வங்கி வேலை கிடைக்கலனா என்ன; டீக்கடை நடத்தி வெற்றி பெற்ற ‘கிராஜுவேட் சாய்வாலி’
கிராஜுவேட் சாய்வாலி என அழைக்கப்படும் பிரியங்கா குப்தா, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாட்னா பெண்கள் கல்லூரி எதிரில் டீக்கடையை துவக்கினார். நான்கு மாதங்களில் இரண்டாவது டீக்கடை துவங்கி ரூ.1.5 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார்.
“டீக்கடை துவக்குவது புதிதல்ல. பலரும் இதை செய்கின்றனர். ஆனால், ஒரு பெண், குறிப்பாக பொருளாதார பட்டதாரி, டீ விற்பது சகஜமானது இல்லை. அது தான் என்னை பிரபலமாக்கியதோ என்னவோ,” என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் கூறுகிறார் கிராஜுவேட் சாய்வாலி என அழைக்கப்படும் பிரியங்கா குப்தா.
பீகாரின் பாட்னாவில் உள்ள பெண்கள் கல்லூரி எதிரே ஏப்ரல் மாதம் அவர் சிறிய டீக்கடை துவக்கினார். நான்கு மாதங்களில் இரண்டாவது கடை துவங்கி, தினமும் 400 கோப்பை டீ விற்பனை செய்து ரூ.1.5 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார். அண்மையில், திரைப்பட படப்பிடிப்பிற்காக பீகார் வந்திருந்த நடிகர் விஜய் தேவர்கொண்டா, பிரியங்கா டீக்கடைக்கும் வருகை தந்தார்.
இந்த பொருளாதாரம் பட்டதாரி டீக்கடை துவங்கியது ஏன்?
வெற்றி வழி
பீகாரின் பூரினியாவைச்சேர்ந்த பிரியங்கா, வாரனாசியில் உயர் கல்வி முடித்தார். எல்லா பட்டதாரிகள் போல அடுத்து என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தார்.
“வங்கித்தேர்வு எழுதுமாறு வீட்டில் கூறினர். எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழியில்லாமல் இதற்கு தயாராகத் துவங்கினேன்” என்கிறார் பிரியங்கா.
இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரால் தேர்வில் வெற்றி பெறமுடியவில்லை.
“நான் மத்தியதர குடும்பத்தைச்சேர்ந்தவள், மேலும் பீகாரில் ஒரு பெண் தனது வேலை இலக்கு பற்றி பெற்றோரிடம் பேசி புரிய வைப்பது அல்லது சுதந்திரமாக இருப்பது கடினம். எல்லோரும் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பினர். ஆனால் என் தந்தையிடம் வங்கித்தேர்வுக்கு தயாராக ஓராண்டு அவகாசம் கேட்டேன். அவரும் ஒப்புகொண்டார்,” என்கிறார்.
ஓராண்டு அவகாசம் கிடைத்த நிலையில், அவரது மனதில் வேறு திட்டம் இருந்தது. அவர் டீக்கடை ஒன்று துவங்க விரும்பினார். ஆனால், இதற்கு வேறு நகருக்கு செல்ல வேண்டியிருந்தது. பெரும்பாலானோர் தேர்வுக்கு பயிற்சி பெற செல்வது போல, அவரும் தலைநகர் பாட்னா செல்ல தந்தையிடம் அனுமதி பெற்றார்.
“பூர்னியா அல்லது வாரனாசியில் என்னால் டீக்கடை திறக்க முடியவில்லை. ஏனெனில் குடும்பத்தினர், உறவினர்கள் இருந்தனர். எனவே யாரும் தெரியாத பாட்னா தான் பாதுகாப்பானது என தீர்மானித்தேன்,” என்கிறார்.
பிரியங்காவிடம் பணம் குறைவாக இருந்தாலும், பெற்றோரிடம் இருந்து பணம் பெற்று நகரில் தங்கினார். ஒரு பயிற்சி மையத்தில் ஆலோசகராக சேர்ந்தாலும், அவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இறுதியில் நண்பர்களிடம் இருந்து ரூ.30,000 கடன் வாங்கி வர்த்தகத்தை துவக்கினார்.
வெற்றி படி
கையில் இருந்த பணத்தில் ஒரு சிறிய தள்ளுவண்டி வாங்கி, பெண்கள் கல்லூரி எதிரே டீக்கடை அமைத்தார். தன்னுடைய கடைக்கு ’கிராஜுவட் சாய்வாலி’ என பெயர் வைத்தார்.
முதல் நாள் அன்று, பரோடா வங்கி அதிகாரி அவரது கடைக்கு வந்து பல கேள்விகளை கேட்டார். பட்டதாரியான நீ ஏன் வேலைக்கு செல்லாமல் இருக்கிறாய் என கேட்டார். எனக்கு வேலை கிடைக்கவில்லை, சொந்தமாக தொழில் துவங்கினேன் என்று பதில் அளித்தார். அவர் எதுவும் பேசாமல் புன்னகைத்த படி சென்றுவிட்டார்.
மெல்ல மக்கள் வரத்துவங்கினர். ஒரு தொலைக்காட்சி சேனலிலில் செய்தி வெளியிட்டனர். அந்த நேர்காணல் என் வாழ்க்கையை மாற்றியது என்கிறார் பிரியங்கா. மக்கள் மற்றும் மீடியா ஆதரவால் வர்த்தகம் வளர்ந்தது என்கிறார். கோடைக்காலம் என்பதை மீறி அவர் ரூ.1.5 லட்சம் லாபம் ஈட்டி, இரண்டாவது டீக்கடை துவங்கியுள்ளார்.
தினமும் 300- 400 கோப்பை டீ விற்பனை செய்கிறார். ஏலக்காய் டீ, சாக்லெட் டீ உள்ளிட்ட நான்கு வகை டீ வைத்துள்ளார்.
எதிர்காலத் திட்டம்
இந்தியா தேநீர் பருகும் தேசம். சாய் பாயிண்ட் மற்றும் சயோஸ் போன்ற நிறுவனங்கள் வேகமாக வளர்ந்துள்ளன. சாய் சுட்டார் பார், தி டீ பாக்டரி, எம்பிஏ சாய்வாலா போன்ற நிறுவனங்களும் கவனத்தை ஈர்த்துள்ளன.
நாடு காபி மற்றும் டீ விற்பனை நிலையங்களுக்கான பத்தாவது வேகமாக வளரும் சந்தையாக உள்ளது. 2018 ல் இதன் மதிப்பு, ரூ.2570 கோடி என யூரோமானிட்டர் இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. டீக்கடை அமைப்பதில் உள்ள சவால்கள் தவிர, ஆரம்ப நாட்களில் நகராட்சியில் இருந்து நிர்வாக சவால்களையும் எதிர்கொண்டார்.
ஆனால், சவால்களை மீறி, லாபம் ஈட்டி, இராண்டவது கடையை திறந்திருப்பவர், மூன்றாவது கடையை திறக்க திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டில் பிரான்சைஸ் அடிப்படையில் செயல்பட திட்டமிட்டுள்லார். தள்ளுவண்டி, கடை மற்றும் கபே மாடலை செயல்படுத்த உள்ளார்.
“விரிவாக்கம் செய்தால் மக்கள் அதன் மூலம் பலன் பெற வேண்டும். வர்த்தகம் துவங்க அதிக பணம் இல்லாவதர்களும் வர்த்தகம் துவங்க ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த வர்த்தகத்தை நிறுத்தாமல் தொடர விரும்புகிறேன்,” என்கிறார்.
ஆங்கிலத்தில்: பாக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்