பிளாஸ்டிக்கிற்கு குட்-பை; மீண்டும் கையில் எடுப்போம் ‘மஞ்சப்பை’ - முக ஸ்டாலினின் விழிப்புணர்வுத் திட்டம்!
மண்ணுக்கும், மக்களுக்கும் தீங்கும் விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைத்து மக்கள் துணிப்பைகளுக்கு திரும்பும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
மண்ணுக்கும், மக்களுக்கும் தீங்கும் விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைத்து மக்கள் துணிப்பைகளுக்கு திரும்பும் வகையில் மீண்டும் 'மஞ்சப்பை' என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
பிளாஸ்டிக்குக்கு 'Good Bye':
வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே உபயோகப்படுத்திவிட்டு தூக்கி வீசப்படும் நெகிழிப் பை மக்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகிறது. இதனால், நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. எனவே தான் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கும் விதமாக 14 பொருட்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் தடை விதிக்கப்பட்டது.
தடையை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
மக்காத பிளாஸ்டிக் தாள்கள், டீ கப்புகள், கேரி பேக்குகள், தட்டுகள், பிளாஸ்டிக் கொடிகள், உறிஞ்சி குழல்கள் உள்ளிட்ட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இடையில் ஏற்பட்ட கொரோனா லாக்டவுன் காரணமாக இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் நெகிழிப் பைகளின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.
எனவே தான் தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைகளில் மீண்டும் தீவிரமாக இறங்கியுள்ளது. மக்களிடையே பிளாஸ்டிக் கேரி பேக்குகளின் பயன்பாட்டை குறைத்து துணிப்பைகளின் உபயோகத்தை ஊக்குவிக்கும் விதமாக ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்துள்ளார்.
இன்று முதல் ‘மீண்டும் மஞ்சப்பை’:
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாறாக, மாற்றுப் பொருட்களின் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், எம்பி தயாநிதி மாறன் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்ட வாரியத்தின் தலைவர் உதயன், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை:
’மீண்டும் மஞ்சள் பை' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை அடைகிறேன். மஞ்சள் பை கொண்டு வந்தால், 'வீட்டில் ஏதாவது விசேசமா? பத்திரிகை கொண்டு வந்திருக்கிறீர்களா?' என்று கேட்ட காலம் ஒன்று உண்டு. அதன்பிறகு, பிளாஸ்டிக் பை வந்து அதுதான் நாகரிகம் - மஞ்சள் பை வைத்திருப்பது கேவலம் என்ற ஒரு சூழல் உருவானது.
மஞ்சள் பை வைத்திருந்தாலே அவரை பட்டிக்காட்டான் என்று கிண்டல் செய்யக் கூடியவர்களும் உருவானார்கள். சினிமாவிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் கூட மஞ்சள் பையை கக்கத்தில் வைத்து ஒருவர் வந்தால் அவரை கிராமத்துக்காரர் என்று அடையாளம் காட்டுவதற்காக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
அழகான விதவிதமான பைகளை ஒவ்வொரு வணிக நிறுவனங்களும் தயாரித்து தங்களது போட்டிகளுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை வாங்குவதால் மஞ்சள் பையை எடுத்துச் செல்வது மக்கள் மத்தியிலும் குறைந்து விட்டது.
அந்த மஞ்சள் பைதான் சூழலுக்கு சுற்றுச்சூழலுக்கு சரியானது - அழகான - நாகரிகமான - பிளாஸ்டிக் பை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பது என்பதை பரப்புரை செய்தபிறகு இப்போது துணிப்பைகளைக் கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வுப் பயணம் ஆகும்.
இன்றைய நாள் வளர்ச்சிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அந்தளவுக்குச் சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு என்பது மனிதகுலத்தை மீளாத துயரத்தில் ஆழ்த்துவது.
* ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் இன்று சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. அதுதான் மண், நீர், காற்று என எல்லாவற்றையும் சீரழிக்கிறது.
* மண்ணில் போட்டால் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் மண் கெடுகிறது. மண் கெட்டால் வேளாண்மை பாதிக்கிறது. கால்நடைகளும் இவற்றை தின்று இறந்து போகின்றன.
* நீர் நிலைகளில் தூக்கி எறிந்தால் அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. நீர் மாசுபடக்கூடிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.
* ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கடல்சார் உயிரனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு மடிந்து போகின்றன.
* ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை எரிப்பதால் அதிலிருந்து டையாக்சின் வேதிப்பொருள் காற்றில் கலந்து, காற்று நஞ்சாகிறது! இதை சுவாசிக்கும் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகள், நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இத்தனை பாதிப்புகளை உருவாக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தியாக வேண்டும். இத்தகைய பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.
நாம் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது, உற்பத்தி செய்வது, ஓர் இடத்தில் சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, போக்குவரத்து மூலம் எடுத்துச்செல்வது, விற்பனை செய்வது ஆகியவை தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கும் தன்மையுள்ள இயற்கைக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடையை மீறினால் கடும் நடவடிக்கை பாயும்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடைகளை மீறினால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் சுட்டிக்காட்டி எச்சரித்தார். முதல்வர் தனது உரையில்,
“அரசு விதிகளை மீறி செயல்படுவோரின் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 130 தொழிற்சாலைகளுக்கு இதுவரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் அரசு செய்து வருகிறது.”
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என பல வகையிலும் விழிப்புனர்வு பிரச்சாரங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கிறது, அதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.
பேரங்காடிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களான இருக்கும் டாஸ்மாக் நிறுவனம், அறநிலையத் துறை, உணவு பாதுகாப்புத் துறை, பசுமை குழுக்கள், தேசிய பசுமைப் படை என அனைவரையும் அழைத்து ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
’பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பெருநகரங்களில் மண்டல மாநாடு நடத்தப்பட்டது. வாகன கண்காட்சி மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. சமூக வலைதளங்களில் இடைவிடாது பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
”அரசு மட்டும் நினைத்தால் இதனை செயல்படுத்த முடியாது எனத் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களும் இணைய வேண்டும் என்று அரசு உறுதியாக நம்புவதாக தெரிவித்தார். பிளாஸ்டிக் பொருள்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும், மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும்,” என்றும் தெரிவித்தார்.
அகத்தூய்மை வாய்மைக்கு! புறத்தூய்மை வாழ்வுக்கு! - என்ற வைர வரிகளை உருவாக்கிக் கொடுத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அந்த வழியை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என தமிழக மக்களுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, சுற்றுச்சூழலைக் காப்பதிலும் முன்னிலை வகிக்க வேண்டும். இயற்கையைக் காப்போம்! இயற்கையோடு இணைந்து, இயைந்து காப்போம்! இயற்கையைக் கெடுக்கும் பிளாஸ்டிக்குக் முற்றுப்புள்ளி வைப்போம்!
மஞ்சள் பை என்பதை யாரும் அவமானமாகக் கருத வேண்டிய அவசியமில்லை. சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப் பை தான் இந்த மஞ்சள் பை. அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம் என்று கூறி என் உரையை நிறைவு செய்தார்.
ட்ரென்டிங்கில் ‘மீண்டும் மஞ்சப்பை’ ஹேஷ்டேக்:
நெகிழிப்பை பயன்பாட்டை ஒழிக்கும் விதமாக இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ட்விட்டரில் #மீண்டும்_மஞ்சப்பை என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதில் நெட்டிசன்கள் பலரும் பிளாஸ்டிக்கிற்கு குட்பை சொல்லியும், தங்களது வீட்டில் உள்ள மஞ்சப்பையின் புகைப்படங்களை பகிர்ந்தும் தமிழக அரசின் விழிப்புணர்வு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.