'இந்தியாவில் டி2சி பிராண்ட்களை வளர்ப்பது எப்படி?` - வழிகளை விளக்கிய Mensa பிராண்ட் நிறுவனர்!
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நுகர்வோர் பிராண்ட்களை உருவாக்க பெரும் வாய்ப்பு இருப்பதாக டெக்ஸ்பார்க்ஸ் 2024 நிகழ்ச்சியில் மென்சா பிராண்ட்ஸ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.அனந்த் நாராயணன் தெரிவித்தார்.
இந்தியாவில் ரூ.20 கோடி பேஷன் வர்த்தகத்தை உருவாக்குவது கடினம் அல்ல, ஆனால், அந்த வர்த்தகத்தை ரூ.100 கோடிக்கு, பின் ரூ.500 கோடிக்கு வளரச்செய்வது உண்மையில் சவாலானது, என்கிறார் Mensa பிராண்ட் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.அனந்த் நாராயணன்.
பேஷன் பிராண்ட்களின் வளர்ச்சி பாதையை அவர் தனித்தனி துண்டு புள்ளிகளாக விவரித்தவர், “ரூ.20 கோடி வர்த்தகத்தை உருவாக்குவது எளிது. பூஜ்ஜியத்தில் இருந்து 20 கோடிக்கு சென்றுவிடும். அடுத்த வளர்ச்சி புள்ளி ரூ.100 கோடி, அதன் பிறகு ரூ.500 கோடி என்று விளக்கினார்.
”ஒரு பிராண்ட் ரூ.100 கோடியில் இருந்து ரூ.500 கோடிக்கு வளர வேண்டும் என்றால், அது ஆன்லைன் பிராண்டாக மட்டும் இருந்தால் போதாது. நீங்கள் விற்பனை நிலையங்களை உருவாக்கி ஆப்லைனில் செயலாற்ற வேண்டும்,” என்றார்.
டி2சி பிராண்ட்கள்
இந்த தடைகளை மீறி, இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் நுகர்வோர் பிராண்ட்களை உருவாக்க அபிரிமிதமான வாய்ப்புகள் இருக்கிறது, என்கிறார்.
“நாட்டில் டி2சி பிராண்ட்கள் ஏராளம் உள்ளன. 10 ஆண்டு கால பார்வையை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் நுகர்வோர் பிராண்டை உருவாக்க பெரும் வாய்ப்பு உள்ளது," என்று டெக்ஸ்பார்க்ஸ் 2024 நிகழ்ச்சியில் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷரத்தா சர்மாவுடன் பேசும் போது அனந்த் நாராயணன் கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட மென்சா பிராண்ட், பேஷன், அழகு கலை, இல்ல அலங்காரம் என மூன்று பிரிவுகளில் 20 பிராண்ட்கள் கொண்டுள்ளது. இந்த பிரிவுகளில் வலுவான பிராண்ட்களை உருவாக்கலாம், என்கிறார்.
”உங்களுக்கு ஐந்தாவது ஆடை அல்லது நான்காவது சட்டை தேவையில்ல. இருந்தாலும் பிராண்ட் அல்லது பொருளுக்காக வாங்குவீர்கள். இது பிராண்ட் உருவாக்கத்திற்கு வழி செய்கிறது,” என்கிறார்.
பிராண்ட வளர்ச்சி
பிராண்ட் இல்லாமல் இருப்பதில் இருந்து பிராண்டை நோக்கி செல்வது தான் சந்தையில் இப்போது போக்காக இருக்கிறது என்கிறார்.
“அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பல பிராண்ட் இல்லாத நிறுவனங்கள் பிராண்ட்களை உருவாக்கும். நுகர்வோர் பரப்பில் நாடு சர்வதேச பிராண்ட்களை கொண்டிருக்கும்," என்கிறார்.
வளரும் நுகர்வோர் போக்குகளை கண்டறிந்து மென்சா பிராண்ட் வளர்ந்துள்ளது, என்கிறார். உதாரணத்திற்கு ரூ.200 கோடி விருந்து சப்ளை வர்த்தகத்தை பார்டி பிராப்ஸ் என உருவாக்கியுள்ளதாக கூறுகிறார்.
"இப்போது சந்தையில் 50 % உள்ளோம் உலக அளவில் கொண்டு செல்ல விரும்புகிறேன்,” என்கிறார்.
இந்திய சந்தை ஒருங்கிணைக்கப்படாததாக இருக்கிறது. இதில் தான் வாய்ப்புகள் அடங்கியுள்ளது, என்கிறார். இதற்கு முன் ஒருவர் கடைக்குச் சென்று பலூன்கள் வாங்கி, மற்ற பொருட்கள் வாங்கி விருந்து நிகழ்ச்சிக்கு திட்டமிடுவார்கள் ஆனால் இப்போது, மக்கள் ஒருங்கிணைந்த தீர்வை நாடுகின்றனர், என்கிறார்.
“ஒருங்கிணக்கப்படாத பிரிவில் தரம் இல்லை. இங்கு பிராண்ட்களை உருவாக்க நல்ல வாய்ப்பு உள்ளது” என்கிறார்.
ஆங்கிலத்தில்: அபா வாரியர், தமிழில்: சைபர் சிம்மன்
மீண்டு வந்த நிதின் காமத்; வர்த்தகம், வாழ்க்கை பற்றி மனம் திறந்த ஜீரோதா நிறுவனர்!
Edited by Induja Raghunathan