Flipkart ‘பிக் பில்லியன் டேஸ்’ சேலில் 1.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய காலணி விற்பனையாளர்!
பெங்களூருவைச் சேர்ந்த காலணி விநியோக நிறுவனமான 'சன்ரைஸ் மார்க்கெட்டிங்’ முதல் முறையாக ஃப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்டு 'பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையில் 1.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
’சன்ரைஸ் மார்க்கெட்டிங்’ பெங்களூருவைச் சேர்ந்த காலணி விநியோக நிறுவனம். ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை, சன்ரைஸ் மார்க்கெட்டிங் நிறுவனத்திற்கு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு சேர்த்துள்ளது.
இந்நிறுவனம் இந்த ஆண்டு ஜூலை மாதம்தான் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இணைந்துள்ளது. பிக் பில்லியன் டேஸ் விற்பனை அக்டோபர் மாதம் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற்றது. இந்த விற்பனையில் சன்ரைஸ் மார்க்கெட்டிங் நிறுவனம் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சன்ரைஸ் மார்க்கெட்டிங் நிறுவனர் நவீன் பிரசாத் கூறும்போது,
“ஃப்ளிப்கார்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையே ஒரு விழா போன்றதுதான். இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த சமயத்தில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய ஏராளமான ஆப்ஷன்கள் கிடைக்கின்றன,” என்றார்.
பிக் பில்லியன் டேஸ் சேலின் போது காணப்படும் தேவைகள் குறித்தும் விற்பனை அளவு அதிகரிப்பது குறித்தும் ஃப்ளிப்கார்ட் அக்கவுண்ட்ஸ் மேலாளர் நவீனிடம் விவரித்துள்ளார். அவர் முறையாக திட்டமிடவும் போதிய இருப்பு வைத்திருக்கவும் இந்த தகவல்களும் அவரது சந்தை ஆய்வுகளும் உதவியுள்ளன.
“இருப்பு பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க கூடுதலாக ஸ்டாக் செய்தோம்,” என்கிறார் நவீன்.
நவீனின் கணிப்பு தவறாகவில்லை. ஆர்டர் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது.
“பிக் பில்லியன் டேஸ் விற்பனையின்போது ஒரு நாள் விற்பனை 20 லட்ச ரூபாய் வரை இருந்தது. பிக் பில்லியன் டேஸ் அல்லாத வழக்கமான நாளில் விற்பனை 3-5 லட்சம் வரை இருக்கும். ஆனால் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இது 5 மடங்காக அதிகரித்தது,” என்றார்.
இருப்பினும் கொரோனா காரணமாக அனைவரும் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருவதால் ஃபார்மல் காலணி வகைகளுக்கான தேவை இருக்கும் என அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஃபார்மல் ஷூக்களின் ஒட்டுமொத்த இருப்பும் விற்பனையாகிவிட்டது.
விற்பனை திடீரென்று உச்சம் தொட்டது மட்டுமல்லாது வாடிக்கையாளர்கள் தொகுப்பும் விரிவடைந்துள்ளதாக நவீன் தெரிவிக்கிறார்.
“லே, லடாக், இமாச்சலபிரதேசம், அருணாச்சலபிரதேசம் போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் எங்கள் தயாரிப்பை வாங்கியுள்ளனர். இந்தப் பகுதிகளில் இருந்து ஆர்டர்கள் பெறுவது இதுவே முதல் முறை. என்னுடைய வணிகம் நாட்டின் தொலைதூர பகுதிகளில் இருக்கும் மக்களைக்கூட சென்றடைந்துள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன். ஃப்ளிப்கார்ட் நாடு முழுவதும் இருக்கும் வாடிக்கையாளர்களைச் சென்றடைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது,” என்றார்.
விற்பனை அளவு புதிய உச்சத்தை எட்டியிருப்பது அதிக ஊழியர்கள் பணிபுரிந்திருப்பதையும் வேலை நேரம் அதிகரித்திருப்பதையும் தெளிவாக உணர்த்துகிறது.
“வழக்கமான நாளில் ஒன்பது மணி நேரம் பணிபுரிவோம். ஆனால் இந்த குறிப்பிட்ட விற்பனை மூலம் கிடைத்த அனைத்து ஆர்டர் தேவைகளையும் பூர்த்தி செய்ய ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்தனர். காலை 8 மணிக்குத் தொடங்கி 12 மணி நேரம் வரை வேலை செய்தார்கள். எங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட இருமடங்கானது. 8 ஊழியர்கள் அடங்கிய குழு 14 ஊழியர்களாக விரிவடைந்தது,” என்றார்.
முதல் முறையாக ஆன்லைனில் விற்பனை செய்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது,
“தொழில் புரியும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை விற்பனை செய்யமுடியாமல் தவித்தால் மின் வணிகம் இதற்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று தோன்றுகிறது. கோவிட்-19 காரணமாக எங்கள் வணிக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டாலும் பிரமாதமான விற்பனை இருந்தது. இந்தப் பெருந்தொற்று சூழல் சீரான பிறகு பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஏற்படுத்தப்போகிற மாற்றத்தை நினைக்கவே உற்சாகமாக இருக்கிறது,” என்கிறார்.
நவீன் இதற்கு முன்பு ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்டதில்லை. மற்ற வணிக உரிமையாளர்கள் போன்றே கொரோனா பெருந்தொற்றுதான் இவரை ஆன்லைனில் செயல்பட வைத்துள்ளது. பெருந்தொற்று காலத்திற்கு முன்பு சன்ரைஸ் மார்க்கெட்டிங் மத்திய காவல்துறை மற்றும் இந்திய கடற்படை கேண்டீன்களுக்கு காலணிகளை விநியோகித்து வந்தது.
“மற்ற சிறு விற்பனையாளர்கள் போன்றே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட புதிதில் நாங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டோம். வாடகை அதிகம். வாடிக்கையாளர்கள் மிகக்குறைவு. இது மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது,” என்றார்.
நவீன் கிட்டத்தட்ட ஓராண்டிற்கு மேலாக ஆன்லைன் விற்பனை குறித்து ஆராய்ந்து வந்தார்.
“ஆன்லைன் விற்பனை குறித்து திட்டமிட்டிருந்தேன். ஆன்லைன் விற்பனை குறித்தும் வணிகத்தில் இந்த செயல்பாடுகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் ஓராண்டாக ஆராய்ந்து வந்தேன். இறுதியாக கொரோனா பெருந்தொற்று இதில் செயல்பட வைத்தது,” என்றார்.
நவீன் ஃப்ளிப்கார்டில் தன் வணிகத்தை தொடங்கத் தீர்மானித்தார். மற்ற மின்வணிக தளங்களைக் காட்டிலும் ஃபிளிப்கார்ட் தளத்தில் இணைவது எளிதாகவே இருந்தது என்கிறார்.
“இந்த செயல்முறை எளிதாகவும் தெளிவாகவும் உள்ளது. அதிக நேரம் எடுக்காது. ஃப்ளிப்கார்ட் சப்போர்ட் குழு இதில் எளிதாக இணைய உதவுகிறது,” என்றார்.
நவீன் கட்டமைப்பை முறையாக அமைப்பதில் கவனம் செலுத்தினார்.
“ஆன்லைன், ஆஃப்லைன் எந்த வணிகமாக இருந்தாலும் கட்டமைப்பை முறையாக அமைப்பது முக்கியம். ஆஃப்லைனில் மட்டுமே இருந்த எங்கள் செயல்பாடுகளை ஆன்லைனிற்கு மாற்றியபோது ஆன்லைன் ஆர்டர்களைப் பூர்த்திசெய்வதற்கென பிரத்யேகமாக 10,000 சதுர அடி கொண்ட கிடங்கை உருவாக்கினேன்,” என்றார்.
இதனால் ஆஃப்லைனில் இருந்து ஆன்லைனிற்கு மாறியது எளிதாக இருந்தது. அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களின் தேவைகளை விரைவாகப் பூர்த்தி செய்துள்ளார். ஃப்ளிப்கார்டில் செயல்படத் தொடங்கிய ஒரு மாதத்தில் வருவாய் 10 லட்ச ரூபாய் ஆனது.
“அப்போதிருந்து நிலையாக வளர்ச்சியடைந்து வருகிறோம். அக்டோபர் மாதத்தில் 1.4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டினோம்,” என்றார்.
ஃப்ளிப்கார்ட் உடனான பயணம் குறித்து நவீன் கூறும்போது, “விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் இரு தரப்பினருக்கும் மின்வணிகம் சிறந்த பலனளிப்பதால் வருங்காலத்தில் மேலும் பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
முதல் முறையாக ஆன்லைனில் விற்பனை செய்த எனக்கு ஏராளமான வாடிக்கையாளர்களைச் சென்றடைய மின்வணிகம் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளது. இதற்கு முன்பு செயல்பாட்டு சிக்கல் காரணமாக பெங்களூருவைத் தாண்டி என்னால் வணிகத்தை விரிவடையச் செய்யமுடியவில்லை. இன்று இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடைந்துள்ளேன்.
அதுமட்டுமல்லாமல் தாமதம் ஏதுமின்றி சரியான நேரத்தில் பணம் கிடைத்துவிடுவதால் துரிதமாக வளர்ச்சியடையமுடிகிறது,” என்றார். ஆன்லைன் விற்பனையில் வெற்றி பெற்றதற்கு ஃப்ளிப்கார்ட் குழுவின் ஆதரவுதான் காரணம் என்று பாராட்டுகிறார் நவீன்.
“ஒவ்வொரு நிலையிலும் ஃப்ளிப்கார்ட் குழு எனக்கு வழிகாட்டியது. ஆறு மாத காலத்தில் நிலையாக வளர்ச்சியடைய உதவியது. இவர்களுக்கு விற்பனையாளர்களின் தேவைகள், விற்பனையாளர்களின் பலம் மற்றும் பலவீனம் என ஒவ்வொரு பிரிவு குறித்த ஆழ்ந்த புரிதல் உள்ளது. இதனால் வளர்ச்சிக்குத் தேவையான வழிகாட்டலை இவர்களால் வழங்கமுடிகிறது,” என்றார்.
நவீன் புதுடெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய பகுதிகளில் சேமிப்புக் கிடங்குகளை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
“தற்போது பெங்களூருவில் மட்டுமே சேமிப்பு கிடங்கு உள்ளது. புதிய சேமிப்புக் கிடங்குகள் திறக்கப்பட்ட பிறகு 7-10 நாட்கள் என்றிருக்கும் டெலிவர் நேரத்தை 3-4 நாட்களாகக் குறைக்க முடியும். வணிக வளர்ச்சிக்கு இது உதவும்,” என்றார்.
“நான் நிதித் துறையில் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் பணியாற்றியுள்ளேன். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பணி. இது மிகவும் சலிப்பூட்டுவதாக இருந்தது. என் பெற்றோர் அரசு ஊழியர்கள். எந்தவித பின்புலமும் இல்லை என்றாலும் வணிகம் தொடங்க விரும்பினேன்.
2015-ம் ஆண்டு சன்ரைஸ் மார்க்கெட்டிங் தொடங்கினேன். காலணி பிரிவில் செயல்படத் தொடங்கினேன். மற்ற சந்தை வாய்ப்புகளையும் ஆராய்ந்தேன். Casio கீபோர்ட் மற்றும் பியானோவிற்கு கர்நாடகாவில் விநியோகஸ்தம் செய்யத் தொடங்கினேன். எனினும் காலணி வணிகத்திலேயே முக்கியக் கவனம் செலுத்தினேன்.
கடந்த ஐந்தாண்டுகளாக இந்த பரபரப்பான பயணத்தை முழுமையாக ரசித்தேன். தற்போது ஃப்ளிப்கார்ட் உடன் இணைந்துள்ள நிலையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மேலும் சிறப்பாக இருப்பது உற்சாகமளிக்கிறது,” என்றார்.
கட்டுரை: யுவர்ஸ்டோரி குழு | தமிழில்: ஸ்ரீவித்யா