சமூக தடைகளைத் தாண்டி பியூட்டி சலூன் நடத்தும் தொழில்முனைவராகிய திருநங்கை தீபா!
தீபா பாஸ்கர் கங்குர்தே, திலீப் என்கிற அடையாளத்திலிருந்து தீபா என்கிற அடையாளத்திற்கு மாறுவதற்கு மிகப்பெரிய போராட்டத்தைக் கடந்ததுடன் பியூட்டி சலூன் தொடங்கி தொழில்முனைவராக உருவெடுத்திருக்கிறார்.
திலீப் என்கிற அடையாளத்திலிருந்து தீபா என்கிற அடையாளத்திற்கு மாறுவதற்கு மிகப்பெரிய போராட்டத்தைக் கடந்து வந்திருக்கிறார் தீபா பாஸ்கர் கங்குர்தே.
30 வயதாகும் திலீப், ஆரம்பத்தில் தன்னை ஒரு பெண்ணாகவே உணர்ந்தார். இதனால் சுற்றியிருந்தவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு இந்தத் திருநங்கை இன்று சுயமரியாதையுடன் கௌரவமாக தொழில் செய்து வருகிறார்.
உடல் ரீதியான அடையாளத்தைப் புரிந்துகொள்வதற்கு மிகப்பெரிய போராட்டத்தைக் கடந்து வந்த இவர், இன்று தன்னை ஒரு தொழில்முனைவராகி உலகிற்கு அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
மூன்று மாத கால பியூட்டி கோர்ஸ் முடித்த இவர் ஒரு மைக்ரோ தொழில்முனைவர் ஆகியிருக்கிறார். தனக்கான அடையாளத்தையும் புதிய பாதையையும் உருவாக்கிக்கொண்டு தலை நிமிர்ந்து நடை போட்டு வருகிறார்.
சமூக தடைகளை தவிடு பொடியாக்கினார்
மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியின் அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா. இவரது குடும்பத்தினர் விறகு விற்பனை செய்து வந்தனர்.
”என் குடும்பத்தில் என் அம்மா மட்டுமே வேலை செய்து சம்பாதித்து வந்தார். என்னையும் சிறு வயதிலிருந்தே வேலைக்கு அனுப்பிவிட்டார்கள். நானும் என் அண்ணணும் விறகு விற்கும் வேலையை செய்து வந்தோம்,” என்கிறார் தீபா.
தீபாவிற்கு நடனத்தின் மீது ஈடுபாடு வந்தது. மேடை ஏறி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். அது மட்டுமல்ல அவருக்கு பியூட்டிஷியன் வேலையில் ஆர்வம் பிறந்தது. பார்லர் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்.
பாலினம் சார்ந்த அடையாளத்தில் பிரச்சனை இருந்ததால், பள்ளியில் ஏராளமான சிக்கல்களை சந்தித்திருக்கிறார்.
“நான் எப்படி நடக்கிறேன், எப்படி நடனமாடுகிறேன் என்பதையெல்லாம் பார்த்து என் நண்பர்களும் ஆசிரியர்களும் என்னை கேலி செய்தார்கள். நான் ஒரு ஆண் என்றாலும் நடனம் ஆடும்போது பெண்ணைப் போல் உடல் அசைவுகள் இருப்பதாக கேலி செய்வார்கள். வேதனையாக இருக்கும். ஆசிரியர்களிடமோ அருகில் இருப்பவர்களிடமோ பேசுவதற்கே பயமாக இருக்கும். கூட்டத்திற்கு நடுவில் செல்ல பயப்படுவேன். யாரைப் பார்த்தாலும் பயமாகவே இருந்தது,” என்கிறார்.
தீபா தன்னை ஒரு பெண்ணாக அடையாளப்படுத்திக்கொள்வதை அவரது அண்ணன் விரும்பவில்லை. பெண்களுடனேயே இருப்பதாகவும் பெண்ணைப் போல் நடந்துகொள்வதாகவும் சுட்டிக்காட்டி அடித்திருக்கிறார். தீபாவின் அம்மா அவருக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்.
தீபா பியூட்டி சலூன் ஒன்றில் வேலையில் சேர்ந்தார். அங்கு வேலை செய்ய ஆரம்பித்த பிறகு அவரது அண்ணன் தொந்தரவு செய்வதை நிறுத்திக்கொண்டார். பிறகு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் திறன் இந்தியா திட்டத்திலிருந்து அவருக்கு ஆதரவு கிடைத்தது. இது அவருக்குக் கைகொடுத்தது.
புதிய பாதை
தீபா கடந்த 10 ஆண்டுகளாக அவரது பகுதியில் இருக்கும் எல்ஜிபிடிக்யூ+ சமூகத்துடன் இணைந்திருக்கிறார். இந்த சமூகத்தின் மூலம் திறன் இந்தியா திட்டத்தின் அதிகாரி ஒருவரைத் தொடர்புகொள்ளும் வாய்ப்பு தீபாவிற்குக் கிடைத்திருக்கிறது. அந்த அதிகாரி தீபாவை ஒரு கோர்ஸில் இணைந்துகொள்ள ஊக்குவித்திருக்கிறார்.
மேக் அப் பற்றிய அடிப்படை விஷயங்களை மட்டுமே தீபா தெரிந்து வைத்திருந்தார். 2020ம் ஆண்டு மூன்று மாதகால கோர்ஸ் ஒன்றில் சேர்ந்தார். அங்கு ப்ரொஃபஷனலாக பியூட்டிஷியன் வேலையை செய்யக் கற்றுக்கொண்டார்.
ஜன் சிக்ஷான் சன்ஸ்தான் திட்டம் தன்னிடம் இருந்த அடிப்படைத் திறனை சிறப்பாக மெருகேற்றிக்கொள்ள உதவியதாக தீபா தெரிவிக்கிறார்.
என்றாவது ஒரு நாள் சொந்தமாக பியூட்டி பார்லர் தொடங்க வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது.
“ஹேர் ஸ்பா, பிரைடல் மேக் அப் போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். பிறகு நாசிக்கில் என் வீட்டிற்கு அருகிலேயே சொந்தமாக பியூட்டி சலூன் தொடங்கினேன். ’திவ்யா பார்லர்’ என்று பெயர் வைத்தேன். பார்லர் நன்றாக செயல்படத் தொடங்கியது,” என்கிறார்.
இன்று தீபாவின் சலூனில் இரண்டு பெண்கள் வேலை செய்கிறார்கள். அவ்வப்போது தனக்கு ஆர்வமுள்ள மற்றுமொரு விஷயமான நடனத்திற்கும் நேரம் ஒதுக்கி வருகிறார்.
“சொந்தமாக தொழில் தொடங்குவது எனக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்தது. எனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டேன். எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தினரிடையே எனக்கு அங்கீகாரம் கிடைத்தது,” என்கிறார்.
தீபா கற்றுக்கொள்ளும் நிலையைக் கடந்து இன்று கற்றுக்கொடுக்கும் நிலையை எட்டியிருக்கிறார். புரொஃபஷனலாக செயல்படும் பியூட்டி சலூன் ஒன்றைத் தொடங்க விரும்புகிறார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் இணைந்து நடிகர், நடிகைகளுக்கு மேக் அப் போடவேண்டும் என்று விரும்புகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா