உன்னத நோக்கிற்கு அதிகாலை உணவுக் கடை நடத்தி நிதி திரட்டும் எம்பிஏ பட்டதாரி தம்பதி!
பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இந்த ஜோடி, அதிகாலை 4 மணிக்கு உணவுக்கடை அமைத்து தங்கள் வீட்டில் பணிபுரியும் பெண்மணிக்காக நிதி திரட்டுகின்றனர்.
வறுமை பிரச்சனைக்கும் அடிப்படை சுகாதார பராமரிப்பை அணுக முடியாத சூழலுக்கும் தீர்வுகாண அரசாங்கத்துடன் பல்வேறு தனிநபர்களும் அரசு சாரா நிறுவனங்களும் கைகோர்த்து செயல்படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண முன்வந்துள்ளனர் மும்பையைச் சேர்ந்த தம்பதி.
இவர்கள் எம்பிஏ பட்டதாரிகள். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இந்த குஜராத்தி தம்பதி மும்பையின் கண்டிவளி ரயில் நிலையத்திற்கு வெளியே காலை 4 மணிக்கு உணவுக்கடையை அமைத்து அவல் உப்மா, பராத்தா, இட்லி போன்ற உணவு வகைகளை விற்பனை செய்கின்றனர்.
அஷ்வினி ஷெனாய் ஷா தனது கணவருடன் இணைந்து இந்தக் கடையை வைத்துள்ளார். இவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணி 55 வயது மதிக்கத்தக்கவர். இவரது கணவருக்கு பக்கவாத பாதிப்பு உள்ளது. எனவே அந்தப் பெண்மணிக்கும் அவரது கணவருக்கும் உதவ அஷ்வினியும் அவரது கணவரும் உணவுக்கடை அமைத்துள்ளதாக ’தி லாஜிக்கல் இண்டியன்’ தெரிவிக்கிறது.
தீபாலி பாட்டியா என்பவர் இவர்களது உணவுக்கடையில் உணவருந்தியுள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு இந்த தம்பதி மக்களிடையே பிரபலமாயினர்.
”எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் மும்பை நகரில் தன்னலமின்றி மற்றவர்கள் நலனில் அக்கறை காட்டும் இரண்டு சூப்பர்ஹோரோக்கள் உள்ளனர். அக்டோபர் மாதம் 2-ம் தேதி அதிகாலை நேரத்தில் சாப்பிட உணவு தேடிக்கொண்டிருந்தேன். கண்டிவாளி ரயில் நிலையத்திற்கு வெளியே ஒரு சிறிய உணவுக்கடையைப் பார்த்தேன். அங்கு அவல், உப்மா, பராத்தா, இட்லி போன்ற உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன. விற்பனை செய்பவர்களைப் பார்த்தபோது குஜராத்தி குடும்பமாக இருக்கலாம் என்று தோன்றியது.
”உணவை ருசி பார்த்தபிறகு எதற்காக சாலையில் உணவு விற்பனை செய்கின்றனர் என்று கேட்டேன். அவர்களது பதிலைக் கேட்டதும் இரக்கக் குணம் நிறைந்த அவர்களது செயலை நினைத்து மனமுருகிப் போனேன்,” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவிற்கு இதுவரை 11,000க்கும் அதிகமான விருப்பக் குறியீடுகள் கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் 4,800-க்கும் அதிகமான முறை பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது என ’நியூஸ் 18’ தெரிவிக்கிறது.
”மிகச்சிறந்த செயல். உங்களுக்குத் தலைவணங்குகிறோம்...” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கட்டுரை: THINK CHANGE INDIA