18 ஆயிரம் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ள பிரபல உள்ளாடை தொழிற்சாலை!

’பிராண்டிக்ஸ் இந்தியா’ ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பளித்து உதவுவது குறித்து பகிர்ந்துகொண்டார் ஹெர்ஸ்டோரியின் ’வுமன் ஆன் ஏ மிஷன் சம்மிட்’டில் #HeForHer விருது வென்றுள்ள பச்சிபல்லா தோராசாமி.

18 ஆயிரம் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ள பிரபல உள்ளாடை தொழிற்சாலை!

Tuesday April 16, 2019,

5 min Read

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ’பிராண்டிக்ஸ் இந்தியா அப்பாரல் சிட்டி’ (Brandix India Apparel City) 22,000 பேரை பணியிலமர்த்தியுள்ளது. இதில் 18,000 பேர் பெண்கள். அதாவது 82 சதவீதம். நாட்டிலேயே ஆடை துறையில் ஒரே பகுதியில் அதிக பெண்களை பணியிலமர்த்தும் நிறுவனங்களில் ஒன்றாக பிராண்டிக்ஸ் உருவாகியுள்ளது என தெரிவித்தார் இந்நிறுவனத்தின் இந்திய பார்ட்னர் பச்சிபல்லா தோராசாமி.

பிராண்டிக்ஸ்; இலங்கை, இந்தியா, வங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ள 42 தொழிற்சாலைகளின் ஆதரவுடன் செயல்படுகிறது. இந்நிறுவனம் 48,000 பேரை பணியிலமர்த்தியுள்ளது. பிராண்டிக்ஸ் இலங்கையில் இவ்வாறு மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் ஒரே நிறுவனமாகும்.

விசாகப்பட்டினத்தில் இருக்கும் அதன் அப்பாரல் சிட்டியில் இந்த 18,000 கிராமப்புற பெண்களும் Victoria’s Secret, PINK, Marks & Spencer, Calvin Klein உள்ளிட்ட உலகளவிலான முன்னணி பிராண்டுகளுக்கு உள்ளாடைகளை தயாரிக்கின்றனர்.

சாதாரணமான, தன்னம்பிக்கையற்ற, நடுநிலைப்பள்ளி வரை படித்த பெண்களை நம்பிக்கை நிறைந்த ப்ரொஃபஷனல்களாக மாற்றவேண்டும் என்கிற நோக்கத்துடன் பிராண்டிக்ஸ் இந்தியா துவங்கப்பட்டது என்கிறார் தோராசாமி.

தொழிற்சாலை

“நாங்கள் பணியிலமர்த்தும் பெண்கள் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 600 கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஏழாம் வகுப்பு முடித்தவர்கள். எளிய நேர்காணல் மற்றும் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு மாத பயிற்சிக்குப் பின்னர் தொழிற்சாலைகளில் பணியிலமர்த்தப்படுகிறனர். மேலும் அதிக பெண்களை இணைத்துக்கொள்ள உள்ளூர் கிராமங்களில் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்ளத் துவங்கியுள்ளோம்,” என விவரித்தார்.

தோராசாமி சமீபத்தில் ஹெர்ஸ்டோரியின் ’வுமன் ஆன் ஏ மிஷன் சம்மிட்’டில் #HeForHer விருது வென்றுள்ளார். இந்தியா போன்ற நாட்டில் பெண்களுக்கு சக்தியளிக்கப்படவும் பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவும் ஆண்கள் தரப்பில் வழங்கப்படும் ஆதரவு அவசியமாகிறது.

பிராண்டிக்ஸ் இந்தியாவின் வெற்றிக்கதை என்பது தோராசாமின் போராட்டம் நிறைந்த பயணத்துடன் ஒன்றியதாகும். இந்தப் பயணத்தில் பல்வேறு தடைகளைத் தகர்த்து இன்று ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளார். இன்றளவும் ஆரவாரம் ஏதுமின்றி பெண்கள் முன்னேற்றத்தில் அமைதியான முறையில் பங்களித்து வருகிறார்.

தடைகள் தகர்க்கப்பட்டன

தோராசாமி ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் தொலைதூர கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.

“அந்த நாட்களில் என்னுடைய கிராமத்தில் மின்சார வசதி இல்லை. கிராமத்தில் இருக்கும் அரசுப்பள்ளிக்குச் செல்ல தினமும் இரண்டு மைல் தூரம் நடந்துசெல்வேன். சிறு வயதில் நான் சந்தித்த போராட்டங்களே என்னை இன்றைய நிலைக்கு உயர்த்தியுள்ளது. இன்று சாதாரணமாக கிடைக்கக்கூடிய பல விஷயங்களை அன்று மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்துள்ளது,” என்றார்.

அருகாமையில் இருக்கும் பிலேறு பகுதியில் தனது இடைநிலைப் படிப்பை முடித்த பிறகு பிஎஸ்சி, பிஃபார்ம் என பல்வேறு பிரிவுகளை ஆராய்ந்து இறுதியாக நுண்கலை படிக்க முடிவு செய்தார். ஹைதராபாத்தின் ஜேஎன்டியூ கல்வி நிலையத்தில் ஃபோட்டோகிராபி மற்றும் ஒளிப்பதிவைத் தேர்வுசெய்து நுண்கலையில் இளங்கலை படிப்பை முடித்தார்.

”என்னுடைய இளம் வயது முதல் படைப்பாற்றல் மீது எனக்கு ஆர்வம் அதிகம். இதுவே என்னை விளம்பரம் தொடர்பான நிறுவனத்தைத் துவங்க ஊக்குவித்தது. நான் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் இதே துறையில் இருந்ததால் பலருடன் அறிமுகமாகியிருந்தேன். நலிந்த மக்களின் மேம்பாட்டிற்காக பணிபுரிய விரும்பினேன். கிராமப்புறப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரத்தை பராமரிக்க உதவும் பொருட்களை மலிவு விலையில் உருவாக்கத் துவங்கி அரசு கொள்கைகளை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டேன்.

இந்தப் பணிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு பலருக்கு நன்மை பயத்தது. சமூகத்தின் இந்தப் பிரிவினரின் மேம்பாட்டிற்கு பணிபுரிவதிலேயே எனக்கு அதிக ஈடுபாடு இருப்பதை உணர்ந்தேன்,” என்றார்.

பணியே கடவுள்

இந்த சமயத்தில் நண்பர் ஒருவர் மூலம் பிராண்டிக்ஸ் இந்தியாவில் பார்ட்னராக இணையும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பணியிடத்தையே கோயிலாகவும் பணியையே கடவுளாகவும் கருதும் சூழலை உருவாக்கி பிராண்டிக்ஸ் இந்தியா அப்பாரல் சிட்டி (BIAC) குழுவை ஒருங்கிணைக்கவேண்டும் என்பதே அவரது நோக்கம்.

விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகம் புதுமையான முறையில் உருவாக்கப்பட்டு செயல்படுகிறது. சிறப்பான ஒருங்கிணைப்பு செயல்முறையைப் பின்பற்றி வடிவமைப்பு முதல் நுகர்வோர் பிராண்ட் வரையிலும் ஆடைகள் பகுதியில் செயல்படும் உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் இந்த வளாகத்தில் ஒன்றிணைக்கப்படுகிறது.

அதிகளவிலான பெண்களை பணியிலமர்த்துவதற்கு பிராண்டிக்ஸ் இந்தியா முக்கியத்துவம் அளித்தது என்கிறார் தோராசாமி.

தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு பிராண்டிக்ஸ் இந்தியாவில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகளில் திறன் இருப்பதைக் கண்டோம். இவர்கள் கடினமாக உழைக்கின்றனர். இவர்களது நிலை மேம்பட்டால் இவர்களது குடும்பத்திற்கு உதவியாக இருப்பதுடன் அடுத்த தலைமுறையும் பலனடையும்.

பிராண்டிக்ஸ் இந்தியாவின் கொள்கைகள், சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தாண்டி வகுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் பணி நேரத்தின் இடையே ஓய்வெடுக்கும் வசதி வழங்கப்படுகிறது. கூடுதல் ஊட்டச்சத்து கொடுக்கப்படுகிறது. ஊழியர்கள் வீட்டிற்கும் பணியிடத்திற்கும் இடையே பாதுகாப்பாக சென்று திரும்ப பேருந்து ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பணியிடத்தில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பான காப்பகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அதிக விடுப்புகள் எடுக்காமல் வருகை தரும் ஊழியர்களுக்கு போனஸ், திருமண பரிசு திட்டங்கள், உதவித்தொகை திட்டங்கள், சிறந்த ஊழியர் விருது, மானியத்துடன்கூடிய உணவகங்கள் என பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளன. ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்து அவர்களது பணிச்சூழலை புரிந்துகொள்ளலாம். தொழிலாளர்கள் வசிக்கும் கிராமங்களுடன் வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்சாலைகளிலும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் அமைப்பான POSH குழு செயல்படுகிறது.

இருப்பினும் அதற்கே உரிய சவால்களும் இருந்தது.

“தொழிற்சாலை கழிவுகளை அகற்றுவதற்கான பைப்லைனை கட்டுவதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில அரசாங்கம் மற்றும் உள்ளூர் தலைவர்கள் தலையீட்டுடனும் அவர்களுடன் கலந்துரையாடியும் இந்த சிக்கலை சமாளித்தோம். மீனவ குடும்பங்களுக்கு இழப்பீடும் வழங்கினோம். பல்வேறு தரப்புகளில் இருந்து எழுந்த எதிர்ப்புகளை எதிர்கொள்ள இரண்டு விஷயங்கள் உதவியது. முதலாவதாக ஊழியர்கள் தரப்பிலிருந்து எங்களுக்கு ஆதரவு கிடைத்தது. இரண்டாவதாக மக்களின் நிலையை மேம்படுத்துவதற்கான மாற்றத்தை நான் ஏற்படுத்தியதை குழுத்தலைவர்கள் உணர்ந்தனர்.

உரிமையாளர் அல்ல, ஊழியர் மட்டுமே

”22,000 பணியாளர்களை ஒரே கூரையின் கீழ் நிர்வகிப்பது எளிதான செயல் அல்ல. பிராண்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் நான் அவர்களுடன் பணிபுரியும் ஒரு சக ஊழியர்தான் என்கிற உணர்வை ஏற்படுத்துவேன். தொழிற்சாலையில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரிடமும் என்னுடைய தொடர்பு எண் இருக்கும். அவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் அல்லது வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பலாம். நான் அவர்களுடனேயே பயணம் செய்து, உணவருந்தி, பணிபுரிந்து அவர்களது பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு தீர்வு காண்கிறேன்,” என்றார்.

பிராண்டிக்ஸ் இந்தியாவில் பணிபுரியும் பெண்கள் வெவ்வேறு பின்னணியில் இருந்து வருகின்றனர். வெவ்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். நிறுவனத்தை லாபகரமாக நடத்தவேண்டும் என்பதுடன் கிராமப்புற பெண்கள் நிலையை மேம்படுத்தவேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார் தோராசாமி.

ஒவ்வொரு ஊழியரின் பிரச்சனையும் தனது சொந்த பிரச்சனையாகக் கருதி அதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்கிறார் இவர்.

நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதுடன் நிறுவன வளாகத்தை சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு சமூக நற்பணிகளையும் செய்து வருகிறார் தோராசாமி. கண் சிகிச்சை முகாம்கள், மருத்துவ முகாம்கள், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்கான இலவச ஸ்கிரீனிங், மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள், உள்ளூர் விளையாட்டுளில் பங்கேற்க இளைஞர்களை ஊக்குவித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்.

அதிக பெண்களை சென்றடைதல்

தான் மேற்கொள்ளவேண்டிய பணிகள் இன்னமும் ஏராளமாக உள்ளது என்கிறார் இவர்.

”தொழிற்சாலைக்கு கூடுதல் பணியாளர்களைக் கண்டறிவது சவால் நிறைந்ததாக உள்ளது. சாலை மோசமான கட்டமைப்புகளுடன் இருப்பதால் தொலைதூரத்தில் இருப்பவர்கள் பேருந்துகளில் வந்து செல்வது கடினமாக உள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ள திட்டமிட்டு வருகிறோம். அடுத்த இரண்டாண்டுகளில் கூடுதலாக 6,000 தொழிலாளர்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். சாலைகள் சீரமைப்பு, மருத்துவ வசதி, பள்ளிகள் என உள்ளூர் கட்டமைப்புகளை சீர்படுத்த அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்,” என்றார்.

பொருளாதார ரீதியாக இந்தியப் பெண்களின் பங்களிப்பு குறைந்திருப்பதையும் அதன் தாக்கத்தையும் குறித்த யுவர்ஸ்டோரியின் India’s Missing Demographic Dividend என்கிற அறிக்கையானது பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது தொழிலாளர்கள் எண்ணிக்கையில் பெண்கள் பங்களிப்பு விகிதமும் (LFPR) அதிகரிக்கவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது. சிறப்பாக வருவாய் ஈட்டுக்கூடிய பணியானது மக்களிடையே உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம்பிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. கூடுதல் திறன்களை ஆராய ஊக்குவிக்கிறது. இலக்கை எட்டத் தேவையான முயற்சிகளை எடுக்கவைக்கிறது.

இத்தகைய தாக்கம் ஏற்பட பிராண்டிக்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்கள் அவசியம்.

”ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு நபரின் முகத்திலாவது புன்னகையை வரவழைக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். இது வெறும் துவக்கம் மட்டுமே. மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த நான் இன்னமும் பல்வேறு முயற்சிகள் எடுக்கவேண்டியுள்ளது,” என்றார் தோராசாமி.

ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்ரீவித்யா

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற