250 கோடி நிதி திரட்டிய சென்னை அக்ரி-டெக் நிறுவனம்!
40,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் வேளான் ஸ்டார்ட் அப் நிறுவனமான Waycool foods 3ம் சுற்று நிதி திரட்டியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த விவசாய ஸ்டார்ட் அப் நிறுவனமான, வேகூல் புட்ஸ் (Waycool foods) சமபங்கு மற்றும் கடன் இணைந்த சி சுற்று நிதித் திரட்டல் மூலம் 32 மில்லியன் டாலர் நிதி பெற்றுள்ளது.
லைட்பாக்ஸ் தலைமையிலான இந்த சுற்றில், நெதர்லாந்தின் தொழில்முனைவு நிறுவனமான எப்.எம்.ஓ மற்றும் அதன் தற்போதைய முதலீட்டாளரான எல்.ஜி.டி லைட்ஸ்டோன் அஸ்படா பங்கேற்றன.
இந்த சுற்றின் ஒரு பகுதியாக வென்ச்சர் கடன் திரட்ட, இன்னோவென் நிறுவனத்துடனும் இணைந்துள்ளது.
“தொழில்நுட்பம் மற்றும் பிராண்ட் உருவாக்கத்தில் லைட்பாக்ஸ் நிறுவனத்திற்கு உள்ள ஆழமான அறிவு, எங்கள் டிஜிட்டல் பின்புலத்திற்கு உதவும் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை நோக்கிச்செல்ல உதவும். நிறுவன அமைப்பில் கலாச்சார ஒருங்கிணைப்பை உருவாக்க, சரியான திசையில் முன்னேற எப்,எம்.ஓ வழிகாட்டும்,” என்று வேகூல் புட்ஸ் இணை நிறுவனர், சி.இ.ஓ கார்திர்க் ஜெயராமன் கூறினார்.
சப்ளை செயின் வசதியை மேம்படுத்த மற்றும், இதன் செயல்திறனை மேம்படுத்த தேவைப்படும் டேடா அனல்டிக்சின் அடுத்த லேயரை உருவாக்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சில்லறை வாடிக்கையாளர்கள், நிறுவனங்களுக்கான மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளை அதிகமாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளது.
வேகூல் புட்ஸ் நிறுவனம், புதிதாக விளைந்தவை, பால் பொருட்கள், தானியங்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து, பதப்படுத்தி விநியோகிக்கிறது. தென்னிந்தியாவில் 8,000க்கும் மேற்பட்ட நிறுவன வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. மண்ணில் இருந்து விற்பனை முறையில் நிறுவனம், 40,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகிறது. அவர்கள் வருவாயை மேம்படுத்த உதவுகிறது.
வேகூல் நிறுவனம் பிராண்டட் பொருட்களை உருவாக்கி வருகிறது. பிரெஷே, கிட்சென்ஜி, மதுரம் ஆகிய பிராண்ட்களை கொண்டுள்ளது.
“உணவு சப்ளை செய்னில் உள்ள சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் வேகூல் நிறுவனத்தின் செயல்பாட்டு உற்சாகம் அளிக்கிறது. இவர்களுடன் இணைந்து விவசாயிகள் வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்,” என லைட்பாக்ஸ் பார்ட்னர் பிரசாந்த் மேத்தா கூறியுள்ளார்.
வேகூல் நிறுவனம், தனது விவசாயத் திட்டமான அவுட்குரோவை மேம்படுத்தவும் நிதியை பயன்படுத்திக்கொள்ளும். விவசாயிகள் பரப்பை அதிகமாக்கும் வகையில் பொருத்தமான தொழில்நுப்டங்களை கொண்டு வர, பல்வேறு ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து செயல்படுவதற்கான முதல் விவசாய ஆய்வு மையத்தை அண்மையில் நிறுவனம் அமைத்தது.
“லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சேவையை மேம்படுத்த நிறுவனம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. எனவே வேல்யூசெயின் மேம்படுத்தப்பட்டு உணவு வீணாவது குறைகிறது,” என எப்.எம்.ஓ முதன்மை முதலீட்டு அதிகாரி லிண்டா புரோகுய்சென் தெரிவித்துள்ளார்.
35,000 க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளிடம் இருந்து நிறுவனம் கொள்முதல் செய்து, அவர்கள் அதிக விலை பெற உதவுவதால் சமூக நோக்கிலும் தாக்கம் செலுத்துகிறது.
2015ல் கார்திக் ஜெயராமன், சஞ்சய் தாசரி ஆகியோரால் துவக்கப்பட்ட இந்நிறுவனம், லாபத்தை நோக்கிய தனது பயணத்தை வேகமாக்க உள்ளது. இதற்கு முன்னர் நிறுவனம், அஸ்படா, எல்ஜிடி இம்பேக்ட் வென்சர்ஸ், சாஸ்பியன் இம்பேக்ட் வென்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து இரண்டு சுற்று நிதி திரட்டியுள்ளது.
லைட்பாக்ஸ் மும்பையைச் சேர்ந்த வென்சர் முதலீட்டு நிறுவனமாகும். டன்சோ, பாம்பே ஷர்ட் கம்பெனி உள்ளிட்டவற்றில் இது அண்மையில் முதலீடு செய்துள்ளன. ரிபெல் புட்ஸ், மெலோரா, எம்பைப் உள்ளிட்ட நிறுவனங்களில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளது.
சுஜாதா சங்க்வான்
தமிழில்: சைபர்சிம்மன்