்ஜீத், ராஜஸ்தானின் குன்பாலா ஷர்மாவுடன் இணைந்து ஏறி, இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய பெண் மலையேறுபவர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.
”மலையேற்றம் என்பது சாதாரண விஷயமல்ல சத்தான உணவு, தீவிர பயிற்சி, குளிருக்கு கதகதப்பான ஆடைகள் என அனைத்தையுமே வாங்க பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பிற விளையாட்டுக்களைப் போல் மலையேற்றத்திற்கு நிதி உதவி செய்யக்கூடிய நிறுவனங்கள் கிடைப்பது என்பது மிகவும் சவாலானது,” என பேட்டி ஒன்றில் பல்ஜீத் கவுர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பல்ஜீத் கவுரின் விடாமுயற்சிக்கு பயனாக பீக் புரமோஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பசாங் ஷெர்பா அவருக்கு உதவியுள்ளது.
ஒரே மாதத்தில் 4 சிகரங்களில் ஏறி சாதனை:
மே 21 அன்று லோட்சே மலையை ஏறி, ஒரே மாதத்தில் நான்கு 8,000 மீட்டர் சிகரங்களை ஏறிய முதல் இந்திய மலையேற்றபவர் என்ற பெருமையை பல்ஜீத் கவுர் பெற்றுள்ளார்.
பல்ஜீத் கவுர் தனது முகநூல் பக்கத்தில்,
"இந்த வெற்றிக்கு நான் மட்டும் தகுதியானவள் அல்ல, ஆனால் என்னுடன் தொடர்புடைய ஒவ்வொரு நபரும் இப்போது என்னுடைய இந்த வெற்றியை கொண்டாடுகிறார்கள். மேலும் விசேஷமாக என்னுடன் ஒவ்வொரு அடியிலும் நடந்து வரும் மிங்மா டாய் மற்றும் ஃபுரி டாய், ஒவ்வொரு முறையும் என்னை வழிநடத்தி, கவனித்துக் கொள்ளும் மிங்மா ஷெர்ரி ஃபூரி ஷெர்பா. என்னை ஆதரித்ததற்கு நன்றி. உண்மையில், தொலைதூர நீர் எடுப்பவர் முதல் அடிப்படை முகாமில் சமையல்காரர் வரை, என்னுடன் மலை உச்சிக்கு வரும் ஷெர்பா வரை, என்னுடைய இந்த திட்டத்தின் வெற்றிக்கு அவர்கள் அனைவரும் தகுதியானவர்கள். மேலும் இந்த குழுவை கையாளும் PEAK PROMOTION நிறுவனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் மிக்க நன்றி. பாபு ஷெர்பா பசங் மிக்க நன்றி நீங்கள் அனைவரும் உண்மையான ஹீரோக்கள் (ஷெர்பா டீம்) நான் இங்கு தான் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இந்த பயணத்தை ஆதரித்ததற்கு மிக்க நன்றி,” என அனைவருக்கும் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
பல்ஜீத் மற்றும் மிங்மா மே 22ம் தேதி எவரெஸ்ட், ஏப்ரல் 28 அன்று அன்னபூர்ணா (8,091 மீட்டர்) மற்றும் மே 12 அன்று காஞ்சன்ஜங்கா மலை (8,586 மீட்டர்) மற்றும் லோட்சே உட்பட நான்கு 8,000-மீ சிகரங்களை ஏறிய ஒரே இந்தியப் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.