’கோடீஸ்வரி’-யில் ரூ.12.50 லட்சம் வென்ற நாடோடி இனத்தின் முதல் பெண் பட்டதாரி!

நடு ரோட்டில் காலில் சலங்கை கட்டி, சாட்டையால் வெறும் உடம்பில் அடித்து, கையை கிழித்து ரத்தம் சொட்டி பிழைக்கும் நாடோடி இனத்தைச் சேர்ந்த ஈஸ்வரி பல அல்லலுக்கிடையே டிகிரி முடித்து, இப்போது அறிவுப் போட்டியில் பணப்பரிசு வென்றுள்ளார்.

14th Jan 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

பேருந்து நிலையம், திரையரங்குகள், ஷாப்பிங் மால்களின் வெளிப்புறம் என மக்கள் அதிகமாய் கூடும் இனங்களில் எல்லாம் இவர்களைக் காணலாம். மக்கள் கூட்டத்தின் மையத்தில், காலில் சலங்கை, கையில் தடிமனான சாட்டையுடன் வெற்று உடலில் நிற்கும் அவர்கள், அவர்களது உடலில் சாட்டையை அடிக்க, அவர்களது துணைவியார் சாட்டையடிக்கேற்ற ராகத்தில் உருமிக் கொட்டு அடிப்பர். பின், கத்தியால் கையை கிழித்துக் கொள்ளும் அவர், அவரது சிறு பிள்ளையை படுக்கவைத்து அவர்கள்மீது ரத்தத்தை சொட்டு சொட்டாய் சிந்தவிடுவர். இதைக் காணும் கூட்டத்தார், சில்லறைகளை அவர்களுக்கு வழங்குவர். இது தான் நாடோடிகளின் தொழில். அச்சில்லறைகளே அவர்களது அரைசாண் வயிற்றுப்பசிப் போக்கி, குடும்பத்தை நடத்த உதவும் வருமானம். ஒரு நாள்பொழுதை ஓட்டவே ரத்தங்களை வியர்வையாக சிந்தும் சூழலில், கல்வி அவர்களுக்கு எட்டாக்கனியே!


இப்படிப்பட்ட ஊர் ஊராக சுற்றிப்பிழைக்கும் நாடோடி இனத்தைச் சேர்ந்த முனியாண்டி ஒரு நாள் 200 ரூபாய் சம்பாதிச்சு குடும்பத்தைக் காப்பாற்ற தன்னை சாட்டையால் அடித்துக் கொள்கிறார். ஆனால் தன்னைப் போல் அடுத்த சந்ததியும் இந்த தொழிலில் விழுந்து வீணாய் போக விரும்பாத அவர், தன் மகன் ஈஸ்வரியை படிக்க வைத்துள்ளார். சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் அங்கே, இங்கே அல்லல்பட்டு எப்படியோ பள்ளி, மற்றும் கல்லூரியின் பட்டமும் பெற்றுள்ளார் ஈஸ்வர்.

kodeeswari

கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வென்ற ஈஸ்வரி

மதுரை தனியார் கல்லூரியில் இப்போது எம்.ஏ. ஆங்கில மொழி படிக்கும் ஈஸ்வரி, தங்கள் சமூகத்துக்கு விடிவு கிடைக்க சாதி சான்றிதழும், வெளி உலகில் அவர்களைப் பற்றிய வெளிச்சமும் கிடைக்க எண்ணி, பெண்களுக்கு பிரத்யேகமாக நடத்தப்படும் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்து தேர்வும் ஆனார்.


பல கட்டத்துக்குப்பின் ஹாட் சீட்டில் நடிகை ராதிகா முன் கம்பீரமாக உட்கார்ந்த ஈஸ்வரி, தன் அறிவாற்றலால் டக்-டக் என கேள்விகளுக்கு பதில் அளித்து, கடையில் வென்று சென்ற பரிசுத்தொகை ரூ.12.50 லட்சம். இத்தனை பெரிய தொகையை வென்றும் அவர் மிகவும் அடக்கத்துடன் இருந்தார்.

“இந்த பரிசுத் தொகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தாலும், என்னைப் போன்ற என் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் படித்து முன்னேற நான் ஒரு எடுத்தக்காட்டாகவும், வழிகாட்டியாகவும் இருக்கவே இதில் கலந்துகொண்டேன்,” என்றார் ஈஸ்வரி.

நாடோடி இனத்தைச் சேர்ந்த ஈஸ்வரியின் கதை

உடலை வறுத்தி வாழும் வாழ்க்கை தன்னோடு ஒழியட்டுமென, மகளை இளங்கலை பட்டப்படிப்பு படிக்க வைத்து, முதுகலை பட்டம் படிக்க வைக்கிறார் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி. அவரது மூத்த மகள் ஈஸ்வரி, பி.ஏ. ஆங்கிலம் முடித்து அவர்களது சமூகத்தின் முதல்பெண் பட்டதாரி ஆகியதுடன், அவருக்கு பின்னான சந்ததியினர் அவரது தடத்தில் நடந்திடுவதற்கான பாதையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.


“கைய கிழிச்சுக்கிறது, ரத்தம் சிந்துறது, பொண்டாட்டிய உருமி கொட்டு அடிக்கச் சொல்றது, பிள்ளைகளை வெயில காட்டில் படுக்க வைத்து அவங்க வயித்துல ரத்தம் சிந்தி சம்பாதித்து பிழைக்கிறது எங்க கூட்டம். எங்க தாத்தா எங்க அப்பாவை படிக்க வைக்கல. எங்க அப்பாவும் என்னை படிக்க வைக்கல. நாம தான் இப்படி நாடோடி பிழைப்பு நடத்துறோம். நம்ம பிள்ளைகளை அப்படி ஆகிவிடக்கூடாது. இந்த வாழ்க்கை நம்மளோட போட்டும்னு எப்படியாச்சும் என் பிள்ளைகளை படிக்க வைக்கணும்னு நினைச்சேன்,” என்றார் முனியாண்டி.


அவரை தொடர்ந்து ஈஸ்வரி பேசுகையில்என் பெயர் ஈஸ்வரி. நான் மதுரை சக்கிமங்கலம் கிராமத்தில் இருக்கேன். நான் எம்.ஏ. இங்கிலீஷ் படிச்சிட்டு இருக்கேன்.

“எங்க சமூகத்தில் படிக்கும் முதல் பொண்ணு நான். நான் படிச்சு முன்னுக்குவந்தா தான் எனக்குப் பின்னாடி வர்றவங்க படிக்கமுடியும் என்பதால, நான் படிக்கணும்னு முடிவில் இருந்தேன். என் கூட 3 தங்கச்சி, 2 தம்பி இருக்காங்க. என்னுடைய 2 தங்கச்சியும் எங்க தொழிலுக்குபோயி என்னை படிக்க வைக்கிறாங்க,” என்றார் ஈஸ்வரி.

ஏற்கனவே, வயிற்றுப் பிழைப்பை பார்ப்பதே அவர்களுக்கு பெரும் போர்களமாய் இருக்கையில், வாழ்வின் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்பவர்களுக்கு முட்டுக் கட்டையாய் உள்ளது அவர்களுக்கான சாதி சான்றிதழ் பெறும் பிரச்சினை. சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினாலே, அவர்களது சமூகத்தில் குழந்தைகள் பள்ளிப்படிப்புக்கு மேல் படிப்பதில் சிரமம் இருக்கிறது. ஈஸ்வரியும் அதைக் கடந்தே வந்து, அதற்காக போராடிக் கொண்டும் இருக்கிறார்.

ஈஸ்வரி பெற்றோர்

“12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத கண்டிப்பா சாதி சான்றிதழ் வேணும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் கலெக்டரிடம் கையெழுத்து வாங்கி எக்ஸாம் எழுதினேன். அரசுக் கல்லூரியில் சேர கண்டிப்பா சாதி சான்றிதழ் வேணும்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் நான் ஒவ்வொரு காலேஜா அலைஞ்சு, ஒரு தனியார் கல்லூரியில் விண்ணப்பித்தேன்.

“எங்களுக்கு ஏன் சாதி சான்றிதழ் கொடுக்க மறுக்கிறாங்கனா, உங்க தாத்தா பாட்டி எப்படி வாழ்ந்தாங்கனு ஒரு ஆதாரம் கேட்கிறாங்க. நாங்க ஒரு இடத்தில் வாழ்ந்து இருந்தோம்னா, அதற்கான ஆதாரம் இருந்திருக்கும். நாடோடிகளாகவே வாழ்க்கையை நடத்தியதால், எங்களால எந்தவொரு ஆதாரத்தையும் கொடுக்க முடியல. 40 வருஷமா போராடிட்டு தான் இருக்கோம். இன்னும் கிடைக்கல,” என்று வருத்தத்துடன் கூறினார் ஈஸ்வரி.

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகும் ‘கோடீஸ்வரி’யில் பங்கேற்று ஈஸ்வரியின் வாழ்வு வெளிச்சத்துக்கு வந்ததுடன், அவரது வாழ்வும் வெளிச்சமாகி உள்ளது.


ஈஸ்வரியின் வேண்டுகோளை முன்னெடுத்துச் சென்ற நடிகை ராதிகா மற்றும் கோடீஸ்வரி குழுவினர், தமிழக அரசு செயலாளர்களுடன் பேசி, அவருக்கு சாதி சான்றிதழ் கிடைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். அரசாங்கமும் ஈஸ்வரியை சந்திக்க நேரம் தந்துள்ளதாக நிகழ்ச்சியில் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல் மற்றும் பட உதவி: கலர்ஸ் தமிழ்


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

Our Partner Events

Hustle across India