350 பசுமாடுகளுடன் 20 ஏக்கரில் அமைந்த இந்தியாவின் முதல் தொழில்நுட்பப் பால்பண்ணை!
சிங்கப்பூரில் சர்வதேச நிறுவன வேலையையும், சுகபோக வாழ்வும் வேண்டாம் என்று உதறித் தள்ளி, 20 ஏக்கர் இடத்தில் பால் பண்ணை அமைத்து வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறியுள்ளார் தீபக் குப்தா!
ஆடு, மாடுகளோடு ஒட்டி உறவாடியவர்களே, பால் பண்ணையில் லாபமில்லை என்று தொழிலை மாற்றிக் கொள்ள நினைக்கையில், 30 வருட சிங்கப்பூர் வாழ்க்கைக்கும், சர்வதேச நிறுவன வேலைக்கும் பை பை காட்டி தொழில்நுட்பத்தை புகுத்தி 2 ஏக்கரில் நவீன ஹைடெக் பால்பண்ணையை அமைத்து அசத்திவருகிறார் தீபக் குப்தா.
பஞ்சாப்பைச் சேர்ந்த தீபக், பட்டப்படிப்பை முடித்த கையோடு சிங்கப்பூரில் பணித்தேடிக் கொண்டார். ஆம், 30 ஆண்டுகளுக்கு முன்பே உணவு தொடர்பான சர்வதேச நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து, சிங்கப்பூர்வாசியாகவே மாறியுள்ளார். ஆனாலும், சொந்தத் தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசையால், பஞ்சாப் திரும்பிய அவர், கனவு திட்டத்தை ‘ஹிமாலயன் கீரிமரி’என்ற பெயரில் தொடங்கி நினைவாக்கியுள்ளார்.
“நுகர்வோர்களுக்கு கலப்படமற்ற தூயப்பால் வழங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
பண்ணையிலிருந்து நேரடியாய் வாடிக்கையாளர்களை சென்றடையும் முறையிலான பால் தொழில் என்பது உலெகங்கிலும் உள்ள பொதுவான ஒன்றும், வாடிக்கையாளர்கள் விரும்பக்கூடியதும் கூட. தவிர, சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவுக்கு விடுமுறைகளில் வரும் போது பால் கலப்படம் மற்றும் மாசுப்பாடு குறித்து அதிகம் கேள்விப்பட்டேன். எங்க குடும்பத்தாரும், நண்பர்களுமே கூட உள்ளூர் பால் விநியோகர்களை நம்பியிருந்த நிலையில், நம்பகமான சுத்தமான பாலை பெறுவதற்காக அதிகம் முயற்சி செய்தனர். அங்கிருந்து தான் என் தொழிலுக்கான யோசனை தொடங்கியது.
வேளாண் துறை யில் போதுமான நிபுணத்துவம் பெற்றதால் இந்தியாவில் ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான என் நீண்டகால கனவு குறித்து நான் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தேன்.”என்கிறார் அவர்.
சண்டிகரில் இருந்து 2 மணிநேர பயணத்துக்குபின் அடையும் நபா என்ற பகுதியில், 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கிறது அழகிய பண்ணை. பரவலாக அறியப்படும் ஹெஃர்ரிங்போன் முறையில் அமைக்கப்படுள்ள பண்ணையில் 350 ஹோல்ஸ்டைன் மற்றும் ஜெர்சி பசுக்கள் உள்ளன. பண்ணையில் இருந்து கைப்படாமல் சேகரிக்கப்படும் பால், குளிர்விக்கப்பட்டு பின் பதப்படுத்தப்பட்டு ‘ஹிமாலயன் கீரிமரி’ என்ற பிராண்டிங்கின் கீழ் விற்பனைக்கு செல்கின்றன. பால்பண்ணயின் ஒவ்வொரு தொகுதியும் மிக உயர்ந்த தரநிலையில் உள்ளதா என்பதை பரிசோதிக்கின்றனர். பின்னர், குளிரூட்டப்பட்ட அறைகளில் சேமிக்கப்படும் பால், குளிரூட்டப்பட்ட லாரியில் ஏற்றப்பட்டு வாடிக்கையாளர்களின் கைகளை சென்றடைகிறது. ஹிமாலயன் கீரிமரி பாலை கொதிநிலைக்கு உட்படுத்தாமல் நேரடியாய் பருகலாம் என்கிறார் அவர். பால் தவிர, ஒருங்கிணைந்த பண்ணை முறைகளில் கோதுமை மற்றும் காய்கறிகளும் பயிரிடுகிறார்.
“விவசாயத்தில் மாற்றத்தை உண்டாக்குவதற்கு சமூக தொழில்முனைவோராதலே சிறந்த வழியாகும்.
உள்ளூர் விவசாயிகளுடன் பால் பண்ணைகளின் சிறந்த நடைமுறைகளை பற்றி நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். விலங்குகளின் ஆரோக்கியம், உணவு மற்றும் சுகாதாரம் பற்றி அவர்களுக்கு போதிப்பதுடன், கிராமப்புற இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதலை நோக்கமாக கொண்டுள்ளோம்.
கிராமப்புற வளர்ச்சிக்கான மாதிரியாக அமையும் அதே நேரத்தில், நமது வளர்ந்துவரும் நகரங்களுக்கு பாதுகாப்பான உணவினை வழங்குவதற்கான ஆதாரமாகவும் உள்ளது.” என்றார்.
பண்ணையில் அதிகளவில் மாடுகளின் சௌகரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதற்காகவே தளர்வான கொட்டகைகள், தூவாலை குழாய்களில் இருந்து எந்நேரம் தண்ணீர் சாரல், மின் விசிறிகள் மற்றும் சுழலும் தூரிகைகளால் மாடுகளை எப்போதும் சுத்தம் செய்தல் என மாடுகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில் பண்ணைய அமைத்துள்ளார். மக்காச்சோளம், கோதுமை தவிடு, சோயா மற்றும் தாதுக்கள் நிறைந்த பசுந்தீவனங்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப் படுகிறது. சில பசுந்தீவனங்களை மாடுகளின் எருவை பயன்படுத்தி பயிரிட்டு பெற்றுக் கொள்கிறார். இயற்கையில் சிறந்த உணவுகளை மாடுகளுக்கு வழங்குவதால், பசுவின் பால் உயர் தரத்திலும், ருசியாகவும் இருப்பதாகவும் கூறுகிறார் தீபக்.
“மாடுகளின் நலன் கண்கானிப்பு கருவி தயாரித்தலின் முன்னோடியான இஸ்ரேலின் எஸ்சிஆர் நிறுவத்தின் கருவியை பொருத்தி, 24 மணிநேரமும் மாடுகளை கண்காணித்து வருகிறோம். ஒவ்வொரு மாடுகளின் நடத்தையையும் கவனிக்க இக்கருவி உதவுகிறது. இதுவரை நேரடியாய் வாடிக்கையாளர்களுக்கு பால் விநியோகம் செய்து வருகிறோம். பிரதான இட ங்களில் ஹிமாலயன் கீரிமரி பாய்ன்ட்களை திறக்கவுள்ளோம்.” என்று தீபக் அவருடைய எதிர்காலத்திட்டங்களை பற்றி பகிர்ந்தார்.
தகவல் மற்றும் பட உதவி : பஞ்சாப் நியூஸ் எக்ஸ்பிரஸ்