ட்விட்டரில் வைரலான மும்பை கான்ஸ்டபிள் செய்த உதவி!
மும்பையின் கண்டிவாலி பகுதியில் வசிக்கும் ராஜ்தீப் கஜ்ஜரின் வாகனம் பெட்ரோல் இன்றி நெடுஞ்சாலையில் நின்றுபோனது. ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த நவி மும்பை காவலர் இவருக்கு உதவியுள்ள சம்பவம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
சாலையில் சென்று கொண்டிருக்கும்பொது திடீரென்று எரிபொருள் இல்லாமல் வாகனம் நின்று போவது ஒரு மோசமான அனுபவமாகவே இருக்கும். இத்தகைய சூழல் பகலிலேயே மோசமான அனுபவமாக இருக்குமெனில் இரவில் நடந்தால்? தனியாக இருளில் எரிபொருள் நிரப்பும் பகுதியைத் தேடுவது பாதுகாப்பற்றது. ஏதேனும் உதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் அதே இடத்தில் காத்திருப்பதும் நம்பிக்கையற்ற உணர்வையே ஏற்படுத்தும்.
மும்பையின் கண்டிவாலி பகுதியில் வசிக்கும் ராஜ்தீப் கஜ்ஜர் அத்தகையச் சூழலை சந்திக்க நேர்ந்தது. சமீபத்தில் இவர் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் மஹாராஷ்டிராவின் தேசிய நெடுஞ்சாலை 348-ல் சென்றுகொண்டிருந்தபோது இவரது வாகனத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டது.
JNPT அருகே உள்ள பான்வெல் பகுதியை இணைக்கும் சாலையான பாம் பீச் பகுதியை அடைந்தபோதே ராஜ்தீப் எரிபொருள் இண்டிகேட்டரை கவனித்ததாக ’ட்ரிப்யூன்’ குறிப்பிடுகிறது.
ஆனால் அதிர்ஷ்ட்டவசமாக ரோந்துப் பணியில் இருந்த கான்ஸ்டபிள் ஒருவரை சந்தித்தார். அவர் ராஜ்தீப்பிற்கு உதவியுள்ளார். நெடுஞ்சாலையில் சில காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருப்பதை ராஜ்தீப் கவனித்தார். அருகில் உள்ள பெட்ரோல் ஸ்டேஷன் குறித்து அவர்களிடம் விசாரித்துள்ளார். ஆறு கிலோமீட்டர் தொலைவிலேயே பெட்ரோல் ஸ்டேஷன் இருப்பதைத் தெரிந்துகொண்டார். அவரது வாகனத்தில் 500-600 மில்லி லிட்டர் பெட்ரோல் மட்டுமே இருந்ததால் அந்தப் பகுதியை தனது வாகனத்தில் சென்றடைவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார் என ’இண்டியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.
ராஜ்தீப்பின் நிலையைக் கண்ட நவி மும்பை காவல்துறையைச் சேர்ந்த காவலரான சோம்நாத் காகட் தனது சொந்த பைக்கில் இருந்து சிறிதளவு பெட்ரோல் வழங்கி உதவ தீர்மானித்தார்.
ராஜ்தீப் இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துகொண்டபோது,
“நான் அருகில் இருக்கும் பெட்ரோல் ஸ்டேஷன் குறித்து விசாரிக்க வாகனத்தை நிறுத்தினேன். மேப் கொண்டு பார்த்தபோது அருகில் எதுவும் தென்படவில்லை. அவர் தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை என்னுடன் பகிர்ந்துகொண்டார். பின்னர் காலி பாட்டிலில் பெட்ரோல் சேகரித்துக் கொடுத்தார். இதற்காக பணம் ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை,” என்றார்.
அவர் மேலும் கூறும்போது,
“போக்குவரத்தைக் கட்டும்படுத்தும் பணியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மும்பை காவல்துறையினர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆனால் இந்த கோடை வெயிலில் அவர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொண்டதற்கு நன்றி பாராட்ட விரும்புகிறேன். நான் நடுவழியில் தவித்துக்கொண்டிருந்த போது திரு.சோம்நாத் காகட் தன்னுடைய வாகனத்திலிருந்து பெட்ரோல் கொடுத்து தன்னலமின்றி செய்த உதவிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என குறிப்பிட்டார்.
தற்போது இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருவதை அடுத்து அந்த கான்ஸ்டபிளை மும்பை காவல்துறை பாராட்டியுள்ளது.
கட்டுரை : THINK CHANGE INDIA