'வந்தேன்டா பால்காரன்’ - தாத்தாவை பின்பற்றி Mr.Dairy என தொழில் முனையும் பேரன்!
1962ம் ஆண்டு நானக் சிங் என்பவரால் துவங்கப்பட்ட பால் வர்த்தக நிறுவனம் சில காரணங்களால் மூடப்பட்டது. 18 வருடங்கள் கழித்து, குடும்ப மரபை தக்க வைக்க இந்திய உள்நாட்டு மாடுகளிடமிருந்து மட்டுமே கிடைக்கும் ஏ2 பாலை வர்த்தகம் செய்கிறார் அவரின் பேரன்.
மிஸ்டர் டைரி என்கிற தனது பிராண்டினால், துஷார் சிங், புரதச்சத்து மிக்க ஏ2 பாலை மக்களுக்கு சரியான முறையில் கொண்டு போய் சேர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்.
’மில்க்மேன் ஆப் இந்தியா’ என்று புகழப்படும் வர்கீஸ் குரியன் அவர்களால் வெள்ளைப் புரட்சி 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த புரட்சியால் இந்தியாவில் முக்கியமான கால்நடை பகுதிகளில், தனிநபர் பால் இருப்பு 1950-51ல் நாளுக்கு 130 கிராமில் இருந்து 2012-13ல் நாளுக்கு 299 கிராம் என உயர்ந்துள்ளது.
ஆனால், இந்த புரட்சி தொடங்குவதற்கு முன்னரே, இதே போன்ற ஒரு வியாபார மாதிரி 1962ஆம் வருடம் நானக் சிங் என்பவரால் பின்பற்றப்பட்டது, அவரால் டெல்லியில் நானக் பால் துவங்கப்பட்டது.
அவரது பேரன் துஷார், நம்மிடம் பேசுகையில்,
"என் தாத்தா விவசாயிகளிடமிருந்து பால் வாங்கி அதை வட இந்தியாவில் இருக்கும் பெரிய நகரங்களுக்கு விற்பனை செய்வார். அவர் நெஸ்லே போன்ற பெரிய நிறுவனங்களுக்கும், டில்லி பால் திட்டம் மற்றும் இந்திய ராணுவத்திற்கும் விநியோகம் செய்தார். 2001 வரை இந்த வியாபார மாதிரியை பின்பற்றிய நாங்கள் விவசாயிகள் தரும் பாலில் கலப்படம் இருப்பதை கவனித்தபோது நிறுத்திவிட்டோம்,” என்று கூறினார்.
அமுல் நிறுவனத்திற்கு முன்னரே, பாலை பேக்கேஜிங் செய்து பால் விற்க ஆரம்பித்த முதல் நிறுவனங்களில் ஒன்றான ’நானக் பால்’, நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துள்ளது என்பதை விளக்கினார்.
ஆனால், இந்த வியாபாரம் விவசாயிகளிடமிருந்து பால் பெற்று அதை விற்பதால், நானக் அவர்களால், பாலின் தரத்தை கண்காணிக்க முடியாமல், 2001ல் வியாபாரத்தை மூட வேண்டிய நிர்பந்தனை ஏற்பட்டது.
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு :
18 வருடங்கள் கழித்து, குடும்ப மரபை தக்க வைக்க ’மிஸ்டர் டைரி’ என்ற புது உருவில், துஷார் தரமான பாலை விற்பனை செய்யத் துவங்கினார்.
7 கோடி ரூபாய் சுய நிதியுடன், சுவையிலும் தரத்திலும் மற்ற பால்களைவிட உயர்ந்த இந்திய உள்நாட்டு மாடுகளிடமிருந்து மட்டுமே கிடைக்கும் ஏ2 பாலை மே 2019 முதல் விற்கத் தொடங்கினார் துஷார்.
"மக்கள் பல வருடங்களாக கலப்பட பாலையே பருகி வருகின்றனர். பாலில் ஏ2 புரதம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் கலப்படமான தீனியாலும், விவசாயிகள் மாட்டிற்கு போடும் ஊசிகளாலும் அதனுள் மனிதர்களுக்கு தீங்கான A1 புரதம் உருவாகிறது. அதை உட்கொள்வதால் மனிதர்களுக்கு வயிறு கோளாறு, லாஃக்டோஸ் ஒவ்வாமை போன்ற பலப் பிரச்சனைகள் உருவாகிறது,” என மிஸ்டர் டைரியின் நிறுவர் துஷார் நம்மிடம் பேசும்போது கூறினார்.
மாடுகளுக்கு நல்ல உணவும் மகிழ்ச்சியான சூழலும் இருந்தால் அது பாலின் தரத்தில் வெளிப்படும் என்று அவர் விளக்குகிறார்.
ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்தீன் மாட்டுப் பாலில் ஏ2 புரதம் இருந்து, அவை நாள் ஒன்றுக்கு 30 லிட்டரிலுந்து 40 லிட்டர் பால் கொடுத்தாலும், இந்திய சுற்றுச்சூழல் அவற்றுக்கு ஏற்றது இல்லை. அதனால் அவற்றை வைத்திருக்கும் விவசாயிகள் அவற்றுக்கு ஊசிகள் போட்டு வளர்க்கின்றனர், என்கிறார் துஷார்.
மிஸ்டர் டைரிக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் அளவு உள்ள மூன்று பண்ணைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும், 200 சாஹிவால் இன மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகள் இந்தியாவின் பூர்வீக ரக மாடுகள் ஆகும்.
ஒவ்வொரு பசுவும் தினமும் ஐந்து அல்லது ஆறு லிட்டர் உயர் ரக பால் தரும். இதற்கு காரணம் மாட்டை பராமரிக்க இந்த நிறுவனம் செய்யும் அத்தனை முயற்சிகளும் தான் என்கிறார் துஷார்.
"நான் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாடுகள் பற்றியும், மாட்டுப்பாலின் ஊட்டச்சத்தினை எவ்வாறு உயர்த்துவது என்பது பற்றியும் படித்தேன். எங்கள் பண்ணையில், மாடுகளுக்கான குளிர்சாதனங்கள் பொறுத்தியுள்ளோம். எங்கள் மாடுகளிடம் பால் கறக்கும் பொழுது அவற்றுக்கு ஜாஸ் இசை ஒலிக்கப்படுகின்றது. எங்கள் கால்நடை தீவனத்தில் ஆல்ஃபா, வெல்லம், சோளம், கம்பு போன்ற சத்தான 20 பொருட்கள் உள்ளன."
மிஸ்டர் டைரியின் பாலில் எந்தவொரு ரசாயனமோ ஹார்மோன் ஊசிகளோ இல்லாமல், மற்ற பாலை விட 20 சதவீதம் அதிக கால்சியம் இருக்கிறது என்று உறுதியாக சொல்கிறார் துஷார். அதனால் மற்ற நிறுவனங்களின் பாலை விட இதில் ஊட்டச்சத்த்து அதிகமாகவும் கொழுப்புச்சத்து குறைவாகவும் உள்ளது.
A2 பாலின் வெற்றி
கடந்த சில ஆண்டுகளாக பாலில் கலப்படம் அதிகரித்துள்ளது. பால் கலப்படம் குறித்த தேசிய ஆய்வு 2011இன் படி, 70சதவீதத்திற்கு மேல் திரட்டிய பாலில் கலப்படம் இருந்து அவை பருக உகந்ததாக இல்லை.
கலப்படங்கள் உள்ள பாக்கெட் பாலுடன் ஒப்பிடும்போது கலப்படமற்ற உயர்தர பால் 1/4 % ஆகும். ஆனால் மக்கள் விழிப்புணர்வுடன் அவர்கள் உடல் நலத்திற்காக அதிக விலை கொடுத்து பால் வாங்க முன் வருகிறபொழுது சந்தை உயரும்.
ஆனால் இந்தியாவில், தேவை, விநியோகத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது. அதனால் தான் ஊசி போட்டு மாடுகளை அதிகம் பால் சுரக்க செய்கிறார்கள்.
உயர்தர பாலானது 48 மணி நேரம் தாண்டி கெட்டுவிடும். மிஸ்டர் டைரி மாட்டிலிருந்து பாலை கறந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் கொண்டு வந்து சேர்த்துவிடும் என்று உறுதி அளிக்கிறது.
"நாங்கள் பாலை பதப்படுத்திய பிறகு தான் அதை விற்கிறோம் அதனால், அதை காய்ச்சாமல் பருகலாம்," என்கிறார் துஷார்.
மிஸ்டர் டைரியின் பால் வாடிக்கையாளரின் வீட்டிற்கு குளிசாதன பெட்டிகள் மூலம் அவர்கள் வாசலில் சேர்க்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை செயலி /வலைத்தளம் மூலம் செய்யலாம். அவர்கள் விநியோகங்களையும் கண்காணிக்க முடியும். வாடிக்கையாளர்கள் வெளியூருக்கு செல்லும்போது விநியோகங்களை இடைநிறுத்தம் செய்யவும் முடியும், தினசரி பால் அளவை மாற்றவும் முடியும்.
தற்பொழுது தெற்கு டெல்லி மற்றும் குருகிராமில் இவர்கள் பாலை வீடுகளுக்கு வழங்குகின்றனர். மேலும் டெல்லியிலும் மார்டர்ன் பாஸார், பூட்ஹால், கிருஷ்ணா மார்ட் ஆகியவற்றிலும் இவர்கள் பால் கிடைக்கும்.
மே மாதம் துவங்கியது முதல், 60 பேர் கொண்ட மிஸ்டர் டைரியின் குழு ஒவ்வொரு மாதமும் முழு கொழுப்பு பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் நெய் விற்று 40 லட்சத்திலிருந்து 43 லட்சம் ரூபாய் வரை வருமானம் பதிவு செய்கிறது. நாள் ஒன்றுக்கு 250 லிட்டர் பால் விற்பனை செய்கிறது.
எதிர்கொண்ட சவால்கள்
மிஸ்டர் டைரி இதுவரை சந்தித்த சவால்களில் முக்கியமானது மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது தான். பல கிராமங்களில் இருந்து சேகரித்து பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் கலப்படம் இருப்பது தெரிந்தாலும், பெரும்பாலான மக்கள் பாக்கெட் பாலையே விரும்புகிறார்கள்.
இத்தகைய சவால்களை எதிர்கொள்ள மிஸ்டர் டைரி நிகழ்வுகள் மற்றும் சமூக ஊடக சந்தைப்படுத்தல் ஆகியவற்றை தீவிரமாக நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வர முயற்சிக்கின்றனர். டில்லியில் உள்ள ஃபேப்காபி மற்றும் ஆலிவ் பார் மற்றும் கிட்சன்இல் ஆகியஇடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மிஸ்டர் டைரி நடத்தியுள்ளது.
எதிர்காலத் திட்டங்கள்
இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு மிஸ்டர் டைரியின் கலப்படமற்ற ரசாயனமற்ற பாலை கொண்டு சேர்ப்பதில் ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகிறது. தனது பிரிவுகளை விரிவுப்படுத்தி பாலின் மற்ற பொருட்களான வெண்ணை, பாலாடைக்கட்டி, சுவையூட்டபட்ட பால் போன்ற பொருள்களைத் தயாரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறது.
"அதனால் எங்கள் மாட்டின் எண்ணிக்கையை இன்னும் சில மாதங்களில் 1000த்திற்கு உயர்த்த முனைப்புடன் வேலை செய்கிறோம்," என்று நெகிழ்வுடன் கூறுகிறார் துஷார்.
ஆங்கிலத்தில் : எவ்லின் ரத்னகுமார் | தமிழில் : கெளதம் தவமணி