‘ஆரஞ்சு பழவியாபாரி டு பத்மஸ்ரீ விருது' - குழந்தைகளின் கல்விக் கனவை நிறைவேற்றும் ஹஜப்பா!
தனி ஆளாக பள்ளி தொடங்கி குழந்தைகளுக்கு கல்விகிடைக்க காரணமான ஹஜப்பா!
பத்ம விருதுகள் நேற்று வழங்கப்பட்டது. இதில் அதிகம் கவனம் ஈர்க்கப்பட்ட நபராக இருந்தவர் பத்ம ஸ்ரீ விருதுபெற்ற கர்நாடகாவைச் சேர்ந்த ஹரேகலா ஹஜப்பா என்பவர் தான். கர்நாடக மாநிலம், மங்களூருவின் புறநகரிலுள்ள ஹரேகலா பகுதி தான் இவருக்கு பூர்வீகம். இதனாலே ஹரேகலா ஹஜப்பா என அழைக்கப்படும் இவரின் பிரதான தொழில் ஆரஞ்சு பழம் விற்பனை.
ஹரேகலா சந்தையில் ஆரஞ்சு பழங்களை விற்றுவரும் ஹஜப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்க காரணம் கல்வி மீதான ஈடுபாடு தான்.
ஒரு சிறிய பிளாஷ்பேக் உடன் இதை ஆரம்பிக்கலாம்...
சில வருடங்கள் முன் சந்தையில் ஆரஞ்சு பழங்களைவிற்றுக்கொண்டிருந்துள்ளார் ஹஜப்பா. அப்போது சந்தைக்கு வந்த வெளிநாட்டவர் ஒருவர் ஆரஞ்சு பழம் வாங்க நினைத்து அதற்கான விலையை ஹஜப்பாவிடம் ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். ஆனால், அவர் கேட்டது ஹஜப்பாவுக்கு புரியவில்லை. புரிந்துகொண்டால் ஆங்கிலம் தெரியாததால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த சூழ்நிலையில் கல்வியின் மகத்துவத்தை புரிந்துகொண்ட ஹஜப்பா, தனது கிராமக் குழந்தைகளுக்கும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள முடிவெடுத்தவர், அதற்காக ஆரம்பப் பள்ளி ஒன்றை தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஆசை இருந்தாலும் பணம் இல்லை, ஆனால் ஹஜப்பா மனதில் உறுதி இருந்தது. ஆரஞ்சு பழ விற்பனையால் கிடைக்கும் வருவாயை சேமிக்கத் தொடங்கினார். 1999ல் அந்தப் பணத்தை கொண்டு கிராமத்தின் மசூதியில் முதன்முதலில் ஆரம்பப் பள்ளி ஒன்றை தொடங்கினார்.
ஆரம்பத்தில் இதில் 28 மாணவர்கள் படித்தனர். இதைக்கொண்டு அரசிடம் இருந்தும் நன்கொடையாளர்களிடமிருந்தும் கிடைத்த பணத்தை கொண்டு தனியாக பள்ளியை நிறுவினார்.
காலங்கள் செல்ல செல்ல, நண்பர்கள் மற்றும் அரசின் உதவியுடன் அரசாங்கப் பள்ளியாக மாற்றினார். தற்போது அந்த பகுதியில் உயர்நிலைப் பள்ளியாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சிறப்பாக செயல்பட்டுவருகிறது.
ஆரம்பத்தில் இந்தப் பள்ளிக்கு ஹஜப்பா கொடுத்த பங்களிப்பு எவ்வளவு தெரியுமா 5000 ரூபாய். 1999 வாக்கில் பெரிய தொகையாக இருந்த இது தான் பள்ளிக்கு மூலதனமாக போட்டுள்ளார்.
பள்ளிக்கு பணம் கொடுத்தது மட்டுமில்லாமல், பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்துவது, மாணவர்களுக்கு தண்ணீர், உணவு ஏற்பாடு செய்வது, அதிகாரிகளிடம் பேசி கல்விக்கான வசதியை மேம்படுத்துவது என வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை குழந்தைகளின் கல்விக்காகவே செலவிட்டு இருக்கிறார் ஹஜப்பா.
ஹஜப்பாவின் இந்த உதவியை நேரில் பார்த்த அப்பகுதி காவல்துறை துணை ஆணையர் ஏ.பி.இப்ராஹிம் என்பவர் 2014ல் மத்திய அரசின் பத்ம விருதுக்கு ஹஜப்பா பெயரை பரிந்துரை செய்துள்ளார். அதன்படி, பத்மஸ்ரீ விருது கடந்த ஆண்டு அவருக்கு அறிவிக்கப்பட்டது.
நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் அந்த விருதை பெற்றுக்கொண்டார். தற்போது ஹஜப்பாவின் கல்வி சேவைகளை குறித்து பலர் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.