Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஓலா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சச்சின் பன்சால்!

ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சலின் பிரத்யேக நேர்காணல்!

ஓலா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சச்சின் பன்சால்!

Tuesday February 26, 2019 , 6 min Read

ஃப்ளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால், பவிஷ் அகர்வாலின் வாடகை கார் சேவை நிறுவனமான ஓலா நிறுவனத்தில் மிகப்பெரியத் தொகையை முதலீடு செய்துள்ளது குறித்து நாம் செய்திகளில் பார்த்திருப்போம்.

சச்சின் ஓலா நிறுவனத்தில் 650 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஃப்ளிப்கார்ட் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் அவருக்குக் கிடைத்த தொகையிலிருந்து இது பத்து சதவீதத்திற்கும் அதிகமானதாகும். இது பவிஷ் மீதும் அவரது நிறுவனமான ஓலா மீதும் சச்சினுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

வாடகை கார் சேவையளிக்கும் வெளிநாட்டு நிறுவனமான ஊபருடன் உள்நாட்டு நிறுவனமான ஓலா உள்நாட்டு சந்தையில் மட்டுமல்லாது வெளிநாட்டு சந்தையிலும் கடுமையாக போட்டியிட்டு வருகிறது.

இந்த இரு தொழில்முனைவோரையும் சந்தித்தபோது இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலின் வளர்ச்சியை என்னால் உணரமுடிந்தது. 2009-ம் ஆண்டின் துவக்கம் முதல் 2019-ம் ஆண்டு வரையிலான பயணத்தில் இந்த நிறுவனர்கள் அனுபவம் நிறைந்த தொழில்முனைவோராக உருவாகியுள்ளனர். ஒரு காலகட்டத்தில் அனுபவமற்ற இளம் நபர்களாக களமிறங்கிய இவ்விருவரும் உலகளவிலான ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் நற்பெயரைப் பெற்றுள்ளனர். இந்தப் பயணத்தில் இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி உலகளவிலான பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வணிகங்களை உருவாக்கியுள்ளனர்.

சச்சின் என்கிற தனிநபர் ஒருவர் இவ்வளவு அதிகமான தொகையை ஓலா போன்று இணையம் சார்ந்து செயல்படும் உள்நாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இது ஓலா போன்ற இந்திய வணிகங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கும் தீர்வுகள் மீது இருக்கும் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் உலகிற்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது.

மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான தீர்வுகளை உருவாக்கும் இளம் தொழில்முனைவோர் மீது அனுபவமிக்க இந்திய தொழில்முனைவோர் நம்பிக்கை வைத்திருப்பதை உணர்த்தும் விதத்தில் எதிர்கால முதலீடுகள் அமையும் என்பதையே இந்தப் போக்கு சுட்டிக்காட்டுகிறது.

இந்த குறிப்பிடத்தக்க முதலீடு குறித்து பவிஷ் அகர்வால் யுவர் ஸ்டோரியிடம் பகிர்ந்துகொள்கையில்,

“இந்தியாவில் இணையம் சார்ந்து செயல்படும் பிரிவில் இத்தகைய முதலீடு இதற்கு முன்பு செய்யப்படவில்லை. சச்சின் எங்களது செயல்பாடுகள் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளார். எனவே ஓலாவைச் சேர்ந்த அனைவருக்கும் இது மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கிறது. சச்சினுடன் இணைந்து எதிர்காலத்தில் நாங்கள் செயல்படுவது குறித்து அதிக ஆர்வம் கொண்டுள்ளோம்,” என்றார்.

ஓலா இதுவரை 3.5 பில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது. Temasek, Softbank போன்றோர் இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் ஆவர். ஓலா நிறுவனத்தை சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக்குவதற்காக சீரிஸ் ஜே நிதிச்சுற்று உயர்த்தி வருகிறது. சச்சினின் முதலீடு இந்த நிதிச்சுற்றின் ஒரு பகுதியாகும்.

இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலில் பொதுவாக ஊடகங்களில் அதிகம் இடம்பெறாத சச்சின் பன்சால், பவிஷ் அகர்வால் இருவரும் இந்த முதலீட்டு ஒப்பந்தம் குறித்தும் முதலீடு செய்யப்பட்டதன் காரணம் குறித்தும் ஓலாவின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் வீடியோ நேர்காணலில் பகிர்ந்துகொண்டனர்.

நீண்ட கால நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட முதலீடு

நீண்ட கால நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே ஓலாவில் முதலீடு செய்துள்ளதாக சச்சின் தெரிவிக்கிறார். அவர் கூறுகையில்,

”இந்த முதலீடு தொடர்பாக நான் நீண்ட கால நோக்கத்தைக் கொண்டுள்ளேன். இரண்டாண்டுகளுக்கும் குறைவாக நாம் திட்டமிட்டால் அது உண்மையில் முதலீடு ஆகாது; வெறும் அனுமானமாகவே கருதப்படும். முதலீடு என்பது நீடித்த இணைப்பாகும்,” என்றார்,

இதுவரை இந்தியத் தொழில்முனைவோர் வணிகத்தில் வளர்ச்சியடைந்து வருகையில் அதிகளவிலான முதலீட்டிற்கு வெளிநாட்டு நிதியையே பெரிதும் சார்ந்திருந்தனர். அத்துடன் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து உலகளவில் செயல்படும் நிறுவனங்களோட போட்டியிடும் நிலையில் ஆதரவளிக்க உள்நாட்டு நிதி கிடைக்காதது தொழில்முனைவோரிடையே ஒரு பெரும் குறையாகவே இருந்து வந்தது.

எனவே சச்சினின் ஓலா உடனான நீண்ட கால இணைப்பு வரவேற்கத்தக்க மாற்றமாகும்.

நீண்டகால அடிப்படையில் இந்தப் பகுதியில் அதிக மதிப்பு கூட்டப்படும் என நான் திடமாக நம்புகிறேன். இந்த நடவடிக்கையானது தொழில்முனைவு முயற்சிகள் போன்றே திருப்திகரமாக இருக்கப் போகிறது. ஒரு இந்திய நிறுவனம் உலகளவிலும் உலகளவிலான பார்வையுடனும் உருவாக்கப்பட்டது திருப்தியளிக்கக்கூடியதாக உள்ளது,” என்றார் சச்சின்.

அத்துடன் சச்சின்; ஓலா நிறுவனத்தில் செய்துள்ள முதலீடு பவிஷ் மற்றும் சச்சின் இடையே இருக்கும் தனிப்பட்ட இணைப்பை வெளிப்படுத்துகிறது. அதாவது இருவரிடையே உள்ள பரஸ்பர மரியாதை மற்றும் அன்பு, தொழில்முனைவுப் பயணத்தின் மீதுள்ள ஈடுபாடு, அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்குவதில் இருக்கும் உந்துதல் ஆகியவற்றை சுட்டிக்காட்டுகிறது.

”நாங்கள் 2012-2013 முதல் நண்பர்கள். அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். கடந்த ஆண்டு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு என்னுடைய சொத்திருப்பை இவ்வாறு முதலீடாக பயன்படுத்திக்கொள்ள விருப்பம் உள்ளதா என பவிஷிடம் கேட்டேன்,” என்றார் சச்சின்.

மிகப்பெரிய நிறுவனங்கள் சந்தையிலிருந்து வெளியேறும் போக்கானது புதிய வணிக முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது என்பதை ஓலா நிறுவனத்தில் சச்சினின் முதலீடு உணர்த்துகிறது. பின்னி பன்சாலுடன் இணைந்து நிறுவிய மின்வணிக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் சச்சின் பன்சால் தனது பங்குகளை கடந்த ஆண்டு வால்மார்ட் நிறுவத்திற்கு விற்பனை செய்தபோது கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் பெற்றார்.

Sig Tuple என்கிற மருத்துவ தொழில்நுட்ப ஸ்டார்ட் அப், Unacademy என்கிற கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் போன்ற பல்வேறு இந்திய ஸ்டார்ட் அப்களில் ஏற்கெனவே இவர் முதலீடு செய்துள்ளார். இவர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உலகளவிலான தீர்வுகளை உருவாக்கும் வணிகங்களில் கவனம் செலுத்துகிறார்.

ஓலா நிறுவனமே சச்சின் முதலீடு செய்வதற்கான தேர்வாக இருந்தது.

”பவிஷின் தொழில்முனைவுப் பயணத்தை நான் ஆரம்பத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். அதேபோல் ஓலா நிறுவனமும் பல்வேறு ஏற்ற இறக்கங்களையும் சவால்களையும் பல சிக்கலைகளையும் கடந்து வந்துள்ளது என்பதையும் நான் அறிவேன். எனவே இதை நான் ஒரு வாய்ப்பாகவே கருதினேன்,” என்றார்.

சச்சினைப் போன்ற தொழில்முனைவோரிடமிருந்து கிடைத்த உந்துதலைக் கொண்டே தனது தொழில்முனைவுப் பயணம் துவங்கப்பட்டதாக தெரிவிக்கிறார் பவிஷ்.

”என் பெற்றோரிடம் என்னுடைய தொழில்முனைவு முயற்சி குறித்து தெரிவித்தபோது அவர்கள் தயக்கம் காட்டினர். அவர்களிடம் நான் சச்சினை உதாரணம் காட்டினேன். நான் சச்சினுடன் பழகிய பிறகு அவரது லட்சிய சிந்தனையையும் செயல்படுத்துவதில் இருக்கும் கவனத்தையும் கண்டேன். அவர் எப்போதும் எனக்கு உந்துதலளித்து வருகிறார். எங்களது இந்த இணைப்பு மிகப்பெரிய அளவில் மதிப்பை சேர்க்கும் என நம்புகிறேன்,” என்றார்.

ஏற்கெனவே இந்திய ஸ்டார்ட் அப்களில் 12 முதலீடுகளைச் செய்துள்ள சச்சின், கடந்த டிசம்பர் மாதம் BAC Acquisitions என்கிற அவரது ஹோல்டிங் நிறுவனத்தை பதிவு செய்தார். பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி சச்சின் ஹோல்டிங் நிறுவனத்தில் 99.01 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இது ஆரம்ப நிலையில் இருந்து நடுத்தர நிலை வரையிலும் உள்ள ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்ய பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளராகவும் தொழில்முனைவோராகவும் செயல்படுவது குறித்து சச்சின் தெரிவிக்கையில் மீண்டும் ஸ்டார்ட் அப் துவங்குவதற்கு 83 சதவீத வாய்ப்புள்ளது என்றும் முதலீடு குறித்து கவனமாக தேர்வு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

”நான் பல காலமாக முதலீடு செய்து வருகிறேன். வருங்காலத்தில் சுவாரஸ்யமான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முன்வரும் நிறுவனங்களை கவனமாக தேர்வு செய்தே முதலீடு செய்ய உள்ளேன். எனினும் நான் முழு நேர முதலீட்டாளர் இல்லை. அதில் என்னுடைய பங்களிப்பு சற்று அதிகரித்துள்ளது. என்னுடைய நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. ஓலா இதற்கு சிறந்த உதாரணம்,” என்றார் சச்சின்.

ஓலாவின் தாக்கம்

மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் திறன்தான் தனக்கும் தன்னைப் போன்ற மற்ற தொழில்முனைவோருக்கும் ஊக்கமளிக்கிறது என்கிறார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓலா நிறுவனத்தைத் துவங்கிய பவிஷ்.

”மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி மேம்படுத்தவேண்டும் என்பதே எங்களுக்கு உந்துசக்தியாக இருந்து வருகிறது. போக்குவரத்து என்பது அனைவரின் முக்கியத் தேவையாக இருக்கிறது. அங்குதான் அதிக பணம் செலவிடப்படுகிறது. இதில் தொடர்புடைய னைவருக்கும் சிறப்பான அனுபவத்தை வழங்க நவீன தொழில்நுட்பத்தை கையிலெடுத்து போக்குவரத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் விதத்தில் முக்கியக் கவனம் செலுத்துகிறோம்.”

இந்தியாவில் 125 மில்லியன் பயனர்கள் இருப்பதாகவும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுனர் பார்ட்னர்கள் இருப்பதாகவும் ஓலா தெரிவிக்கிறது. அதன் தளம் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் ஒரு பில்லியன் சவாரிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் செயல்படத் துவங்கியது. எனவே ஓலா சிறப்பான ஒரு பிரிவில் சிறப்பான குழுவைக் கொண்டு இயங்கும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் என்பது தெளிவாகிறது. இது போக்குவரத்து துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பு இருப்பதையே உணர்த்துகிறது என்கிறார் சச்சின்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஃப்ளிப்கார்ட் துவங்கப்பட்டபோது இந்தியாவின் ஜிடிபி ஒரு ட்ரில்லியன் டாலராக இருந்தது. இன்று 3 ட்ரில்லியன் டாலராக உள்ளது. நாங்கள் நீண்ட பாதையைக் கடந்து வந்துள்ளோம். இந்த பொருளாதார வளர்ச்சியில் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக பலனடையும். போக்குவரத்துத் துறை மிகப்பெரிய அளவில் செயல்பட உள்ளது. ஓலா தனக்கான இடத்தை நிலை நிறுத்தியுள்ளது,” என்றார்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, யூகே போன்ற பகுதிகளில் விரிவடைந்துள்ள ஓலா, இந்தியாவிலும் 110-க்கும் அதிகமான நகரங்களில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. இதன் போட்டி நிறுவனமான ஊபர் இந்தியாவில் அதன் செயல்பாடுகளை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் துறை 215 பில்லியன் டாலர் மதிப்புடைய துறையாக இருக்கும் என எகனாமிக் சர்வே குறிப்பிடுகிறது.

பவிஷ் கூறுகையில்,

“நாம் தற்போதுள்ள நிலை மாறுபட்டது. நாம் நீண்டகால அடிப்படையில் சிந்திக்கவேண்டியது அவசியம். இந்திய வணிகம் நிலையாக இருக்கையில் உலகளவில் போக்குவரத்து துறையில் சிறப்பிப்பதற்கான வாய்ப்பை இந்த சிந்தனை வழங்கும்,” என்றார்.

உலகளவில் ஒவ்வொரு பகுதிகளிலும் சந்தை மாறுபட்டிருக்கும். எனவே உலகளவில் செயல்பட திட்டமிடுகையில் மாறுபட்ட சிந்தனை தொடர்பான சவால்கள் இருக்கும்.

“ஒவ்வொரு நிலையிலும் சவால்களும் இருக்கும். அதே சமயம் வாய்ப்புகளும் இருக்கும்,” என்றார்.  

சவால்கள் இருப்பினும், மாற்றத்தை ஏற்படுத்தவும் நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் ஓலா பெருமிதம் கொள்கிறது.

”நாங்கள் எப்போதும் பெரிய நோக்கத்தைக் கொண்டிருப்போம். நீண்ட கால அடிப்படையில் சிந்திப்போம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்வோம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவால் நவீன தொழில்நுட்பத்திலும் வணிக மாடல்களிலும் சிறந்து விளங்கமுடியும். நாங்கள் எப்போதும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டெ செயல்படுகிறோம். ஆனால் இடையில் குறுகிய காலத்தில் சில சிக்கல்கள் இருப்பது இயல்பே. நீண்டகால அடிப்படையில் மதிப்பை உருவாக்குவதே ஓலாவின் முக்கியக் குறிக்கோளாகும்,” என்றார் பவிஷ்.

ஆங்கில கட்டுரையாளர் : ஷ்ரத்தா ஷர்மா | தமிழில் : ஸ்ரீவித்யா