'கூகுளின் வெற்றியை கணித்து தொடக்க காலத்திலே முதலீடு செய்த இந்திய முதலீட்டாளர்' - யார் இந்த ராம் ஸ்ரீராம்?
கூகுளின் ஆரம்ப முதலீட்டாளர்களில் ஒருவராக விளங்கும் இந்திய அமெரிக்கரான ராம் ஸ்ரீராம் சென்னையைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் சுவாரசியம்.
இணைய உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுளை இப்போது வழிநடத்துவது இந்திய அமெரிக்கரான சுந்தர் பிச்சை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், கூகுள் நிறுவனத்தின் ஆரம்ப முதலீட்டாளர்களிளும் இந்தியர் ஒருவர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
ஸ்டான்போர்ட் பல்கலை காரேஜில் சிறிய ஸ்டார்ட் அப்'பாக கூகுள் துவங்கிய போது அதற்கு நிதி அளித்தவர்களில் ஒருவர் இந்தியர் என்பது மட்டும் அல்ல, அந்த அமெரிக்க இந்தியர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும் தான் இன்னும் சிறப்பு.
வாருங்கள், ராம் ஸ்ரீராம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம். ராம் ஸ்ரீராம் இன்று கோடிகளுக்கு அதிபதி மட்டும் அல்ல, பல முன்னணி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களை ஆதரிக்கும் முதலீட்டாளரும் கூட. செல்வாக்குமிக்க இந்திய அமெரிக்க கோடீஸ்வரர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.
கவிதார்க் ராம் ஸ்ரீராம் என அறியப்படும் இவரைப்பற்றி உத்கர்ஷ் சிங் என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தொடர் குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சென்னையில் படிப்பு
கூகுள் உருவாக, இந்த அமெரிக்க இந்திய கோடீஸ்வரர் காரணம் என துவங்கும் அந்த பதிவில், இவர் சென்னையில் வளர்ந்தவர் என்பதும், மூன்று வயதில் தந்தையை இழந்து தவித்தவர் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை பல்கலையில் கணிதம் படித்தவர் பின்னர் அமெரிக்கா சென்று நிர்வாகவியல் பட்டம் பெற்றார்.
தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றியவர் அமேசான் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட ஜங்கி நிறுவனத்திலும் முக்கியப் பங்காற்றினார். அமேசானின் ஆரம்ப காலத்தில் அதன் நிறுவனர் ஜெப் பெசோசுடன் நெருக்கமாக பணியாற்றியிருக்கிறார்.
ஸ்டான்போர்டு மாணவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின், 1998ல் கூகுள் நிறுவத்தை துவக்கிய போது, அதன் ஆரம்ப கட்ட முதலீட்டாளர்களில் ஒருவராக செயல்பட்டு, 2.5 லட்சம் டாலர் நிதி அளித்து ஊக்குவித்தார். கூகுள் பொது பங்கு வெளியிட்ட போது, 5.3 மில்லியன் டாலர் மதிப்பிலான ஷேர்களை பெற்றார்.
கூகுள் முதலீடு
கூகுளில் முதலீடு செய்ததோடு மட்டும் அல்லாமல், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கூகுள் நிறுவனத்தில் முதலீடு செய்யவும் ராம் வழிவகுத்தார். கூகுள் முதலீடு சுற்று முடிந்தவிட்ட போதிலும், பெசோஸ் வேண்டுகோளை ஏற்று கூகுள் நிறுவனர்களிடம் பேசி அவர் முதலீடு செய்ய ராம் ஏற்பாடு செய்தார்.
புத்தாயிரமாண்டுக்கு பின் அமேசானில் இருந்து விலகிய ராம், ஷெர்பாலோ வென்சர்ஸ் எனும் நிறுவனம் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். இன்மொபி, கஸ்டோ, பேப்பர்லெஸ் போஸ்ட் உள்ளிட்ட ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளார்.
ஃபிளிப்கார்ட், ரேஸர்பே, நோஷன் உள்ளிட்ட நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார். வெற்றிகரமான முதலீட்டாளராக கருதப்படுபவர், பெரிய நன்கொடையாளராகவும் விளங்குகிறார்.
டிவிட்டரில் வரவேற்பு
கூகுள் நிறுவனத்தில் தனது பங்குகளின் பெரும்பகுதியை விற்று விட்டாலும், அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் இயக்குனர் குழுவில் தொடர்கிறார். கூகுளின் ஆரம்ப முதலீட்டாளராக மட்டும் அல்ல, இந்நிறுவனம் எதிர்காலத்தில் பெறப்போகும் வெற்றியை கணித்து நம்பிக்கை வைத்தவர்களில் ஒருவராகவும் ராம் ஸ்ரீராம் திகழ்கிறார்.
ராம் ஸ்ரீராம் தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தாலும், உத்கார்ஷ் சிங்கின் தொடர் பதிவு கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் கணவர் ஸ்ரீராம் நேனி உள்ளிட்ட பலர் இதில் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘அசோக் இல்லைன்னா டெஸ்லா இல்லை…' - எலான் மஸ்க் புகழ்ந்த தமிழக பொறியாளர் யார்?
Edited by Induja Raghunathan