‘Forbes கோடீஸ்வர பெண்கள் பட்டியல்’ - 5 இந்திய வம்சாவளி பெண்களின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
போர்ப்ஸ்-ன் அமெரிக்காவின் சுயமாக சம்பாதித்த பணக்காரப் பெண்கள் பட்டியலில் இந்தாண்டும் ஐந்து இந்திய வம்சாவளிப் பெண்கள் இடம் பிடித்துள்ளனர். வழக்கம் போலவே அவர்களில் அரிஸ்டா நெட்வொர்க்ஸ் தலைவர், சிஇஓ ஜெயஸ்ரீ உல்லால் 1.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிகைகளுள் ஒன்றான Forbes ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ், பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதில் ஒன்றாக, அமெரிக்காவின் சுயமாக சம்பாதித்த பணக்காரப் பெண்கள் பட்டியலும் உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் இடம் பெற்று, இந்தியாவிற்கு பெருமை தேடித் தருகின்றனர்.
அந்தவகையில், ஃபோர்ப்ஸ் தனது எட்டாவது ஆண்டு, அமெரிக்காவின் சுயமாக சம்பாதித்த பணக்காரப் பெண்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. வழக்கம் போலவே இந்த முறையும் இந்திய வம்சாவளிப் பெண்கள் ஐந்து பேர் அதில் இடம் பிடித்துள்ளனர்.
Self Made Women என்று அழைக்கப்படும் தாங்களே உருவாக்கிக் கொண்ட புதிய வர்த்தக பாதையில், வரம்புகளை உடைத்து, சாதனைகளை நிகழ்த்தி, செல்வத்தை உருவாக்கியுள்ளதாக இந்த பெண்களை ஃபோர்ப்ஸ் பத்திரிகை பாராட்டியுள்ளது.
அமெரிக்காவில் ’சுயமாக சாதித்த பில்லியனர் பெண்கள்’ ’Forbes 2022 list of America’s Richest Self-Made Women’ என்ற பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெய்ஸ்ரீ உல்லால், 1.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், 15வது இடத்தினை பிடித்துள்ளார்.
சின்டெல்லின் இணை நிறுவனரான Neerja Sethi, ஐடி கன்சல்டிங் நிறுவனம் Syntel-இன் நிறுவனர் 24வது இடத்தை பிடித்துள்ளார். Neha Narkhede, Confluent-இன் இணை நிறுவனர் 57வது இடம் பிடித்துள்ளார். Pepsico முன்னாள் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி, 85வது இடத்தில் உள்ளார். Gingko Bioworks, என்ற பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் Reshma Shetty, பட்டியலில் 97வது இடத்திலும் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவளி பெண் ஆவார்.
ஜெய்ஸ்ரீ உல்லால் (Jayshree Ullal)
கடந்த 1961ம் ஆண்டு லண்டனில் பிறந்தவரான ஜெய்ஸ்ரீ உல்லால், டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்தவர். பின் சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் மற்றும் சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மை படித்தார்.
கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், கிரெசெண்டோ கம்யூனிகேஷன்ஸில் சேருவதற்கு முன்பு நான்கு ஆண்டுகள் யுங்கர்மேன்-பாஸில் இணைய வேலை தயாரிப்புகளின் இயக்குநராக இருந்தார். அதனைத் தொடர்ந்து கிரெசெண்டோவில் வர்த்தகத் துணைத் தலைவரானார் உல்லல்.
1993ல், Cisco சிஸ்டம்ஸ் கிரெசெண்டோ கம்யூனிகேஷன்ஸை வாங்கியது. சிஸ்கோவின் முதல் கையகப்படுத்தல் மற்றும் மாறுதல் சந்தையில் நுழைவதைக் குறித்தது. உல்லால் சிஸ்கோவில் சேர்ந்து, சிஸ்கோ வினையூக்கி மாறுதல் வணிகத்தில் பணியைத் தொடங்கினார்.
எண்டர்பிரைஸ் குழுவில் லேன் மாறுதலின் துணைத் தலைவராகவும் பொது மேலாளராகவும், ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு, ஐபி தொலைபேசி, உள்ளடக்க வலைப்பின்னல் மற்றும் கொள்கை வலைப்பின்னல் ஆகியவற்றிற்கு உல்லால் பொறுப்பேற்றார். நிறுவனத் துறையில் சிஸ்கோவிற்கான 20 இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்களை அவர் மேற்பார்வையிட்டார்.
இறுதியில் தரவு மையம் மற்றும் மாறுதலின் மூத்த துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு, ஜான் சேம்பர்சுக்கு அறிக்கை அளித்தார். சிஸ்கோவில் மட்டும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெய்ஸ்ரீ பணிபுரிந்தார்.
2008ல், கம்ப்யூட்டர் நெட்வொர்கிங்க் நிறுவனமான Arista-வின் தலைவர் மற்றும் சி இ ஒ ஆக பொறுப்பேற்றார் ஜெய்ஸ்ரீ. அன்று முதல் அரிஸ்டாவின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கும் அவர், அந்நிறுவன பங்குகளில் 5% வைத்திருக்கிறார். அதில் சில அவரது இரண்டு குழந்தைகள், மருமகள் மற்றும் மருமகன்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
2014 ஜூன்-ல், உல்லால் அரிஸ்டா வலைப்பின்னல்களை நியூயார்க் பங்குச் சந்தையில் ஐஎன்ஓ என்ற குறியீட்டின் கீழ் ஐபிஓவுக்கு அழைத்துச் சென்றார். 2020 செப்டம்பரில் கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான Snowflake-ன் இயக்குநர்கள் குழுவிலும் ஜெயஸ்ரீ உள்ளார், அதே ஆண்டில் 2.3 பில்லியன் டாலர் வருவாயை பதிவு செய்தார்.
61 வயதாகும் உல்லால், தற்போது ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் சுயமாக சம்பாதித்த கோடீஸ்வர பெண்களின் பட்டியலில் 15வது இடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1.9 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் இது சுமார் 150 கோடி ஆகும்.
நீர்ஜா சேத்தி (Neerja Sethi)
Forbes பட்டியலில் 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நீர்ஜா சேத்தி 24வது இடத்தில் உள்ளார்.
ஐடி கன்சல்டிங் நிறுவனமான Syntel-ன் இணை நிறுவனரான நீர்ஜா, 1980ம் ஆண்டு வெறும் 2,000 டாலர் முதலீட்டில் தனது கணவர் பாரத் தேசாய் உடன் இணைந்து ஐடி ஆலோசனை மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான சின்டெல்லை நிறுவினார். நீரஜா கணிதத்தில் இளங்கலை பட்டமும், கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
நேஹா நர்கடே (Neha Narkhede)
இந்தப் பட்டியலில் கிளவுட் நிறுவனமான கன்ப்ளூயண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான நேஹா நர்கடே 57வது இடத்தினை பிடித்துள்ளார்.
கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான Confluent, நிறுவனத்தின் இணை நிறுவனரான இவரது சொத்து மதிப்பு 900 மில்லியன் டாலர்களாகும். புனேவில் வளர்ந்தவரான இவர், ஜார்ஜியா டெக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, லிங்க்டினில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணிபுரிந்தவர்.
இந்திரா நூயி (Indra Nooyi)
பெப்ஸிகோவின் முன்னாள் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி இந்தப் பட்டியலில் 85வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 320 மில்லியன் டாலர் ஆகும்.
ரேஷ்மா ஷெட்டி (Reshma Shetty)
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய-அமெரிக்கப் பெண்களில் 5வது மற்றும் கடைசி இடத்தில் இருப்பவர் Gingko Bioworks-ன் ரேஷ்மா ஷெட்டி. 41 வயதான இவரது சொத்து மதிப்பு 220 மில்லியன் டாலர்களாகும்.
தகவல் உதவி: forbes