7 மாதங்களில் 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய 'மேட் இன் இந்தியா’ காலணி பிராண்ட்!
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட Solethreads காலணி பிராண்ட் அமேசான் தளத்தில் விற்பனையை தொடங்கிய நான்கு மாதங்களில் 50 லட்ச ரூபாய் அளவில் விற்பனை செய்துள்ளது.
கௌரவ் சோப்ரா டெல்லியைச் சேர்ந்தவர். இவர் பாட்டா உள்ளிட்ட பல்வேறு பிரபல காலணி பிராண்டுகளுடன் பணியாற்றியுள்ளார். காலணிகளை புதுமையாக மறுவடிவாக்கம் செய்வதற்கான நேரத்தையும் வளங்களையும் செலவிட பல பிராண்டுகள் விருப்பம் காட்டவில்லை என்பதை இவர் புரிந்துகொண்டார். ஃப்ளிப் ஃப்ளாப் பிரிவில் இவர் செயல்பட விரும்பினார்.
ஃப்ளிப் ஃப்ளாப் வகைகள் இந்தியாவில் பிரபலமாகவே இருந்தன. இத்தகைய ஓபன் வகை காலணிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையில் வாய்ப்புகளும் இருந்தது. சுமந்த் ககாரியா, விக்ரம் ஐயர், அபராஜித் கதூரியா போன்ற நுகர்வோர் பிராண்ட் நிபுணர்களுடன் இணைந்து கௌரவ் சோப்ரா பிராண்டட் ஃப்ளிப் ஃப்ளாப் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 'சோல்த்ரெட்ஸ்' (Solethreads) தொடங்கினார்.
சோல்த்ரெட்ஸ் இளைஞர்களை மையமாகக் கொண்ட காலணி பிராண்ட். ஓபன் காலணிகள் பிரிவில் புதுமை படைக்கவேண்டும் என்பதே இந்த பிராண்டின் நோக்கம். எனவே ஃப்ளிப் ஃப்ளாப் பிரிவில் புதுமையான, சுவாரஸ்யமான வடிவமைப்புடன் காலணிகளை வடிவமைத்து வழங்குகிறது.
“உலகளவில் ஃப்ளிப் ஃப்ளாப் பிரிவில் சிறந்து விளங்கும் எத்தனையோ பிராண்டுகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் ஃப்ளிப் ஃப்ளாப் வகைகளை மட்டுமே வழங்கும் பிரத்யேக பிராண்ட் ஏதும் இல்லை. Crocs, UCB, Puma, Nike, Adidas போன்ற பிராண்டுகள் மற்ற பிரிவுகளுடன் சேர்த்து ஃப்ளிப் ஃப்ளாப் வகைகளையும் விற்பனை செய்கின்றன. ஆனால் நாங்கள் ஃப்ளிப் ஃப்ளாப் வகைகள் மட்டுமே கவனம் செலுத்தும் பிராண்டாக செயல்பட விரும்புகிறோம்,” என்று சுமந்த் கர்காரியா எஸ்எம்பிஸ்டோரி இடம் தெரிவித்தார்.
சுயநிதியில் இயங்கும் இந்த பிராண்ட் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முக்கிய மின் வணிக தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அமேசானில் விற்பனையைத் தொடங்கிய நான்கு மாதங்களிலேயே மொத்த விற்பனை மதிப்பு 50 லட்ச ரூபாயைத் தாண்டியுள்ளது.
“அறிமுகப்படுத்தப்பட்ட ஏழு மாதங்களில் 1 கோடி ரூபாய் வருவாய் அளவை எட்டியுள்ளோம்,” என்கிறார் சுமந்த்.
அவர் மேலும் கூறும்போது,
“எங்களுடைய பிராண்ட் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்படும் ’மேட் இன் இந்தியா’ பிராண்ட். எந்த ஒரு மூலப்பொருளுக்கும் சீனாவையோ மற்ற நாடுகளையோ நாங்கள் சார்ந்திராமல் தற்சார்புடன் செயல்படுகிறோம்,” என்றார்.
டி2சி வணிக மாதிரி (டைரக்ட் டு கஸ்டமர்ஸ்)
சோல்த்ரெட்ஸ் தயாரிப்புப் பணிகள் டெல்லி மற்றும் ராஜஸ்தானில் நடைபெறுகின்றன. இந்த பிராண்டுடன் பார்ட்னராக இணைந்துள்ள நிறுவனங்கள் செயல்பாடுகளை நிர்வகிக்கின்றன. இவர்களில் சிலர் பிரத்யேகமாக சோல்த்ரெட்ஸ் பிராண்டுடன் மட்டும் பணியாற்றுகிறார்கள். இதனால் இந்த பிராண்ட் அதன் பார்ட்னர் நிறுவனங்களில் மிகக்குறைவாக 15 பேரை மட்டும் நேரடியாக பணியமர்த்தியுள்ளது.
”சோல்த்ரெட் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யப்படும் டி2சி வணிக மாதிரியில் செயல்படுகிறது. நாங்கள் ஃபாஸ்ட் ஃபேஷன் பிராண்ட். ஒவ்வொரு மாதமும் பழைய தயாரிப்புகளை நிறுத்திக் கொண்டு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறோம்,” என்றார் சுமந்த்.
சோல்த்ரெட்ஸ் அதன் முக்கிய கேட்டலாக்கில் 80 முதல் 100 ஸ்டைல்களை கொண்டுள்ளது. மேலும் 100 ஸ்டைல்கள் ரொடேஷனில் இருக்கின்றன. இந்நிறுவனத்தின் வலைதளத்தில் பிரத்யேகமாக ஆர்டர் செய்யப்பட்ட ஸ்டைல் உட்பட 400-500 ஸ்டைல்களின் தொகுப்பு இருக்கின்றன.
மிகப்பெரிய அளவில் சரக்கிருப்பு வைத்துள்ளதால் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சியின்போது சரக்கிருப்பை திறம்பட நிர்வகிப்பது முக்கிய சவாலாக இருந்துள்ளது. இந்த சிக்கலுக்குத் தீர்வுகாண விநியோகச் சங்கிலி மேலாண்மை நிறுவனமான Glaucus மற்றும் Vinculum நிறுவனங்களுடன் பார்ட்னர்களாக இணைந்து செயல்பட நிறுவனர்கள் தீர்மானித்தனர்.
ஸ்மார்ட் சேமிப்பு கிடங்கிற்காக Glaucus நிறுவனத்துடனும் சரக்கு மேலாண்மை நடவடிக்கைகளுக்காக சாஃப்ட்வேர் நிறுவனமான Vinculum நிறுவனத்துடனும் இணைந்து செயல்படுகிறது.
இந்நிறுவனம் அமேசான், ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா போன்ற மின் வணிக தளங்களுடன் இணைந்து விற்பனை செய்வதுடன் சொந்த வலைதளம் மூலமாகவும் விற்பனை செய்கிறது.
ஆன்லைன், ஆஃப்லைன் இரண்டிலும் வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த சோல்த்ரெட்ஸ் ஆன்லைனில் மட்டுமே செயல்படாமல் முன்னணி சில்லறை வர்த்தக காலணி நிறுவனமான ‘மெட்ரோ ஷூஸ்’ உடன் கைகோர்த்தது. தற்போது மெட்ரோ ஷூஸ் நிறுவனத்தின் பல்வேறு ஸ்டோர்களில் தயாரிப்பைக் கொண்டு சேர்த்து விரிவடைய உள்ளது.
“விரைவாக சந்தையில் கொண்டு சேர்க்கும் டி2சி மாதிரி மூலம் நாங்கள் 30 முதல் 35 சதவீத லாபத்தை எட்டியுள்ளோம். இதை 40 சதவீதத்திற்கும் அதிகமாகக் கொண்டு செல்ல விரும்புகிறோம். ஒவ்வொரு மாதமும் 40 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறோம். மாத மொத்த விற்பனை அளவு 2 கோடி ரூபாயாக உள்ளது,” என்கிறார் சுமந்த்.
இந்தியாவில் 75 சதவீத தயாரிப்பு முறைசாரா பிரிவில் இருந்தே வருகின்றன. ஒழுங்கமைக்கப்பட்ட பகுதியில் Nike, Adidas, Puma போன்ற பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக ஃப்ளிப் ஃப்ளாப் பிரிவில் Relaxo, Paragon ஆகிய பிராண்டுகள் ஆதிகம் செலுத்துகின்றன.
"காலணிகளில் ஃப்ளிப் ஃப்ளாப் வகை அதிகம் விற்பனையாகிறது. எனவே இங்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மற்ற பிரிவுகளில் கவனம் செலுத்துவதற்கு முன்பு இங்கு சிறப்பாக எங்களை நிலைநிறுத்திக்கொள்ள விரும்புகிறோம்,” என்றார் சுமந்த்.
இந்த பிராண்ட் Phylon-moulded, Squishy, Synturf ஆகிய தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.
“வழுக்காமல் பாதுகாக்கக்கூடிய காலணியின் கீழ்பகுதி, மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய பிவிசி ஸ்ட்ராப், கைகளால் பிரிண்ட் செய்யப்பட்ட கிராஃபிக் டிசைன் போன்றவை உள்ளன. மொத்தத்தில் காப்புரிமை பெறப்பட்ட 30-க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளன. டிஐஒய் டிசைன், தனித்தேவைக்கேற்ற காலணிகள் போன்ற புதுமையான தயாரிப்புகள் திட்டமிடப்பட்டு வருகின்றன,” என்றார்.
கோவிட்-19 ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் வருங்காலத் திட்டம்
2020ம் ஆண்டு தொடக்கத்தில் சோல்த்ரெட்ஸ் வளர்ச்சியடையத் தொடங்கியது. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து திட்டமிட்டிருந்தோம். அந்த சமயத்தில்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் விற்பனை தடைபட்டது. ஆஃப்லைன் வணிகம் பாதிக்கப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் ஆர்டர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.
“ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதற்கு முன்பு ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 15,000 ஜோடி காலணிகள் விற்பனை செய்து வந்தோம். ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் மாத விற்பனை மும்மடங்காக அதிகரித்து 40,000 ஜோடி காலணிகள் விற்பனையாகின. டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் மீடியம் மூலம் ஏராளமான புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்,” என்றார்.
அவர் மேலும் கூறும்போது,
“சுமார் 15 சதவீத வாடிக்கையாளர்கள் மீண்டும் வாங்குகின்றனர். நீண்ட நாள் அடிப்படையில் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் ஓபன் காலணிகள் சராசரியாக ஆறு முதல் ஒன்பது மாதங்களில் மீண்டும் வாங்கப்படும்,” என்றார்.
சோல்த்ரெட்ஸ் இந்த ஆண்டு இறுதியில் 30 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கிறது. நிதி திரட்டவும் வாடிக்கையாளர்கள் தொகுப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
“அடுத்த மூன்றாண்டுகளில் ஓபன் காலணிகள் பிரிவில் 300 கோடி ரூபாய் ஃபாஸ்ட் ஃபேஷன் பிராண்டாக உருவாக விரும்புகிறோம்,” என்கிறார் சுமந்த்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா