பெண் தொழில் முனைவோர் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய அரசாங்கத் திட்டங்கள்!
இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் தொழில்முனைவு பயணத்தில் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளனர். தேசிய மற்ற சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்து ஜெயின், ஷாஹனாஸ் ஹுசைன், ஷில்பா ஷெட்டி என பல உதாரணங்களைக் குறிப்பிடலாம்.
பெண்கள் இவ்வாறு வெற்றியாளர்களாக மிளிர்வதைக் கவனித்த அரசாங்கம் பெண் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் எண்ணற்ற திட்டங்களை வழங்குகிறது. இவற்றை பெண்கள் எளிதாக அணுகி பலனடையலாம். அத்தகைய சில திட்டங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன
உத்யோகினி திட்டம்
பெண் தொழில்முனைவோர் என்பதே இதன் பொருள்.
பெண்கள் வணிகத்தில் ஈடுபட ஊக்குவித்து தற்சார்புடன் இருக்க உதவவேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டம் பெண்கள் மேம்பாட்டு கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்கள் மற்றும் நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ள பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கிறது. அவர்களுக்கு நிதி ரீதியான ஆதரவளித்து உதவுவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் அவர்கள் வணிக முயற்சியில் ஈடுபட்டு அவர்களது வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.
உத்யோகினி திட்டம் எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து பிரிவினைச் சேர்ந்த பெண்களுக்கும் வட்டியில்லா கடன் வழங்குகிறது.
ஒவ்வொரு மாவட்டத்தின் நகராட்சி கிளையிலும் கடனுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். மளிகை, பேக்கரி, ஊறுகாய் வணிகம் போன்ற 88 வகையான சிறு வணிகங்களுக்கு வட்டியில்லா கடனுக்கான ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
அன்னபூர்ணா திட்டம்
முதியோர்களின் உணவு பாதுகாப்புத் தேவையைப் பூர்த்திசெய்வதே அன்னபூர்ணா திட்டத்தின் நோக்கமாகும்.
தேசிய முதியோர் பென்ஷன் திட்டத்தில் சேராதவர்கள் இதில் பலனடையலாம். இத்திட்டம் 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி தொடங்கப்பட்டது.
65 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய முதியோர் இந்தத் திட்டத்தில் பலனடையலாம். இதில் 20 சதவீதம் பேரை இத்திட்டத்தின்கீழ் கொண்டு வந்து NOAPS-ன் கீழ் ஓய்வூதியம் பெறவைப்பதே இதன் இலக்காகும். இதன் பயனாளிகளுக்கு மாதம்தோறும் 10 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படும்.
பேக் செய்யப்பட்ட உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகள் போன்றவற்றை விற்பனை செய்ய கேட்டரிங் வணிகத்தைத் தொடங்க விரும்பும் பெண் தொழில்முனைவோருக்கும் இத்திட்டம் பொருந்தும். இதற்கான பாத்திரங்கள், உணவுப்பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்குத் தேவையான தொகை கடனாக வழங்கப்படும்.
தேனா சக்தி திட்டம்
இது பொதுத்துறை வங்கி திட்டமாகும். இத்திட்டம் பெண்களுக்கான பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. பெண் தொழில்முனைவோர் வணிகக் கடன் பெறுவதற்கான தளத்தை வங்கி உருவாக்குகிறது. செயல்பாட்டு மூலதனத்திற்கோ வணிக விரிவாக்கத்திற்கோ உதவும் வகையில் இதன் வணிகக் கடன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டங்களில் கல்வி, சில்லறை வர்த்தகம், குறு மற்றும் சிறு உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. விவசாய கடன் தொகை 20 லட்சம் வரை வழங்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு பிரிவிற்கும் கடன் வழங்குவதற்கான விதிமுறைகள் மாறுபடும்.
வணிக நிறுவனத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உரிமை கொண்ட பெண் தொழில் முனைவோர் தேனா சக்தி திட்டத்திற்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். பெண் தொழில்முனைவோருக்கு சலுகை முறையில் 0.25 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.
முத்ரா யோஜனா திட்டம்
முத்ரா யோஜனா திட்டம் கடன் வழங்கி பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
பெண்கள் புதிய வணிக முயற்சியைத் தொடங்க ஆதரவளிக்கிறது. இதற்கான நிதியுதவு அளிக்க ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுகிறது.
இதில் மூன்று பிரிவுகளின்கீழ் கடன் வழங்கப்படுகிறது:
- சிஷு – இதன் மூலம் 50,000 ரூபாய் வரை கடன் பெறலாம். ஆரம்பகட்டத்தில் இருக்கும் வணிகங்கள் இத்திட்டத்தில் பலனடையலாம்.
- கிஷோர் – இதன் மூலம் 50,000 ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம். மிகப்பெரிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் இதில் பலனடையலாம்.
- தருண் – இதன் மூலம் பத்து லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம். விரிவாக்கப் பணிகள்குக்காக கூடுதல் நிதி தேவைப்படுகிற, ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் இதில் பலனடையலாம்.
யூகோ மகிளா பிரகதி தாரா திட்டம் (UCO Mahila Pragati Dhara Scheme)
பெண் தொழில் முனைவோருக்கு சக்தியளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். உற்பத்தியை நிர்வகிக்க இத்திட்டத்தின்கீழ் எளிய முறையில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
தவணை கடன் அல்லது செயல்பாட்டு மூலதனத்திற்காக 2 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக 25 லட்ச ரூபாய் வரை வழங்கப்படுகிறது. சமீபத்திய வணிக நடவடிக்கைகளை அமைக்கவோ அல்லது விரிவாக்கத்திற்கோ இத்திட்டத்தின்கீழ் பலனடையலாம்.
இரண்டு லட்ச ரூபாய் வரை எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. இரண்டு லட்ச ரூபாய்க்கு அதிகமாகவும் 25 லட்ச ரூபாய் வரையிலுமான கடன்தொகைக்கு 15% லாபம் வழங்கப்படவேண்டும்.
TREAD திட்டம்
இத்திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படுவதுடன் சிறப்பு பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
கடன் வழங்கும் நிறுவனத்தால் மதிப்பிடப்பட்ட மொத்த திட்ட மதிப்பிலிருந்து 30 சதவீதம் அரசு மானியமாகும். மீதமுள்ள 70 சதவீதத் தொகைக்கான ஆதரவை இந்நிறுவனங்கள் அளிக்கும்.
ஏழைப்பெண்களை கடன் சென்றடைவதில் பல்வேறு தடைகள் உள்ளன. அவர்களது நிலை குறித்தும் அவர்களுக்கு தேவைப்படும் ஆதரவு குறித்தும் போதுமான தரவுகள் இல்லை. எனவே அத்தகைய பெண்கள் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் அணுகப்பட்டு கடன் வழங்கப்படும்.
செண்ட் கல்யாணி திட்டம் (Cent Kalyani Scheme)
செண்ட் கல்யாணி திட்டத்தை செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தொடங்கியுள்ளது. பண்ணை, உள்ளூர் வர்த்தகம் என பல்வேறு பகுதிகளில் செயல்படும் பெண் தொழில்முனைவோர் இத்திட்டத்தின் மூலம் பலனடையலாம். இத்திட்டத்தின்கீழ் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். எந்தவித உத்தரவாதமும் அவசியமில்லை.
பெண் தொழில்முனைவோர் புதிதாக திட்டம் துவங்கவோ ஏற்கெனவே செயல்படும் தொழிலை மேம்படுத்தவோ ஆதரவளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
கடன் மீதான வட்டி விகிதம் சந்தை விலைக்கேற்ப மாறுபடும். கிராமப்புறங்களில் தொழில் புரியும் பெண்கள், குடிசைத்தொழில், விவசாயம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள், எம்எஸ்எம்ஈ போன்றவற்றில் ஈடுபட்டுள்ள பெண்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு எம்எஸ்எம்ஈ பதிவு அவசியம்.
18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். பெண் தொழில் முனைவோருக்கு தொடர்ந்து நிலையாக வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதே செண்ட் கல்யாணி திட்டத்தின் நோக்கமாகும்.
பெண் தொழில் முனைவோர் தங்களது வணிக முயற்சியில் சிறப்பிக்க அனைத்து திட்டங்களையும் குறித்து தெரிந்துகொள்வது அவசியம். அரசாங்கம் எப்போதும் அவர்களுக்கு ஆதரவான சூழலை அமைத்துத் தருகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ருஷ்டி ஜெயின் | தமிழில்: ஸ்ரீவித்யா