அன்று குப்பை சேகரித்தவர்: இன்று 500 குழந்தைகள் கல்வி கற்க உதவுகிறார்!
தேவி பிரதாப் சிங், சாந்தினி கான் இருவரும் இணைந்து Voice of Slum என்கிற என்ஜிஓ தொடங்கி நலிந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் படிக்க உதவுவதுடன் பெருந்தொற்று சமயத்தில் உணவு விநியோகம் செய்தும் உதவியுள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள சம்பால் சம்பாக் பகுதியைச் சேர்ந்தவர் தேவ் பிரதாப் சிங். நடுத்தர வர்க்க குடும்பம். அப்பா எல்ஐசி இந்தியாவில் வேலை செய்து கொண்டிருந்தார். அம்மா இல்லத்தரசி.
“என் பகுதியில் சிலர் தீய பழக்கங்களுக்கு அடிமையாகியிருந்தார்கள். சிறு வயதில் நான் அவர்களை என் முன்னுதாரணமாக நினைத்துக் கொண்டிருந்தேன். என் அப்பா மிகவும் கடுமையானவர். வீட்டில் அடிக்கடி சண்டை வரும். எனக்கு 12 வயதிருக்கும்போது கையில் 130 ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு கிளம்பி குவாலியர் பகுதியின் தப்ராவுக்கு ரயில் ஏறினேன்,” என்று அந்த நாட்களை நினைவு கூர்ந்தார் தேவ்.
இரண்டே நாட்களில் கையில் இருந்த பணம் தீர்ந்தது. பணம், சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லை. அப்பாவின் மீதிருந்த பயத்தால் உறவினர் யாரையும் தொடர்புகொள்ளவும் இல்லை. சிறு வயது என்பதால் யாரும் வேலையும் கொடுக்கவில்லை.
ரயில் நிலையத்தில் சிறுவர்கள் குப்பைகளை சேகரிப்பதை தேவ் கவனித்தார். பணம் சம்பாதிக்க அவரும் குப்பைகளை சேகரிக்க ஆரம்பித்தார். ஆனால் இந்தச் சிறுவர்கள் வொயிட்னர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தனர். அவர்களுடன் சேர்ந்ததால் தேவ் வொயிட்னர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
மெல்ல சின்னச் சின்னத் தவறுகள் செய்ய ஆரம்பித்த தேவ் காவலரிடம் பிடிபட்டு 15 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். தேவ் உள்ளிட்ட மற்ற குழந்தைகளையும் ஒருவர் சிறையிலிருந்து பெயிலில் வெளியில் எடுத்துள்ளார். தாபா ஒன்றில் வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்த தாபா கார்ப்பரேட் அவலுவலகம் ஒன்றிற்கு அருகில் இருந்தது. இங்கிருந்து வரும் வாடிக்கையாளர்களின் நட்பு தேவிற்கு கிடைத்தது.
வெயிட்டர் வேலை செய்வதற்காக கோவாவிற்கு மாற்றலாகியுள்ளார். 4,000 ரூபாய் மாத சம்பளத்தில் கோவாவில் வேலையும் கிடைத்துள்ளது.
திருப்புமுனை
சில ஆண்டுகளுக்குப் பின்னர் தேவ் டெல்லி சென்றார். விற்பனையாளராக வேலையில் சேர்ந்தார். இரண்டாண்டுகளிலேயே பதவு உயர்வு கிடைத்தது. ஏரியா சேல்ஸ் மேனேஜர் ஆனார். 45,000 ரூபாய் சம்பாதித்தார்.
பல ஆண்டுகள் கழித்து 2012-ல் தேவ் அவரது அம்மாவை ஆக்ராவில் சந்தித்துள்ளார். ஆனால் அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மறுநாளே தேவின் அம்மா சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இரண்டாண்டுகள் கடந்தன. சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவித்தார். இவரைப் போன்றே கடினமான நாட்களைக் கடந்து வந்த சாந்தினி கான் என்பவரை தேவ் சந்தித்தார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் குப்பைகளை சேகரிப்பவர்களின் நிலை மாறவில்லை என்பதைக் கண்டு வருந்தினார். தேவ், சாந்தினி இருவரும் சேர்ந்து என்ஜிஓ ஒன்றைத் தொடங்க திட்டமிட்டார்கள்.
ஆனால் இவர்களிடம் பணமில்லை. தேவ் படிக்கவில்லை என்பதால் கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டார். இருவரும் குடிசைப்பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த குழந்தைகளுடன் பேசினார்கள். தேவி தனது லேப்டாப்பை விற்றுவிட்டு ஸ்மார்ட்போன் வாங்கினார்.அதன் பிறகு சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள்.இருவரும் தங்களது முயற்சியை Voice of Slum என்கிற பெயரில் அடையாளப் படுத்திக்கொண்டார்கள்.
குடிசைப்பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிட்டனர். சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களிடம் தங்கள் முயற்சிக்கு உதவ ஒரு ரூபாய் நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.இரண்டு மணி நேரத்தில் 10,000 ரூபாய் வரை நிதி திரட்டமுடிந்தது.
என்ஜிஓ-வை சிறப்பாக நடத்தமுடியும் என்கிற நம்பிக்கை பிறந்ததும் 2016-ம் ஆண்டு டெல்லி என்சிஆர் பகுதியில் அதிகாரப்பூர்வமாக Voice of Slum தொடங்கினார்.
நலிந்த குழந்தைகளுக்காக குரல் கொடுத்தார்கள்
“குடிசைப்பகுதிகளில் பள்ளியைத் தொடங்குவதில் எங்களுக்கு விருப்பதில்லை. மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிப்பதற்காக நொய்டாவிலேயே பள்ளி போன்ற அமைப்பை ஏற்படுத்த விரும்பினோம்,” என்கிறார் தேவ்.
இன்று Voice of Slum முயற்சி 30 ஊழியர்களின் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இங்கு100 குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். வழக்கமான பள்ளிக்கு செல்லும் வரை இரண்டாண்டுகள் இங்கு பயிற்சியளிக்கப்படுகிறது. பள்ளிக் கட்டணம் நன்கொடை மூலம் கட்டப்படுகிறது. குழந்தைகள் பள்ளிக்கு வந்து செல்ல போக்குவரத்து ஏற்பாடும் செய்யப்படுகிறது.
“குழந்தைகளுக்கு பாடம் கற்றுகொடுப்பது மட்டுமே எங்கள் நோக்கமல்ல. அவர்களால் வறுமையில் இருந்து மீளமுடியும் என்பதையும் அடுத்த தலைமுறை குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் அவர்கள் மனதில் ஆழமாகப் பதியவைக்க விரும்புகிறோம்,” என்கிறார்.
தற்போது 500 குழந்தைகளுக்கு இந்த என்ஜிஓ கல்வி வழங்கி வருகிறது. இதில் 370 பேர் முறையான பள்ளிப்படிப்பு மேற்கொள்ள பதிவு செய்திருக்கிறார்கள். என்ஜிஓ செயல்பாடுகளுக்கு ஆண்டிற்கு 2 கோடி ரூபாய் செலவாகும் நிலையில் நன்கொடையாளர்கள் உதவி செய்வதாக தேவ் குறிப்பிடுகிறார்.
குழந்தைகளுக்கான சர்வதேச பொழுதுபோக்கு மையமான Kidzania இந்த என்ஜிஓ-வில் உள்ள குழந்தைகளுக்காக 1,000 டிக்கெட்களை வழங்கி உதவுகிறது. இந்த மையம் நொய்டாவில் உள்ளது.
பெருந்தொற்று சமயத்தில் குடும்பத்தினருக்கு உதவி
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் பெரும்பாலான குழந்தைகள் அவதிப்பட்டனர். பெற்றோர்களுக்கு வேலை இல்லை. சாப்பிட உணவின்றி தவித்தார்கள். Voice of Slum இவர்களுக்கு உணவும் மளிகைப் பொருட்களும் கொடுத்து உதவியுள்ளது. வேன் ஒன்றை வாங்கி உணவு விநியோகிப்பதற்காக பிரத்யேகமாக சிலரை நியமித்தார்கள். தினமும் 500-1000 பேருக்கு உணவளித்துள்ளார்கள்.
2020-ம் ஆண்டு முதல் முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து இக்குழுவினர் 20 லட்சத்திற்கும் அதிகமான உணவுகளை ’Voice of Slum, Feed the Slum’ என்கிற முயற்சியின்கீழ் வழங்கியுள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலையின்போது 60-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகித்துள்ளனர்.
சவால்களும் வருங்காலத் திட்டங்களும்
இந்த என்ஜிஓ-விற்கு பணம் மிகப்பெரிய சிக்கலாக இருந்துள்ளது. நிறுவனர்கள் இருவருமே படிக்காதவர்கள் என்பதும் மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது.
“சிறுவயதில் குப்பை சேகரிக்கும் வேலை செய்திருக்கிறோம்; படிப்பு இல்லை; இவையெல்லாம் எங்கள் முயற்சியை மேற்கொள்ள மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தன,” என்கிறார்.
அடுத்தகட்ட திட்டங்கள் பற்றி தேவ் விவரிக்கும்போது, ”2023-ம் ஆண்டு முறையாக பள்ளியைத் திறக்க விரும்புகிறோம். அதைத் தொடர்ந்து படிப்படியாக விரிவடைய திட்டமிட்டுள்ளோம். வரும் நாட்களில் மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் உதவ விரும்புகிறோம்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா