உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 5.5 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க முடிவு!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு:
முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் 'உலக முதலீட்டாளர்கள் மாநாடு' நடைபெற உள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் மாநாட்டில் கையெழுத்தாக உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றும் வகையிலும், தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஏதுவாகவும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இரண்டு நாட்களுக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் முந்தைய மாநாடுகளை மிஞ்சும் வகையில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மாவட்டந்தோறும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் ஆலோசனை:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான பணிகளை தமிழ்நாடு தொழில்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆயத்த பணிகள் குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, அரசு அதிகாரிகள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில் துறை செயலாளர் அருண் ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.50 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,
“இதை முந்தைய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுடன் ஒப்பிடவே முடியாது. இதுவரை தமிழகத்தில் பார்க்காத முக்கிய நிறுவனங்கள் வரப்போகின்றன. குறிப்பாக படித்த இளைஞர்களுக்கு உயர்தர வேலை வாய்ப்பு கிடைக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தொழில்துறை, ஆட்டோமொபைல், எரிசக்தித்துறை, தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன.