தமிழ்நாட்டில் முதன் முறை - தூத்துக்குடி கிராம உதவியாளர் பணியில் சேர்ந்த திருநங்கை!
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் திருநங்கை ஒருவருக்கு கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
சமூகத்தைப் பொறுத்தவரை திருநங்கைகள் என்றாலே தவறான கண்ணோட்டமும், மோசமான அபிமானமும் உலவி வருகிறது. ஆனால், இதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆடை வடிவமைப்பு, அலங்காரம், நாட்டியம், கலை, இலக்கியம், மருத்துவம், வழக்கறிஞர் என பல துறைகளிலும் திருநங்கைகள் போட்டி போட்டு சாதனை படைத்து வருகின்றனர்.
குறைந்தபட்சம் யாரிடமும் கையேந்தி காசு கேட்காத அளவிற்கு நடைபாதையில் கையேந்தி பவன் நடத்தியாவது தன் மானத்துடன் வாழ்த்து வருகின்றனர். இப்படி விடாமுயற்சியுடன் வெற்றி பெற்ற சாதனை திருநங்கையாக மாறியுள்ளார் ஸ்ருதி, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கிராம உதவியாளராக தேர்வாகி தான் சார்ந்த சமுகத்தை பெருமைப்படுத்தியுள்ளார்.
திருநங்கை ஸ்ருதி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 4ஆம் தேதி மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற எட்டயபுரத்தைச் சேர்ந்த ஸ்ருதி என்கிற திருநங்கைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கி கெளரவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஸ்ருதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை எழுதி, அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை இவர் ஆவார்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மேலகரந்தை கிராம உதவியாளர் பணிக்கான, பணிநியமன ஆணையினை வழங்கினார்.
“என்னைப் போன்ற திருநங்கைகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என நினைக்கிறேன். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சொன்னது போல் அடுத்தடுத்து முயன்று வி.ஏ.ஓ. அளவிற்கு முக்கியப் பொறுப்பில் அமர்வேன். நான் திருநங்கைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும், பெருமை சேர்க்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள ஸ்ருதி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக தடைகளைத் தாண்டி பியூட்டி சலூன் நடத்தும் தொழில்முனைவராகிய திருநங்கை தீபா!