‘வாட்ஸ்அப் பேமென்ட்’ இந்தியா இயக்குநராக முன்னாள் அமேசான் நிர்வாகி நியமனம்!
டிஜிட்டல் நிதி சேவைகளில் 17 ஆண்டு அனுபவம் கொண்டவர்!
வாட்ஸ்அப் நிறுவனம் தனது ‘பேமெண்ட்’ என்ற வசதி மூலம் பயனர்களுக்கு பணம் செலுத்தும் மற்றும் பெறும் சேவைகளை வழங்கி வருகிறது. இதற்காக வாட்ஸ்அப் இந்தியா நிறுவனத்தின் கீழ் வாட்ஸ்அப் பேமெண்ட் இந்தியா செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தனது பேமெண்ட் தொடர்பான வணிகத்தின் வளர்ச்சியை வழிநடத்த முன்னாள் அமேசான் நிர்வாகி மானேஷ் மகாத்மேவை இயக்குநராக நியமித்திருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.
வாட்ஸ்அப் பேமெண்ட் இயக்குநர் என்ற பொறுப்பின் மூலமாக, மானேஷ் மகாத்மே இனி பயனர்களுக்கு பணம் செலுத்தும் அனுபவத்தை மேம்படுத்துதல், இந்தியாவில் டிஜிட்டல் மற்றும் நிதி சேர்க்கை பற்றிய வாட்ஸ்அப்பின் பார்வைக்கு பங்களிப்பு செய்வதில் கவனம் செலுத்துவார் என்று இவரின் நியமனம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மானேஷ் மகாத்மே, முன்னாள் அமேசான் நிர்வாகி மட்டுமல்ல, சிட்டி வங்கி, ஏர்டெல் மணி, போன்ற நிறுவனங்களில் டிஜிட்டல் நிதி சேவைகள் துறையில் 17 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடைசியாக அமேசானில் பணியாற்றிய நிலையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனத்தில் இணைந்துள்ளார். அமேசான் நிறுவனத்தில் அமேசான் பே இந்தியாவின் இயக்குனர் மற்றும் வாரிய உறுப்பினராக ஏழு ஆண்டுகள் பணியாற்றிய மானேஷ், பல்வேறு பிரிவுகளுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தி இருக்கிறார்.
இவரின் நியமனம் தொடர்பாக வாட்ஸ்அப் இந்தியா தலைவர் அபிஜித் போஸ்,
“மனேஷ் எங்கள் வாட்ஸ்அப் இந்தியா அணியில் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வளர்ச்சியை உண்டாக்கும் முக்கியக் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக உள்ளார். மேலும், அவரது அனுபவம் வாட்ஸ்அப் பேமெண்ட்டில் பரிவர்த்தனைகளின் தாக்கத்தையும் அளவையும் அதிகரிக்க உதவும்," என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவதற்கும், யுபிஐ மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் நிதி சேர்க்கைக்கு இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளை விரைவுப்படுத்த வாட்ஸ்அப் அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது.
2018ம் ஆண்டில் வாட்ஸ்அப் நிறுவனம் யுபிஐ அடிப்படையிலான தனது பேமெண்ட் வசதியை சோதனை அடிப்படையில் மேற்கொண்டது. சோதனையின் ஆரம்ப காலகட்டத்தில் ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு விண்ணப்பித்து இருந்ததால், சுமார் ஒரு மில்லியன் பயனர்களுக்கு மட்டுமே சேவை கொடுக்கப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் தேசிய பரிவர்த்தனைகள் கார்ப்பரேஷனிடமிருந்து (என்.பி.சி.ஐ) தனது பேமெண்ட் வசதிக்கான ஒப்புதலை பெற்றது வாட்ஸ்அப். இதையடுத்து 20 மில்லியன் பயனர்கள் வாட்ஸ்அப்பில் இணைய தொடங்கினர்.
இந்தியாவை அதன் மிகப்பெரிய சந்தையாகக் கருதுகிறது வாட்ஸ்அப். இதனால் பரிவர்த்தனை சேவைகளில் ஈடுபடும் Paytm, Google Pay, வால்மார்ட்டுக்கு சொந்தமான PhonePe மற்றும் Amazon Pay போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட வாட்ஸ்அப் தயாராகி வருகிறது.
அரசாங்க தகவல்களின்படி, இந்தியாவில் 53 கோடி வாட்ஸ்அப் பயனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, தனது நியமனம் தொடர்பாக பேசியிருக்கும், மானேஷ் மகாத்மே,
“வாட்ஸ்அப் வளர்ச்சிக் கதையின் ஒரு பகுதியாக இருக்கப் போவதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
தகவல் உதவி: பிடிஐ | தமிழில்: மலையரசு