சென்னை ஆலையில் மீண்டும் உற்பத்தியை துவங்குவதாக ஃபோர்டு அறிவிப்பு!
ஃபோர்டு நிறுவனம் சென்னை ஆலையில் மீண்டும் உற்பத்தியை துவக்கலாம் எனும் எதிர்பார்ப்பு உண்டான நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் Ford மோட்டார் நிறுவனம், சென்னை ஆலையில் மீண்டும் கார் தயாரிப்பை துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஏற்றுமதி சந்தைக்கான கார்கள் சென்னை ஆலையில் இருந்து தயார் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோர்டு சென்னை ஆலையை மீண்டும் துவக்க இருப்பது தொழில் துறை மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.
ஃபோர்டு முடிவு
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் மறைமலைநகர் உற்பத்தி ஆலையில், கடந்த 2022 ம் ஆண்டு உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு இந்திய சந்தையில் இருந்து வெளியேற நிறுவனம் தீர்மானித்ததை அடுத்து சென்னை ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் செயல்பட்டு வந்த ஃபோர்டு நிறுவனம், கார் சந்தையில் அதிகரிக்கும் போட்டி மற்றும் விற்பனை சரிவால் இந்திய சந்தையில் இருந்து வெளியேறியது.
ஃபோர்டு நிறுவனம் தனது குஜராத் ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் விற்றுவிட்டது. எனினும், அனைத்து உற்பத்தி வசதிகளை கொண்ட சென்னை ஆலையின் நிலை கேள்விக்குறியாகவே இருந்தது.
ஸ்டாலின் சந்திப்பு
இதனிடையே, சென்னை ஆலையில் உற்பத்தியை துவங்குவது தொடர்பாக ஃபோர்டு நிறுவனம் பல நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிக்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. சென்னை ஆலையில் மின் வாகனங்கள் அல்லது ஏற்றுமதி நோக்கிலான கார்கள் தயாரிக்கப்படலாம் என கூறப்பட்டது. எனினும், இந்த பேச்சு வார்த்தைகள் வெற்றிபெறவில்லை.
இந்த பின்னணியில், அமெரிக்கா சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஃபோர்டு நிறுவன நிர்வாகிகளை சந்தித்துப்பேசினார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு, தமிழ்நாட்டுடனான உறவை புதுப்பித்துக்கொள்ளுமாறு ஃபோர்டு நிர்வாகிகளுடன் பேசியதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ஃபோர்டு சென்னை ஆலையில் மீண்டும் திறக்கப்படும் வாய்ப்பு தொடர்பான எதிர்பார்ப்பு உண்டானது.
மீண்டும் உற்பத்தி
இந்நிலையில், சென்னை ஆலையில் மீண்டும் உற்பத்தியை துவங்க திட்டமிட்டிருப்பதாக ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை ஆலையை ஏற்றுமதிக்கான கார்கள் தயாரிக்க பயன்படுத்திக்கொள்ள இருப்பதாகவும், இது தொடர்பான தகவலை தமிழ்நாடு அரசிடம் தெரிவித்துள்ளதாகவும் ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை ஆலையை ஏற்றுமதி நோக்கில் பயன்படுத்திக்கொள்வது தொடர்பான கடிதத்தை தமிழ்நாடு அரசிடம் சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியாவுக்கான எங்கள் ஈடுபாட்டை இது உறுதி செய்கிறது. தமிழ்நாடு உற்பத்தி வசதியை உலக சந்தைக்கான கார்கள் தயாரிக்க பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்,” என்று ஃபோர்டு சர்வதேச சந்தைகள் குழு தலைவர் கே ஹார்ட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தைக்கு ஏற்ப இந்த ஆலை வசதிகள் மாற்றி அமைக்கப்படும், என்றும் அவர் கூறியுள்ளார். ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள கார்கள் பற்றிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஃபோர்டு கார் தயாரிப்பில் இருந்து வெளியேறிவிட்டாலும் அதன் குளோபல் பிசினஸ் ஆப்பரேஷன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. அதில், 12,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சென்னை ஆலை மீண்டும் திறக்கப்படுவதை அடுத்து இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில் 2,500 முதல் 3,000 வரை உயரும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை வரவேற்பு
ஃபோர்டு சென்னை ஆலையில் மீண்டும் உற்பத்தி துவங்க இருப்பது தொழில்துறை மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. ஃபோர்டு நிறுவன அதிகாரி இது தொடர்பாக லிங்க்டுஇன் தளத்தில் வெளியிட்ட பதிவிற்கு பலரும் உற்சாகமாக பதில் தெரிவித்துள்ளனர். அதில் பலரும் ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.
Ford அதிகாரிகள் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை துவங்குமா ஃபோர்டு?
Edited by Induja Raghunathan