'இந்தியாவில் முதன்முறையாக விளையாட்டு வீரர்களுக்கு ஐஐடி-யில் சீட்' - 5 பேருக்கு அட்மிஷன் தந்தது IIT Madras
விளையாட்டில் சாதனை புரிந்த ஐந்து மாணவர்களுக்கு இடம் அளித்து, சிறந்த விளையாட்டுவீரர்-வீராங்கனைகளுக்காக தனி மாணவர் சேர்க்கைப் பிரிவை ஏற்படுத்திய முதலாவது ஐஐடி என்ற பெருமையை மெட்ராஸ் ஐஐடி பெற்றுள்ளது.
ஐஐடியில் படிக்க வேண்டும் என்பது நிறைய மாணவர்களுக்கு லட்சியமாகவே உள்ளது. ஆனால், அங்கு சேர்வதற்கே நிறையப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அப்படிப் படித்தால் மட்டும்தான் அங்கு இடம் கிடைக்கும் என நிலை இதுவரை இருந்து வந்தது. ஆனால் இனி நிலைமை அப்படியில்லை. நன்றாக படித்தால் மட்டுமல்ல.. நன்றாக விளையாடினாலும் மெட்ராஸ் ஐஐடியில் இடம் கிடைக்கும்.
ஆம், விளையாட்டில் தங்கள் திறமையை நிரூபிக்கும் மாணவர்களை அங்கீகரித்து, அவர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில், சிறந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்காக தனி மாணவர் சேர்க்கைப் பிரிவை (SEA) ஏற்படுத்தியிருக்கிறது. ஐஐடி மெட்ராஸ் . இதன் மூலம் இந்தியாவிலேயே இந்த தனி மாணவர் சேர்க்கை பிரிவை அறிமுகப்படுத்தும் முதல் ஐஐடி என்ற பெருமையையும் மெட்ராஸ் ஐஐடி பெற்றுள்ளது.
இந்த, ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர்சேர்க்கை’ (SEA) பிரிவின் கீழ் தற்போது, தேசிய அளவில் சாதனை படைத்த ஐந்து தடகளவீரர், வீராங்கனைகளுக்கு ஐஐடியி-யில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் சாதனை
இத்திட்டத்தின்கீழ், இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு இளங்கலைப் பட்டப்படிப்பு பாடத்திட்டத்திலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படுகின்றன. இதில் ஒரு இடம் மாணவிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"நாட்டிலேயே முதன்முறையாக விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கையை தனது இளங்கலைப்படிப்புகளில் அறிமுகப்படுத்திய பெருமை ஐஐடிமெட்ராஸ்-க்கு உண்டு. விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்."
தகுதியான மாணவர்கள் தங்கள் விளையாட்டுகளில் தொடர்ந்து சிறந்து விளங்கும் அதேவேளையில் உயர்கல்வியைத் தொடர இத்திட்டம் ஊக்குவிக்கிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து, தேசிய அளவில் சாதனை படைத்து இக்கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஐந்து விளையாட்டுவீரர்-வீராங்கனைகளை வரவேற்றுப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில்,
"விளையாட்டுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை என்பது இளம்குழந்தைகளை சிறுவயதிலேயே விளையாட ஊக்குவித்தல் அவசியம் என்ற முக்கியச்செய்தியைத் தெரிவிக்கும் ஐஐடி மெட்ராஸின் முன்முயற்சியாகும். சம்பந்தப்பட்ட அனைவரையும் இதுசென்றடையும் என நான் மனதார நம்புகிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.
2024-25 கல்வியாண்டில் 'விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புசேர்க்கை' பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஐந்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகளின் விபரங்கள் பின்வருமாறு:
1. மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரோஹிபாவே (கைப்பந்துவீராங்கனை) - பி.எஸ் (மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல்) படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2. மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஆர்யமான்மண்டல் (வாட்டர்போலோ-நீச்சல்வீரர்) - பி.டெக் (கணினிஅறிவியல் மற்றும் பொறியியல்) படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.
3. டெல்லியைச் சேர்ந்த நந்தினிஜெயின் (ஸ்குவாஷ்வீராங்கனை) - பி.டெக் (கணினிஅறிவியல் மற்றும் பொறியியல்) படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.
4. டெல்லியைச் சேர்ந்த பிரபாவ்குப்தா (டேபிள் டென்னிஸ்வீரர்) - பி.டெக் (செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்) படிப்பில்சேர்க்கப்பட்டுள்ளார்.
5. ஆந்திராவைச் சேர்ந்த வங்கலாவேதவச்சன்ரெட்டி (லான் டென்னிஸ்வீரர்) - பி.டெக் (செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்) படிப்பில்சேர்க்கப்பட்டுள்ளார்.
இத்திட்டம் உருவான விதம் குறித்து, ஐஐடி மெட்ராஸ் விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா கூறும்போதும்,
“சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டு சிறப்பு மாணவர்சேர்க்கை திட்டம் கருத்தாக்கப்பட்டது. மெட்ராஸ் ஐஐடி-யில் பல்வேறு விதமான மற்றும் தகுதியான திறமைகள் வருவதைக் காண எங்கள் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி மிகவும் ஆர்வமாக உள்ளார். உள்நாட்டிலும் பல்வேறு துறையினருடன் பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, ஜூலை 2024 இல் விளையாட்டு சிறப்பு சேர்க்கை மாணவர்களின் முதல் குழு எங்கள் இளங்கலைப்படிப்புகளில் சேர்க்கப்பட்டது,” என்றார்.
தகுதி விபரம்
SEA-க்கான மாணவர் சேர்க்கை செயல்முறை JEE தேர்வுமூலம் நடைபெறுகிறது. மேலும், வேட்பாளர்கள் JEE (Advanced)-க்கு தகுதி பெற வேண்டும். ஆனால், அது கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) போர்டல் மூலம் அல்ல, மாறாக ஐஐடி மெட்ராஸ் மூலம் இயக்கப்படும் ஒரு தனி போர்டல் மூலம் இருக்கவேண்டும்.
இது தொடர்பான மேலும் தகவல்களை பின்வரும் வலைத்தளத்தில் காணலாம் - https://jeeadv.iitm.ac.in/sea/information.html
இந்ததிட்டத்தின் மூலம் சேர்க்கைக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் ஜேஇஇ (அட்வான்ஸ்டு)-ல் பொதுவான தரவரிசைப்பட்டியலில் (CRL) அல்லது பிரிவு வாரியான தரவரிசைப்பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏதேனும் தேசிய/சர்வதேச அளவிலான விளையாட்டுப்போட்டியில் குறைந்தது ஒரு பதக்கத்தையாவது வென்றிருக்கவேண்டும்.
குறிப்பிட்ட விளையாட்டுப்பட்டியலில் அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணின் அடிப்படையில் ஒருதனி 'விளையாட்டு தரவரிசைப்பட்டியல்' (SRL) தயாரிக்கப்படும். இந்தப்பட்டியலின் அடிப்படையில் மாணவர் இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.