ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய யூட்யூப் ஸ்டார்!
ஃபோர்ப்ஸ் 30 பட்டியல், 5 கோடி மதிப்பு ரோல்ஸ்ராய்ஸ் கார் என தனது யூட்யூப் சேனல் மூலம் லட்சங்களில் வருவாய் ஈட்டும் கவுரவின் வெற்றிக் கதை.
இன்றைய காலத்தில் தொழில் தொடங்க பல வழிகள் இருக்கிறது. முக்கியமாக ஆன்லைனில் தொழில் தொடங்குவது சுலபமாகி உள்ளது. இதில் யூட்யூப் சேனல் தொடங்குவதும், அதன் மூலம் வருவாய் ஈட்டுவதும் நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
யூட்யூப் சேனல் தொடங்கி அதில் லட்சங்களில் வருமானம் ஈட்டலாம் என்று சொன்னாலும் தொடங்கியவுடன் இது சாத்தியமில்லை. அதோடு உள்ளடக்கத்தை பொறுத்தே பார்வையாளர்கள் அதிகரித்து, வருவாய் ஈட்ட வாய்ப்பும் கிடைக்கும்.
யூட்யூப் விதிகளிபடி, சேனல் தொடங்கி பார்வையாளர்கள் குறிப்பிட்ட அளவில் அதிகரித்தால் மட்டுமே வருவாய் வாய்ப்புகள் வரும். ஆனால் இதைத்தாண்டி பல இந்திய யூட்யூபர்கள் சேனல்கள் தொடங்கி லட்சங்களில் சம்பாதிக்கின்றனர்.
அரசியல், சினிமா, சமையல், அழகுக் குறிப்புகள், விளையாட்டு, தொழில்நுட்பம் என தங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் பேசும் பல யூட்யூபர்களுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்களும், அதனால் கிடைக்கும் வருமானமும் கூடிக் கொண்டே போவதையும் பார்க்கின்றோம்.
இப்படி ஒரு யூட்யூபாளர் தான் கவுரவ் சவுத்ரி. இவரை ‘டெக் குரு’ என்று அழைக்கின்றார். இந்தியாவின் பிரபலம் மற்றும் பணக்கார யூட்யூபர் என இவரை அழைக்கலாம். இன்றைய தேதியில் ‘Technical Guruji' என்ற இவரது யூட்யூப் சேனல் 1.77 கோடி சப்ஸ்கிரைபர்களைக் கொண்டிருக்குறது. மாதம் 20 லட்சம் வரை இவர் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. இவர், ஸ்மார்ட்போன், கேட்ஜெட்கள் பற்றிய விமர்சனங்கள், கருத்துக்களை, அவை சந்தையில் வெளிவந்தவுடன் ஹிந்தி மொழியில் தொகுத்து வழங்குவார்.
ஃபோர்ப்ஸ் இந்தியா 30 அண்டர் 30 பட்டியலில் இடம்பெற்ற இரண்டாவது யூட்யூபர் இவர். தற்போது துபாயில் வசித்து வரும் கவுரவ், தனது வருமானத்தை வைத்து, ஆடம்பரக் காரான ரோல்ஸ் ராய்ஸ் வாங்கியுள்ளார்.
இவரின் இத்தகைய வளர்ச்சிக்கு பின்னுள்ள கதை என்ன?
ஹிந்தி மீடியமில் படித்த சிறுவன்
கேந்திரிய வித்யாலயாவில் ஹிந்தி வழியில் பள்ளிக்கல்வியை முடித்த கவுரவ், கோடிங் படிப்பில் ஆர்வம் கொண்டு அதைப் படித்தார். பின்னர் பிட்ஸ் பிலானியில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் முதுகலை பட்டம் பெற்றார். ஒரு சாதரண இஞ்சினியரிங் மாணவரான கவுரவ், படிப்பை முடித்ததும் துபாயில் செக்யூரிட்டி இஞ்சினியராக பணியில் சேர்ந்தார். இதுவரை இவரின் கதை பல இந்திய இளைஞர்களின் கதையாகவே இருந்தது.
யூட்யூப் காட்டிய வெற்றி வழி
எலக்ட்ரானிக்ஸ் துறையில் வல்லுனரான கவுரவ், 2012ம் ஆண்டு முதல் யூட்யூப் சேனல் தொடங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரின் திட்டம் என்னவோ 2015ல் தான் நிறைவேறியது. ‘Technical Guruji’ என்ற பெயரில் கவுரவ் தொடங்கிய ஹிந்தி யூட்யூப் சேனலுக்கு எடுத்தவுடனே நல்ல டேக் ஆஃப் கிடைத்தது.
வேகமாக வளர்ந்து கொண்டிருந்த மொபைல் போன் சந்தையில், புதிதாக வெளிவரும் ஒவ்வொரு மாடலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த இந்தியர்களுக்கு, கவுரவின் போன் விமர்சனங்கள் உதவியாகவும் அதே சமயம் அவர் அதை சுவாரசியமாக தொகுத்து வழங்குவதும் மிகவும் பிடித்து போனது.
அடுத்து என்ன?
லட்சக்கணக்கில் குவிந்தனர் ஃபாலோயர்கள். சுமார் 2800க்கும் மேலான வீடியோக்களை பதிவேற்றி குவித்தார் கவுரவ். தற்போது 1.7 கோடி சப்ஸ்கிரைப்பர்களுடன், 16 கோடிக்கும் மேலான பார்வைகளை இவரின் சேனல் பெற்றுள்ளது.
சந்தை நிலவரப்படி, ஹிந்தி மொழியில் வெளிவரும் உலகத்திலேயே மிகப்பெரிய யூட்யூப் சேனல் ‘Technical Guruji’. அப்படியே கவுரவும் லட்சாதிபதி ஆகத் தொடங்கினார். இத்தனை யூட்யூப் சேனல்கள் இருக்க, உங்களது சேனல் மட்டும் ராக்கெட் வேகத்தில் வளரும் ரகசியம் என்ன என்று கவுரவிடம் கேட்டதற்கு,
“ஜியோ தான் என் வெற்றிக்குக் காரணம். அவர்கள் இந்தியர்களுக்கு அளித்த இணைய சேவையால் தான் நாட்டின் மூலை முடுக்கில் உள்ளவர்கள் கூட என் வீடியோக்களை பார்க்க முடிகிறது. அதுவே என் வளர்ச்சிக்கும் காரணம்,” என்கிறார்.
ஒரு நாளைக்கு ஒரு வீடியோ பதிவிடும் கவுரவின் வீடியோக்கள் எதார்த்தமாகவும், எல்லாரையும் சேரும் வகையில் அமைந்திருக்கின்றது. இவர் தனது ஃபாலோயர்களுக்கு போட்டிகள் வைத்து, போன்களை பரிசும் வழங்குவார்.
5 ஆண்டுகளுக்கு முன் கவுரவ் தொடங்கிய யூட்யூப் சேனல் வாயிலாக செம வருமானம் குவிக்கத்தொடங்கினார் அவர். பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இவரை அணுகி தங்களது மாடல்களை ரெவ்யூ செய்யவும் கேட்கத் தொடங்கினர். பலர் இவருக்கு விளம்பரங்களும் தர, மில்லியனரானார் கவுரவ் சவுத்ரி. 2020ம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் 30 வயதுக்குள் உள்ள சோஷியல் மீடியா சாதனையாளர்கள் பட்டியலில் கவுரவ் இடம்பெற்றார்.
சில நாட்களுக்கு முன் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முன் நின்று அவர் தனது ட்விட்டரில் போட்ட பதிவில்,
“பெரிதாக செய்யுங்கள்... சரியாக செய்யுங்கள்... ஸ்டைலாக செய்யுங்கள்... எல்லாவற்றுக்கும் இறைவனுக்கு நன்றி,” என்றார்.
தான் வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் முன் தன் அம்மாவுடன் போட்டோக்களை பதிவிட்டார் கவுரவ். தனக்கு பிடித்த வகையில் சில மாற்றங்களை ரோல்ஸ் ராய்ஸில் செய்துள்ளார் என்பது தெரிகிறது. இதன் மதிப்பு சுமார் 5 கோடி இருக்கும்.
எது செய்தாலும் சொந்த முயற்சியில் செய்து அதில் வெற்றிப் பெரும்போது கிடைக்கும் ஆனந்தம் நிகரற்றது.
தகவல் உதவி: பிசினஸ் இன்சைடர் | டிவிட்டர்