ஆசிரியர் பணியை விட்டு செகன்ட் ஹேண்ட் கார் விற்பனையில் அசத்தும் சென்னைப் பெண்மணி!
ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் துறையாகக் கருதப்படும், பழைய கார்களை வாங்கி புதுப்பித்து விற்பனை செய்யும் தொழிலில், தனியொரு பெண்ணாக ஜெயித்துக் காட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பூங்கொடி.
‘இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’ என சமூகமே சில தொழில்களை பெண்களிடம் இருந்து ஒதுக்கி வைத்துள்ளது. அதில் வாகனம் சார்ந்த தொழிலும் உண்டு.
பெண்களைவிட ஆண்களுக்கு இயல்பாகவே வாகனங்கள் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் சிறுவயதில் இருந்தே ஆர்வம் அதிகமாக இருக்கும். எனவே அது சார்ந்த விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் தொழிலும் ஆண்களுக்கானதாகவே பார்க்கப்படும் மனநிலை இங்கு பலரிடம் உள்ளது.
ஆனால், அது உண்மையில்லை, ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் எந்தத் துறையாக இருந்தாலும் அதில் கற்றுக் கொண்டு சாதித்துக் காட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆசிரியையான பூங்கொடி.
தந்தை ஆசிரியர், உடன் பிறந்தவர்கள் எல்லோரும் நன்கு படித்தவர்கள் என நன்கு படித்த குடும்பத்தில் இருந்து வந்தவர் பூங்கொடி. பி.ஏ.பிஎட் முடித்து ஆசிரியையாக தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தவர், 2014ம் ஆண்டு கணவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவரது தொழிலைத் தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
தனியார் பள்ளியில் ஆசிரியையாக மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தேன். எனது கணவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். 2014ல் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், நான் எனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, அவரது தொழிலைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.
“அப்போது எங்களுக்கு என தனியாக அலுவலகம் எதுவும் கிடையாது. எனக்கு இந்தத் தொழிலில் முன் அனுபவமும் கிடையாது. எனவே முறைப்படி ஒரு அலுவலகத்தில் சேர்ந்து வேலை கற்றுக் கொண்டு இந்தத் தொழிலில் இறங்க வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படி கார் விற்பனை செய்யும் இடம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். எனது விடாமுயற்சியால் பல விசயங்களை அங்கு கற்றுக் கொண்டேன். அவைதான் எனது இன்றைய வெற்றிக்கு நான் போட்ட பலமான அடித்தளம்,” என தனது ஆரம்ப கால தொழில் வாழ்க்கை குறித்துப் பேசுகிறார் பூங்கொடி.
ஆசிரியையாக வேலை பார்த்தவர் என்பதால், இவர் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்யும் பணியைக் கொடுத்துள்ளனர். ஆனால் தொழில் நுணுக்கங்களைக் கற்க வேண்டும் என அங்கு சென்ற பூங்கொடிக்கு அது சரியான முடிவாக இருக்கவில்லை. எனவே களத்தில் இறங்கி வாடிக்கையாளர்களுக்கு கார்களைப் பற்றி எடுத்துக் கூறி, அதனை விற்பனை செய்யும் விற்பனையாளராக செயல்படத் தொடங்கினார்.
“பல பேர் மதிக்கும்படி ஆசிரியையாக வேலை பார்த்தவர் என்பதால், ஆரம்பத்தில் இந்த வேலையைச் செய்வது கொஞ்சம் மனதிற்கு கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் நானும் தனியாக தொழில் தொடங்கி, குறைந்தது பத்து பேருக்காவது வேலை தர வேண்டும் என்ற வேட்கை எனக்கு இருந்தது.
எனவே, தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். மாதம் ரூ.15 ஆயிரத்திற்கு பணியில் சேர்ந்த நான், பத்து மாதங்கள் அங்கு பணி புரிந்தேன். எனக்குத் தேவையான தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட பிறகு, தனியே தொழில் தொடங்க முடிவு செய்தேன். அப்போது எனது திறமையால் எனது சம்பளம் ரூ.25 ஆயிரமாக உயர்ந்திருந்தது.
“நான் வேலையில் இருந்து நிற்கப் போவதாகக் கூறிய போது, என் முதலாளி எனக்கு சம்பளத்தை ரூ.75 ஆயிரமாக உயர்த்தித் தருவதாகக் கூறினார். ஆனால், ஒரு முதலாளியாக மாற வேண்டும் எனக் கனவு கண்டுக் கொண்டிருந்த எனக்கு அந்த சம்பளத்தைவிட அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கைதான் இன்று பத்து பேருக்கு சம்பளம் தரும் முதலாளியாக என்னை உயர்த்தி இருக்கிறது,” என ஒவ்வொரு வார்த்தையிலும் தன்னம்பிக்கை மிளிரப் பேசுகிறார் ’ஸ்டார் கார்ஸ்’ நிறுவனரான பூங்கொடி.
தந்தையிடம் இருந்து ரூ. 5 லட்சம், தனது சேமிப்புப் பணம் ரூ.2 லட்சம் என ரூ.7 லட்சம் முதலீட்டில், 2014ம் ஆண்டு தனது 41வது வயதில், தான் படித்த படிப்பிற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத செகண்ட் ஹேண்ட் கார் விற்பனைத் தொழிலில் இறங்கினார் பூங்கொடி. அப்போது அவரிடம் ரூ. 2 லட்சம் மதிப்பில் ஐந்து கார்கள் மட்டுமே இருந்துள்ளது.
தனது விடாமுயற்சியால் அடுத்த ஆண்டே மற்றொரு அலுவலகம் ஆரம்பிக்கும் அளவிற்கு வளர்ந்தார் பூங்கொடி. அவரது தேடலும், விடாமுயற்சியும், கடின உழைப்பும் அவருக்கு கை மேல் பலனைக் கொடுத்தது. 2016ம் ஆண்டு ஒரு யார்ட் வாங்கி தனது தொழிலை விரிவு படுத்தினார்.
இந்த சமயத்தில்தான் Kuwy பைனாஸ்சுடன் கைகோர்க்கும் வாய்ப்பு பூங்கொடிக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஞானம் அவருக்கு இருந்தது.
பேங்கிங் மற்றும் நான் பேங்கிங் என 21 அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள குவே உதவியால், தன்னிடம் உள்ள கார்களை பூங்கொடியால் எளிதாக விற்பனை செய்ய முடிந்தது. இப்போது மாதம் சுமார் 20 முதல் 25 கார்கள் வரை விற்பனை செய்து வரும் அவர், லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்.
“கார் என்பது ஒவ்வொருவரின் கனவு. அதை நினைத்த நேரத்தில் வாங்க வேண்டும் என நினைப்பார்கள். ஒரு காரைப் பார்த்துவிட்டு, லோனுக்காக பத்து, பதினைந்து நாட்கள் காத்திருக்க வைத்தால், அவர்களது கார் கனவே நமத்துப் போய் விடும். இந்த இடத்தில்தான் குவே எனக்கு பெரிதும் உதவியது.
உடனடியாக வாடிக்கையாளர்களின் லோன் தகுதியைச் சரிபார்த்துச் சொல்லி, இரண்டே நாட்களில் அனைத்து வேலைகளையும் முடித்து காரைக் கையில் ஒப்படைத்து விடுவேன். எனது இந்த வேகம்தான் தொழிலில் இந்த அளவு நான் வளர முக்கியக் காரணம்.
காரை விற்று விட்டதோடு என் வேலை முடிந்து விடாது. செகண்ட் ஹேண்ட் கார் என்பதாலும், வாங்கியவர்கள் அதனை முறையாகப் பராமரிக்காமல் விட்டாலும் அதில் பிரச்சினைகள் வருவது இயல்புதான். அப்போது வாடிக்கையாளர்களிடம் அது பற்றி பேசும் அளவிற்கு காரைப் பற்றிய தெளிவு நமக்கு இருக்க வேண்டும். பழைய கார்களை வாங்கி நாங்களே சரி செய்து மீண்டும் விற்பதால் ஒவ்வொரு காரைப் பற்றியும் அனைத்து விவரங்களையும் நான் விரல் நுனியில் வைத்திருப்பேன்.
எனது தெளிவான பேச்சும், அதே சமயம் அன்பான அணுகுமுறையும்தான் புதுப்புது வாடிக்கையாளர்களை என்னிடம் கார் வாங்க வைக்கிறது, என்கிறார் பூங்கொடி.
ரூ.7 லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த இந்தத் தொழிலில் இப்போது ரூ.2 கோடி வரை முதலீடு செய்துள்ளார் இவர். பழைய கார்களை வாங்கும் பணியை அவரது கணவர் பார்த்துக் கொள்ள, அவற்றை சரி பார்ப்பதற்கென தனியே ஒர்க் ஷாப் ஒன்றையும் நடத்தி வருகிறார் பூங்கொடி. அந்த ஒர்க்ஷாப்பில் தாங்கள் வாங்கும் காரில் உள்ள பிரச்சினைகளை சரி செய்து, மீண்டும் அதனை புதுப்பித்து புதிய வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்து வருகின்றனர். ரூ.2 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மதிப்புள்ள கார்களை பூங்கொடி விற்பனை செய்து வருகிறார்.
பொதுவாகவே ஆண்களைவிட பெண்களுக்கு மனபலம் அதிகம். நிர்வாகத்திறமையோடு பிடிவாத குணமும் அதிகம். தாங்கள் நினைப்பதை சாதித்துக் காட்டும் வரை ஓய மாட்டார்கள். நானும் அப்படித்தான்.
“செகண்ட் ஹேண்ட் கார் விற்பனை, ஒர்க்ஷாப் நடத்துவது போன்றவை எல்லாம், பெரும்பாலும் கல்வி அறிவு இல்லாதவர்கள் செய்யும் வேலை என்ற பிம்பம் சமூகத்தில் உள்ளது. ஆசிரியையாக இருந்த நான், இந்த தொழிலுக்கு வரும்போது குடும்பத்திலேயே நிறைய எதிர்ப்புகளை எதிர்கொண்டேன். இந்த வேலை உனக்குத் தேவையா என வருத்தப்பட்டார்கள். ஆனாலும் என்னை நம்பி எனக்கு பண உதவியும் அவர்களே செய்தார்கள். இப்போது அவர்களது நம்பிக்கையை மெய்யாக்கி, என் உழைப்பால் வென்றிருக்கிறேன்.”
பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே இருக்கும் இந்தத் தொழிலில் அடிநிலையில் இருந்து ஆரம்பித்து இன்று எனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி இருக்கிறேன். தனியே தொழில் தொடங்கி பத்து பேருக்காவது வேலைவாய்ப்பு தர வேண்டும் என்ற கனவு, எனது கடின உழைப்பு மூலம் நிஜமாகி இருக்கிறது.
பெண்கள் எப்போதும் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும். இந்தத் துறை தனக்கு சரிப்பட்டு வராது என எதையுமே ஒதுக்கத் தேவையில்லை. ஆர்வமும், முறையான பயிற்சியும், நேர்மையும் இருந்தால் எந்தத் தொழிலிலும் எந்த வயதிலும் ஜெயிக்கலாம், என தன் ஒவ்வொரு வார்த்தையும் தானே உதாரணமாக இருந்து பேசுகிறார் பூங்கொடி.
இத்தனை வயதிற்கு மேல் என்ன சாதிக்க முடியும், இளமையிலேயே செய்திருந்தால் இந்நேரம் நானும் ஒரு தொழில் முனைவோர் ஆகி இருப்பேன், இனியெல்லாம் என்னால் இதை செய்ய முடியுமா என சந்தேகத்திலும், சோர்விலும் இருக்கும் பெண்கள் பலருக்கு பூங்கொடியின் இந்த கதை ஒரு உற்சாக டானிக்.
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!