பாலின மாற்றம்; எதிர்பாராத விபத்து - தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிடிஇ ஆன சிந்து கணபதி!

தெற்கு ரயில்வேயின் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை சிந்து கணபதி என்பவர் பெற்றுள்ளார்.

பாலின மாற்றம்; எதிர்பாராத விபத்து - தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிடிஇ ஆன சிந்து கணபதி!

Monday February 12, 2024,

2 min Read

தெற்கு ரயில்வேயின் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை சிந்து கணபதி என்பவர் பெற்றுள்ளார்.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக டிரான்ஸ்ஜெண்டர் சிந்து கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.

ஒரு காலத்தில் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள், தற்போது சமூகத்தில் தங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர். அந்த வரிசையில், 37 வயதான சிந்து கணபதி என்ற திருநங்கை தெற்கு ரயில்வேயில் முதன் முறையாக டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநங்கை சிந்து

சிந்து கணபதி

சிந்தன் டு சிந்து:

சிந்து (முன்பு சிந்தன்) - அவருக்கு சொந்த ஊர் நாகர்கோவில். 19 ஆண்டுகளுக்கு முன்பு எர்ணாகுளத்தில் ரயில்வே பணியில் சேர்ந்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லுக்கு பணி மாறிய அவர், ரயில்வே மின் துறையில் பணியாற்றி வருகிறார்.

2003ம் ஆண்டு ரயில்வேயில் ஆண் ஊழியராகச் சேர்ந்த ஜி.சிந்தனுக்கு வாழ்க்கை ஆரம்பத்தில் எளிதாக இருந்தது. ஆனால், அவரது உடலமைப்பில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது.

“ரயில்வேயில் உதவியாளராகச் சேர்ந்தேன். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் உடலில் சில உடல் மாற்றங்களை உணர்ந்தேன். அது மெதுவாக மற்றவர்களுக்கும் புரிய ஆரம்பித்தது,” என்கிறார்.

ரயில்வே பயணிகளிடம் அன்புடன் நடந்து கொண்டாலும், அவரது பெண்மை கலந்த நடந்தை சிலரிடம் கிண்டல் மற்றும் விமர்சனங்களை பெற காரணமாக அமைந்துள்ளது.

திருநங்கை வாழ்க்கை:

ஏற்கனவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சிந்து, 2010ல் வேலையை விட்டுவிட்டார். மன அமைதி தேவை என்பதால் சக திருநங்கைகளுடன் வாழத் தொடங்கினார்.

18 மாத தனிமை வாழ்க்கைக்குப் பிறகு, மரியாதைக்குரிய வாழ்க்கையின் அவசியத்தை உணர்ந்து, மீண்டும் ரயில்வேயில் சேர விரும்பினார்.

“அதிகாரிகள் என் வேலையை மீண்டும் தர மறுக்கவில்லை என்றாலும், எனது பாலினம் முழுவதுமாக மாறியதால் அவர்கள் கொஞ்சம் தயங்கினார்கள். அப்போது தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) நிர்வாகிகள் செந்தில் குமார் மற்றும் ஜே.எம்.ரஃபி ஆகியோர் தான் அதிகாரிகளிடம் எனக்காக கடுமையாக வாதிட்டார்கள்,” என்கிறார்.

ரயில்வே மருத்துவர்களால் மருத்துவப் பரிசோதனை செய்து அதன் முடிவின் அடிப்படையில் அவரது பாலினத்தை முடிவு செய்ய வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

"அதிர்ஷ்டவசமாக, ரயில்வே நிர்வாகம் அவரது பாலின மாற்றத்தை ஏற்றுக்கொண்டு என்னை ஒரு பெண் ஊழியராக நடத்தியது," என்கிறார்.

எதிர்பாராத விபத்து:

ரயில்வே எலக்ட்ரிக்கல் துறையில் சீனியர் டெக்னீஷியனாக உயர்ந்த போது, 2020ல் எதிர்பாராத விபத்து ஒன்றில் சிந்து சிக்கினார்.

இதன் விளைவாக, விபத்து அவரை தொழில்நுட்ப வேலைக்கு தகுதியற்றவராக ஆக்கியது மற்றும் அவருக்கு தொழில்நுட்பமற்ற வேலை வழங்கப்பட்டது. இதைப்பற்றி சிந்து கூறுகையில்,

“ஒரு சிறிய விபத்தில் என் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மின் துறையிலிருந்து வணிகத் துறைக்கு மாற்றப்பட்டேன். தற்போது டிக்கெட் பரிசோதகர் பயிற்சி முடித்து பணியில் சேர்ந்துள்ளேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு,” என்கிறார்.
திருநங்கை சிந்து

கடந்த வாரம் திண்டுக்கல்லில் டிடிஇயாக சிந்து நியமிக்கப்பட்டார்.

“எனக்கு ஸ்லீப்பர் கிளாஸ் TTE ஆகவும், திண்டுக்கல் ஸ்டேஷனில் லாபியை இயக்கவும் இரட்டை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனது உடல் மாற்றங்களை பெரும்பான்மையான பொதுமக்கள் ஏற்றுக்கொள்வதை பார்த்து நான் ஆச்சர்யம் அடைகிறேன்,” எனக்கூறியுள்ளார்.

திண்டுக்கல்லுக்கு அவர் டிடிஇயாக நியமிக்கப்பட்டதை பலரும் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். அப்போது அங்கு வந்த பயணிகள் பலரும் தன்னை கைக்குலுக்கி பாராட்டியதை நினைத்து நெகிழ்ந்து போயுள்ளார்.

"நான் அதிக எண்ணிக்கையிலான பயணிகளுடன் பணியாற்ற வேண்டிய இந்தப் பதவியை மனப்பூர்வமாகத் தேர்ந்தெடுத்தேன். இது எனக்கு மட்டுமல்ல, சமூகத்தில் என்னைப் போன்றவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்,” என்றார்.

சமூகத்தில் எந்த கட்டத்திலும் திருநங்கைகள் நம்பிக்கை இழக்கக் கூடாது; கல்வி மற்றும் கடின உழைப்பால் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என உத்வேகமூட்டியுள்ளார்.

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற